டெஹ்ரான். ஜூன் 24- அமெரிக்க போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
ஈரானிடம் 10-க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் தயாரிக்க தேவை யான யுரேனியம் இருப்பதாக கணக் கிடப்பட்டுள்ளது. ஈரானிடம் உள்ள யுரேனியம் தற்போது 87 சதவீதம் அளவுக்கு செறிவூட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. யுரேனி யத்தை சுமார் 90 சதவீதம் அளவுக்கு செறிவூட்டினால் அணுகுண்டு களை தயாரிக்க முடியும்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை பல மாதங்கள் நீடித்தும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்த சூழலில், அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் கடந்த 13ஆம் தேதி ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தியது. 40-க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானின் நடான்ஸ் நகரில் பூமிக்கு அடியில் செயல்பட்ட அணுசக்தி தளம் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தின.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி மய்யம், இஸ்பகான் நகரில் உள்ள அணுசக்தி தொழில்நுட்ப மய்யம், அராக் நகரில் உள்ள கனநீர் அணு உலை மய்யம் ஆகி யவை மீதும் சக்திவாய்ந்த குண்டு கள் வீசப்பட்டன. இஸ்ரேலின் தாக் குதலில் ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகள் 14 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக, ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து, இஸ்ரேல் -ஈரான் இடையே கடும் போர் மூண்டது. இரு நாடுகளும் கடந்த 10 நாட்களாக அதிதீவிர போரில் ஈடுபட்டு வருகின்றன.
ஈரானின் போர்டோ நகரில் மலைக்கு அடியில் சுமார் 90 மீட் டர் ஆழத்தில் அணுசக்தி தளம் செயல்பட்டு வந்தது. இது ஈரானின் அணுசக்தி கோட்டை என்று அழைக்கப்பட்டது.
இந்த தளம் மீது சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. ஆனால், மலைக்கு அடியில் அணுசக்தி தளம் இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
‘பூமியை துளைக்கும் சக்தி வாய்ந்த அமெரிக்க ராணுவத்தின் ஜிபியு-57 பங்கர் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினால் மட்டுமே போர்டோ அணுசக்தி தளத்தை அழிக்க முடியும்’ என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’
இந்த சூழலில், ஈரான் மீது அமெரிக்கா நேற்று (22.6.2025) நேரடி தாக்குதலில் ஈடுபட்டது. ‘ஆபரேஷன் மிட் நைட் ஹேமர் (Operation Midnight Hammer) என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க விமானப் படையின் பி-2 ரகத்தை சேர்ந்த 7 போர் விமானங்கள் நேற்று அதிகாலை ஈரானின் போர்டோ அணுசக்தி தளத்தை குறிவைத்து ஜிபியு-57 பங்கர் ரக வெடிகுண்டுகளை வீசின. ஒவ்வொரு விமானமும் தலா 2 குண்டுகள் என மொத்தம் 14 குண்டுகளை வீசின. இவை 90 மீட்டர் ஆழத்துக்கு பூமியை துளைத்து சென்று, வெடித்து சிதறின. இதில், போர்டோ அணுசக்தி தளம் முற்றிலுமாக சேதமடைந்தது.
ஈரானின் நடான்ஸ், இஸ்பகான் நகரங்களில் உள்ள அணுசக்தி தளங்கள் மீதும் பி-2 போர் விமானங்கள், ஜிபியு-57 பங்கர் வெடிகுண்டுகளை வீசின.
அதேநேரம், சுமார் 400 மைல் தூரத்தில் கடலுக்கு அடியில் முகாமிட்டிருந்த அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து 30 டோமஹாக் ரக ஏவுகணைகள் சீறி பாய்ந்தன. இந்த ஏவுகணைகளும் நடான்ஸ், இஸ்பகான் அணுசக்தி தளங்களை அடுத்தடுத்து தாக்கின. அமெரிக்க போர் விமானங்கள், நீர்மூழ்கிகளின் தாக்குதல்களால் ஈரானின் 3 அணுசக்தி தளங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.