மதுரை, ஜூன் 25 மத மோதலை தூண்டும் வகையில் பேசியது தொடர் பான வழக்கில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, காவல்துறை விசார ணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தர விட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை நோட்டீசுக்கு எதிரான அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியது. இதில், வெறுப்புணர்வு, கலவரத்தை தூண்டும் வகையில் பேச கூடாது, முழக்கங்கள் எழுப்ப கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
விசாரணை நடத்த உத்தரவு
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா பேசினார். அவரது பேச்சு, மத மோதலுக்கு தூண்டுதலாக இருந்ததாகவும், நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாகவும் எச்.ராஜா மீது மதுரை சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக எச்.ராஜாவுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீமன்றத்தில் எச்.ராஜா மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறையின் நோட்டீசை ரத்து செய்ய முடியாது. நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு அதிகாரம் இல்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி ெசய்யப்படுகிறது. மனுதாரர் காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகி உரிய ஒத்துழைப்பு தரவேண்டும், என்று உத்தரவிட்டார்.