சாங்கிலி, ஜூன் 25 மகாராட்டிராவில், ‘நீட்’ மாதிரித்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த பிளஸ் – 2 மாணவியை, தந்தையே பிரம்பால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராட்டிராவின் சாங்கிலி மாவட்டத்தின் அட்பாடி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி முதல்வர் தொண்டிராம் பக்வான் போன்ஷ்லே, 50. இவரது மனைவி ப்ரீத்தி.
இந்த தம்பதியின் மகள் சாதனா, 17. பத்தாம் வகுப்பில், 92 சதவீத மதிப்பெண்கள் பெற்று தற்போது பிளஸ் – 2 படித்து வந்தார். இந்நிலையில், மருத்துவ படிப்பில் சேர விரும்பி நீட் தேர்வுக்கு தயாரானார்.
இதையடுத்து, கடந்த 20ம் தேதி நடந்த நீட் மாதிரித்தேர்வில் சாதனா குறைந்த மதிப்பெண் எடுத்ததால், அவரை தந்தை போன்ஷ்லே பிரம்பால் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த சாதனாவை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்த தால், மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சாதனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதுகுறித்து தாய் ப்ரீத்தி புகார் அளித்ததை அடுத்து, தந்தை போன்ஷ்லேவை காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.