புதுடில்லி, ஜூன்.24- ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சை மோடி கண்டிக்கவோ, விமர்சிக்கவோ இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மோடி அரசு தார்மீக துணிச்சலு டன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரி வித்துள்ளது.
ஈரான் அதிபருடன் பேச்சு
இஸ்ரேல்-ஈரான் இடையி லான மோதலில் புதிய திருப்பமாக, ஈரானில் உள்ள 3 அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. அமெரிக்க தாக்குதலுக்கு ரஷ்யா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இந்தியா மவுனம் சாதித்து வருவதாக நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனி யாகாந்தி நேற்று முன்தினம் (22.6.2025) கண்டனம் தெரிவித்து இருந்தார்.
ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். தற்போதைய நிலவரம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார். பேச்சு வார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
கேலிக்கூத்து
இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் போர் விவகாரத்தில் மோடி அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித் துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஈரானுடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார். இந்த பின்னணியில் அவரே ஈரான் மீது அமெரிக்க போர் விமானங்களின் குண்டுவீச்சு தாக்கு லுக்கு உத்தரவிட்டு இருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.
ஈரானுடன் உடனடியாக பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்யரீதியிலான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
அமெரிக்க குண்டுவீச்சு, இஸ்ரேலின் அத்துமீறல், திட்டமிட்ட கொலைகள் ஆகியவற்றை மோடி அரசு விமர்சிக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. காசாவில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்து விடும் இனப்படுகொலை குறித்தும் மோடி அரசு மவுனம் சாதிக்கிறது. இதுவரை இருந்ததை விட இன்னும் அதிக தார்மீக துணிச்சலுடன் மோடி அரசு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.