முதலமைச்சர் – தமிழர் தலைவர் சந்திப்பு

viduthalai
3 Min Read

‘‘பூனைக்குட்டி வெளியில் வந்தது!’’
முழுக்க முழுக்க தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான்
‘‘முருகன் பக்தர்கள் மாநாடு’’ என்பது உறுதிப்படுத்தப்பட்டது!
அறுபடை வீடு செட் அமைத்தவர்களுக்குத்தான் வருமானம்-
மாநாடு நடத்தியவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை!

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, ஜூன் 23 – முழுக்க முழுக்க தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் முருகன் பக்தர்கள் மாநாடு என்பது உறுதிப்படுத்தப்பட்டது.  ஆக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது; அறுபடை வீடு “செட்’’ போட்டவர்களுக்கு வருமானமே தவிர, நடத்தியவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

செய்தியாளர்களுக்குத்
தமிழர் தலைவர் பேட்டி!

நேற்று (22.6.2025) மாலை சென்னை பெரியார் திடலில் ‘‘96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று தலைமையுரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

திராவிடர் கழகத்தையும், பெரியாரையும் மறைமுகமாக எதிர்ப்பதுபோன்று காணொலிகள்!

செய்தியாளர்: இன்றைக்கு முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற்று இருக்கிறது. அம்மாநாட்டில் அரசியல் பேசமாட்டோம் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், அரசியல் பேசியிருக்கிறார்கள். திராவிடர் கழகத்தையும், பெரியாரையும் மறைமுகமாக எதிர்ப்பது போன்று காணொலிகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்; அதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன?

தமிழ்நாடு

தமிழர் தலைவர்: இதுவரையில் நாங்கள் என்ன சொல்லிக் கொண்டிருந்தோமோ அது உறுதி யாகிவிட்டது. அதன்படி அவர்களுடைய முகமூடி கழன்றுவிட்டது.

‘‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’’

இதுவரையில், முருகன் முகமூடியை தரித்தி ருந்தார்கள். அந்த முகமூடியைக் கழற்றிவிட்டு, முழுக்க முழுக்க, ஓட்டு அரசியல், தேர்தலுக்கான ஆயத்தம் என்பதை, அவர்கள்,  போட்ட தீர்மானத்தின்மூலமாக, வெளிப்படையாக காட்டிவிட்டார்கள். ‘‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’’ என்று தந்தை பெரியார் சொல்வார்.

தமிழ்நாட்டின் ஆளுநர் அந்த மாநாட்டிற்குச் சென்றதாக, சற்றுநேரத்திற்கு முன்பு நம்முடைய அருமைத் தோழர் இரா.முத்தரசன் அவர்கள் சொன்னார்.

தமிழ்நாட்டு ஆளுநரே, அங்கே போய் அமர்ந்து கொண்டு, மதச்சார்பின்மைக்கு எதிராக நடக்கக் கூடிய அளவிற்கு வந்த நேரத்தில்கூட, அரசியலுக்கும், இம்மாநாட்டிற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னார். அப்படியென்றால், அந்த மாநாட்டில் என்ன தீர்மானம் நிறைவேற்றி இருக்கவேண்டும்?

முருகனை வணங்குவதற்கு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் தயாராக இல்லை!

வடநாட்டில் எத்தனை முருகன் கோவில் கட்டப்பட்டி ருக்கவேண்டும்? முருகன் பக்தியை வடநாட்டில் ஏன்  உருவாக்கவில்லை? இராமன் பக்திக்கு இணையாக முருகன் பக்தி ஏன் வடநாட்டில் வரவில்லை? அத னால்தான் முருகனை வணங்குவதற்கு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் தயாராக இல்லை.

ஆகவே, முழுக்க முழுக்க தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் முருகன் பக்தர்கள் மாநாடு என்ற வித்தைகள் – அரிதாரம் கலைந்துவிட்டது; அதுமட்டுமல்ல, முகமூடி கழன்றுவிட்டது.

முழுக்க முழுக்க இது அரசியல்தான் என்பதற்கு, அவர்களுடைய தீர்மானமே அதற்கு ஒப்புதல் தந்துள்ளது.

எனவேதான், ‘‘எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது.’’

ஆதரவான விளைவுகளை
இதுவரையில் ஏற்படுத்தவில்லை!

செய்தியாளர்: அரசியலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?

தமிழர் தலைவர்: இதுவரையில், அத்தகைய  விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதற்கு, முன்மாதிரி இருக்கிறது. சேலம், 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு.

எந்தக் கடவுளும் அவர்களுக்குக் கைகொடுக்கவில்லை!

மிக முக்கியமான ஒரு தகவல் என்னவென்றால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்புதான், வேலைத் தூக்கிக் கொண்டு போனார்; திருத்தணியில் தொடங்கி,  திருச்செந்தூர் வரையில், தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளுக்கும் சென்றார்கள்.

திருச்செந்தூரிலும் அவர்கள் வெற்றி பெறவில்லை.

அதேபோன்று, பிரதமர் மோடி அவர்கள் ரோடு ஷோ, காட் ஷோ நடத்தினார்; இராமேசுவரத்திற்குச் சென்று மவுன விரதம் இருந்தார்.

இராமநாதபுரத்திலும் அவர்கள் வெற்றி பெற வில்லை.

ஆகவே, இராமேசுவரத்தில் உள்ள இராமனும் அவர்களுக்குக் கைகொடுக்கவில்லை. எந்தக் கடவுளும் அவர்களுக்குக் கைகொடுக்கவில்லை.

‘அறுபடை’ செட் அமைத்தவர்களுக்கு வருமானம்!

எனவே, இந்த முருகன் பக்தர்கள் மாநாட்டினால் அவர்களுக்கு எந்தப் பலனும் ஏற்படும் என்று தோன்ற வில்லை.

‘அறுபடை வீடு’ செட் அமைத்தவர்களுக்கு வருமானமே தவிர, மாநாடு நடத்தியவர்களுக்கு ஒன்றுமில்லை.

– இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *