சமூகநீதியில் பெற்றதைவிட, பெறவேண்டியது அதிகம் – அதை நோக்கி நாம் செல்லவேண்டும் என்பதுதான் வி.பி.சிங் பிறந்த நாளில், நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய சூளுரை! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

viduthalai
3 Min Read

சென்னை, ஜூன் 25–  சமூகநீதியில் பெற்றதைவிட, பெற வேண்டியது அதிகம். அதை நோக்கி நாம் செல்லவேண்டும் என்பதுதான், வி.பி.சிங் அவர்களுடைய பிறந்த நாளில், நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய சூளுரையாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மறைந்த சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுடைய பிறந்த நாளான இன்று (25.6.2025) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

இந்திய வரலாற்றில் ஒரு ஒப்புவமையற்ற பிரதமர் வந்தார் என்று சொன்னால், அது சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள்தான்.

காரணம் என்னவென்று சொன்னால், முழுக்க முழுக்க அவர், அந்தப் பதவிக்கு மிகத் தகுதியானவர்.

பிளாட்டோ ஒருமுறை தன்னுடைய ஆய்வு நூலான ‘ரிபப்ளிக்’கில், பதவிக்கு யார் தகுதியானவர்? என்கிற ஒரு கேள்வியைக் கேட்டு, அதற்கு ஒரு பதிலும் சொன்னார்.

இது நீண்ட காலமாக வரலாற்றில் பதிவாகி இருக்கின்ற செய்தியாகும்.

‘‘யார் பதவியை விரும்பாதவர்களோ, அவருக்குத்தான் அந்த முழுத் தகுதி இருக்கிறது’’ என்று சொன்னார்.

அதுதான்,வி.பி.சிங் அவருடைய வரலாற்றில், எந்த அரசியல்வாதியிடமும் கண்டுபிடிக்க முடியாத ஒன்று.

பிரதமர் பதவியை இரண்டாவது முறை
ஏற்க மறுத்தவர்!

இரண்டாவது முறை, அய்க்கிய முற்போக்கு   ஜனநாயக முன்னணி, அமைத்த கூட்டணியில், இந்தியாவில் உள்ள அத்துணைத் தலைவர்களும், வி.பி.சிங் அவர்களைத் தேடி, நாடிச் சென்று, ‘‘நீங்கள்தான் பிரதமராக வரவேண்டும்’’ என்று அவரை வற்புறுத்தினார்கள்.

ஆனால், அவர் அந்தப் பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

மீண்டும் மீண்டும், வற்புறுத்துவதற்காக இவரை சந்திக்க முயல்கிறார்கள் என்று இவருக்குத் தெரிந்தவுடன், பிரதமராக ஒருவரை தேர்ந்தெடுக்கும்வரை, இவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாத அளவிற்கு, ஓரிடத்திலே தன்னை மறைத்துக் கொண்டார். பிறகுதான் வெளியில் வந்தார்.

மற்ற மாநிலங்களைவிட,
தமிழ்நாட்டில் அதிகமாக மதிக்கப்படுகிறார்

அந்த அளவிற்குப் பதவியை விரும்பாத, மக்கள் மன்றத்தின் தேவையை மட்டுமே கருதியவர். அதனால்தான், அவர் இன்றைக்கும், மற்ற மாநிலங்களைவிட, தமிழ்நாட்டில் அதிகமாக மதிக்கப்படுகிறார்.

சமூகநீதி மண்ணான, இந்தப் பெரியார் மண், திராவிட மண், அவரை சிறப்பாகக் கவுரவிக்க வேண்டும் என்ற நிலையில், கலைஞர் அவர்கள் காலத்திலிருந்து, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கங்கள் அவரிடத்தில் தனி ஈடுபாடு கொண்டிருந்ததோடு, மிகப்பெரிய அளவிற்கு, நாம் வைத்த வேண்டுகோளை ஏற்று, இன்றைக்குத் ‘திராவிட மாடல்’ ஆட்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற நம்முடைய முதலமைச்சர் அவர்கள், மாநிலக் கல்லூரி வளாகத்தில் இதோ இந்த அருமையான சிலையைத் திறந்தார்கள்.

இந்தியாவில் சிலை திறந்தது தமிழ்நாட்டில்தான்!

வி.பி.சிங் அவர்களுக்கு முதன்முறையாக இந்தியாவில் சிலை திறந்தது தமிழ்நாட்டில்தான் என்ற பெருமையும், அந்தச் சிலைக்கும் கீழே நாம் நின்று கொண்டிருக்கின்றோம் என்ற சிறப்பும் தனித்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

இன்றைய காலகட்டத்தில், அவருடைய பணி, அவருடைய தொண்டை தொடர வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனென்றால், அவர், 27 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொடுத்தாலும், அது ஒரு தொடக்கமே தவிர, அது ஒரு முடிவல்ல.

ஆகவேதான், அதனைத் தொடரவேண்டும் என்கின்ற எண்ணம், அவரை, அன்றைக்கு எதிர்த்தவர்கள், இன்றைக்கு அவருடைய கருத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

எனவேதான், சமூகநீதித் துறையில், மிக முக்கியமாக, நீதித் துறையில் சமூகநீதி. தனியார்த் துறையில், சமூகநீதி, இட ஒதுக்கீடு அவசியம்.

அதேபோல, 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்று அரசமைப்புச் சட்டத்தில் எந்தவிதமான தடையும் கிடையாது. செயற்கையாக நீதிமன்றங்களால் அது உருவாக்கப்பட்டது என்பதை வலியுறுத்திக் கொண்டு வருகின்ற காரணத்தினால், அதுவும் விரைவில் வெற்றி பெறவேண்டும்.

சமூகநீதியில் பெற்றதைவிட,
பெறவேண்டியது அதிகம்!

எனவே, சமூகநீதியில் பெற்றதைவிட, பெறவேண்டியது அதிகம். அதை நோக்கி நாம் செல்லவேண்டும் என்பதுதான், வி.பி.சிங் அவர்களுடைய பிறந்த நாளில், நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய சூளுரையாகும்.

இந்துக்களை ஒன்று சேர்ப்பது இருக்கட்டும்! முதலில் கூட்டணி ஒன்று சேர்ந்ததா?

செய்தியாளர்: மதுரையில் நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாட்டில், பெரியார், அண்ணா ஆகியோரை கொச்சைப் படுத்தும் வகையில்  செய்திகளை ஒளிபரப்பியிருக் கிறார்களே, அதுகுறித்து உங்கள் கருத்து?

தமிழர் தலைவர்: ‘‘ஹிந்துக்களை ஒன்று சேர்க்கிறோம்’’ என்று சொன்னார்கள். அது பிறகு இருக்கட்டும்; அவர்களுடைய கூட்டணியே முதலில் ஒன்று சேர்ந்ததா, இல்லையா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *