புதுடில்லி, ஜூன்.24 டில்லியில் விமான எரிபொருளை நூதன முறையில் 3 ஆண்டுகளாக திருடி மோசடியில் ஈடுபட்ட கும்பல் பிடிபட்டு உள்ளது.
டில்லியை ஒட்டி அரியானா மாநிலத்தின் பகதுர்கார் பகுதியில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு டெப்போ உள்ளது. இங்கிருந்து டில்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு தேவையான எரிபொருள் டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.
லாரி டிரைவர்கள், எரிபொருள் விற்பனையாளர்களுடன் கைகோர்த்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் லாரிகளை முண்ட்கா பகுதியில் நிறுத்தப்பட்டு விமான எரிபொருள் திருடப்பட்டு உள்ளது. மோசடி கும்பல் கைதாகி உள்ளனர். அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் நாள்தோறும் 5 ஆயிரம் லிட்டர் வரை எரிபொருளை திருடி உள்ளனர். இதன் மூலம் தேசிய கருவூலத்துக்கு ஒரு மாதத்துக்கு ரூ.1.62 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
போலி சாவிகள் மூலம் டேங்கர்கள் திறக்கப்பட்டு எரிபொருள் திருடப்பட்டு உள்ளது. அளவு குறைவது தெரியாமல் இருப் பதற்காக போலி அளவீட்டு இரும்புகுச்சிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. விமான எரிபொருள் கடத்தப்பட்டுபேரல்களில் அடைத்து, மினரல் டர்பன்டைன் எண்ணெய் என்று விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இவற்றை மை மற்றும் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்தி உள்ளன.
22.6.2025 அன்று கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, 23.6.2025 அன்று சோதனை நடத்தியதில் 3 டேங்கர் லாரிகள் பிடிபட்டன. 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 ஆயில் டேங்கர்களில் விமான எரிபொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அங்கிருந்த வடிகுழாய்கள், டிரம்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த கடத்தல் தொடர்பாக குடோன் முதலாளி கயா பிரசாத் யாதவ் (வயது43) கைதானார். அவர் ஒரு லிட்டர் எரிபொருளை ரூ.30க்கு வாங்கி, ரூ.50க்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவர் முதலில் ஓட்டுநராக இருந்து பின்னர், தானே குடோன் போட்டு தொழில் செய்ய ஆரம்பித்து உள்ளார்.
மேலும் ராஜ்குமார் சவுதாரி (53), மற்றும் அஸ்பால் சிங் புல்லார் (53) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ராஜ்குமார் எரிபொருளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்று வந்தார். அஸ்பால் சிங் டேங்கர் லாரி உள்பட 8 லாரிகளை வைத்து தொழில் நடத்தி வந்தார். பிடிபட்ட 3 டேங்கர்கள் இவருடையதுதான். மேலும் 3 டிரைவர்கள் மற்றும், 2 உதவியாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் டிரைவர்கள் ஒரு டேங்கர் எரிபொருளை கடத்தி வர ரூ1500ம், உதவியாளர்கள் ரூ.700ம் ஊதியமாக பெற்றுள்ளனர்குற்றப்பிரிவு காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.