புதுடில்லி, நவ. 12 – ஹிந்து மதத்தை பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களை வகுக்க ஒன்றிய அரசுக்கு உத்தர விடக்கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் 10.11.2023 அன்று தள்ளுபடி செய்தது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர், உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், நம் நாட்டில் ஹிந்து மதத்தை பாதுகாக்க வழிகாட்டுதல்களை வகுக்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தர விடக் கோரி இருந்தார்.
இந்த மனு, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:
நீங்கள் ஒரு விஷயத்தை செய்துவிட்டு அதுகுறித்து பிரசாரம் செய்தால், உங்களை யாரும் தடுக்கப் போவ தில்லை. ஆனால், நீங்கள் நினைப்பதை அனைவரும் செய்ய வேண்டும் என நீங்கள் கூற முடியாது.
நீங்கள் இன்றைக்கு வைக்கும் கோரிக்கையை போல, இசுலாம் மற்றும் கிறித்துவ மதங்களை பாதுகாக்க வழிகாட்டுதல்களை வகுக்கும்படி வேறு சிலர் கோரிக்கை வைக்கலாம். எனவே, உங்கள் கோரிக்கை ஏற்புடையது அல்ல. உங்கள் மனு தள்ளு படி செய்யப்படுகிறது.
-இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.