பெங்களூரு, ஜூன் 25 கருநாடகா வில் வீட்டு வசதி திட்டத்தில் சிறு பான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளது.
கருநாடக முதலமைச்சர் சித்த ராமையா தலைமையில் அண்மையில் பெங்களூருவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியதாவது:
போதுமான வீடுகள் கிடைப்பதில்லை
கர்நாடக வீட்டு வசதி திட்டங் களில் முஸ்லிம், கிறிஸ்தவர், பவுத்தர் உள்ளிட்ட அனைத்து மத சிறுபான் மையினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சிறுபான்மையினருக்கு போதுமான வீடுகள் கிடைப்பதில்லை. எனவே சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 10 சதவீ தத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்ட திருத்த மசோதாவும் தயாரிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்தார்.
இதுகுறித்து கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறும் போது, “கர்நாடகாவில் வசிக்கும் சிறு பான்மையினரில், வீடில்லாத ஏழை மக்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கு நகர்ப்புறங்களில் ஒதுக்கப்படும் வீட்டு திட்டங்களில் போதிய வீடுகள் கிடைப்பதில்லை. மண்டியா, ஹாசன் போன்ற ஊரகப் பகுதிகளில் ஒதுக்கப்படும் வீடுகளில் குடியேற ஆட்கள் இருப்பதில்லை. தற்போது சிறுபான்மை யினருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப் பட்டுள்ளதால், அம்மக்களுக்கு வீடுகள் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.
ஒன்றிய அமைச்சரின் புலம்பல்
இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:
கருநாடக அரசு முஸ்லிம் வாக்கு வங்கியை குறிவைத்து இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. ஏற்கெனவே அரசின் ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது வீட்டு வசதி திட்டங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இதர பிரிவினர் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் வீடில்லாமல் தவிக்கும்போது, அரசு முஸ்லிம்களுக்கு வீட்டை வழங்கி வருவது நியாயமற்றது.
இவ்வாறு ஒன்றிய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
அரசியல் செய்வதே வாடிக்கை
இதற்கு கருநாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா பதிலளிக் கையில், “ஒன்றிய அரசின் வீட்டு வசதி திட்டங்களில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனை நாங்கள் பின்பற்றினால் பாஜகவினர் எதிர்க்கின்றனர். எல்லா வற்றிலும் அரசியல் செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்” என்றார்.