சென்னை, ஜூன் 24- சென்னை கிண்டியில் ரூ.487.66 கோடியில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயர்சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு
சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், ரூ.487.66 கோடியில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயர்பன்னோக்கு மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கான இடம் தேர்வு, கட்டுமானப் பணிகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (22.6.2025) ஆய்வு செய்தார். பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
இந்தியாவில் உள்ள 36 மாநில அரசு மருத்துவமனைகளில் வேறு எங்கும் இல்லாத அதிநவீன வசதிகள் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அமைந்துள்ளது. அதிநவீன உபகரணங்கள் உள்ளடங்கிய மருத்துவமனையாக இது விளங்கி வருகிறது. நாள் தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கிறார்கள்.
கூடுதலாக 6.5 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை ஒன்றும் இங்கே அமைய உள்ளது. 6 தளங்களுடன் கட்டடம் கட்டப்பட இருக்கிறது. நர்சுகள் விடுதி, முதுநிலை மருத்துவ மாணவர்கள் விடுதிகளும் கட்டப்பட உள்ளது.
இந்த கட்டடம் கட்டுவதற்கு ரூ.487.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர்
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பாக இது நிர்வகிக்கப்படும். தற்போது இடம் தேர்வு செய்யும் பணி முடிவடைந் துள்ளது.
ஒரு மாதத்திற்குள் ஒப்பந்தப்புள்ளி கோரும் பணி முடிவடையும். பொதுப்பணித்துறை சார்பில் பணி ஆணைகள் வழங்கப்பட்டவுடன் இந்த மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.
அதிநவீன மருத்துவ வசதிகள்
2 ஆண்டுகளுக்குள் பணிகள் முடிந்து திறக்கப்படும். வரும் செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்க இருக்கிறார்.
இந்த மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ வசதிகள் தொடங்கப்பட உள்ளது. இதில், குழந்தைகளுக்கான மருத்துவம், குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கான மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், இரைப்பை குடல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், இருதயவியல் உள்ளிட்ட குழந்தைகளுக்கான பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளது.
குழந்தைகள் நரம்பியல் அறுவை சிகிச்சை, குழந்தைகள் பிளாஸ்டிக் மற்றும் மறு வாழ்வு அறுவை சிகிச்சை, அதிநவீன மருத்துவ ஆய்வகங்களும் அமைய உள்ளது. இந்தியாவில் மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் குழந்தைகளை சிகிச்சைக்காக இங்கே அழைத்து வரும் வகையில் இந்த மருத்துவமனை கட்டப்பட உள்ளது.
– இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் வினீத், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி, பதிவாளர் சங்கீதா, கிங் இன்ஸ்டிடியூட் இயக்குநர் இந்துமதி, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.