சுயமரியாதை இயக்க தலைவர்களில் ஒருவரான பட்டுக்கோட்டை அழகிரி ‘திராவிட இயக்கத்தின் போர்வாள்’ என கொண்டாடப்பட்டவர்.
அஞ்சாநெஞ்சன், தளபதி என்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்டவர். தந்தை பெரியாரின் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றி தன் வாழ்நாள் முழுவதும் ஒரே தலைவர், ஒரே கட்சி என்று கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்தவர்.
தஞ்சை மாவட்டம் கருக்காகுறிச்சியில் 23.6.1900 அன்று பிறந்தார். பெற்றோர் வாசுதேவன் – கண்ணம்மை மதுரை பசுமலை அமெரிக்கன் உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை பயின்றார். பின் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்தார்.
முதலாம் உலகப் போர் காலத்தில் நம் நாட்டு ராணுவத்தில் சேர்ந்து மெசபடோமியாப் பகுதியில் பணியாற்றினார். படையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் பட்டுக் கோட்டை திரும்பினார்.
பரத்வாஜ் ஆசிரமத்தில் நடந்த பார்ப்பனக் கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார் போராடியபோது அவரது கருத்துகளை அழகிரி முழுமையாக ஏற்றார். நாட்டின் பட்டித் தொட்டியனைத்திலும் பயணம் செய்து படித்தவர்களின் பாமரத் தன்மையையும், படி யாத வரின் ஏமாளித் தன்மையையும், பார்ப்பனரின் புரட்டுத் தன்மை களையும் தோலுரித்து காட்டினார்.
அழகிரி மேடையேறி வெண்கல குரலில் பேசத் தொடங்கியவுடனே, இளைஞர்கள் கூட்டம் ஆர்ப் பரிக்கும். இரும்பு துண்டுகளை கவர்ந்திழுக்கும் காந்தமென உணர்ச்சி பெருக்குடன் ‘ரதகஜதுரகபதாதிகள், ஓட்டை, உடைசல், செம்பு, பித்தளை அண்டபிண்ட சாரசரம்’ போன்ற சொல்லாட்சி யுடன் அனைவருக்கும் புரியும் தமிழில் முழங்குவார். அவரது உரை 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடிக்கும். அவரது எழுச்சி மிக்க உரை சுயமரியாதை இயக்கத் திற்குத் தோன்றிய எதிரிகளை தோற்கடித்தது. அழகிரியின் பேச்சு நடையை இளைஞர்கள் பின்பற்ற முனைந்தனர்.
அஞ்சா நெஞ்சனின் பேச்சால் கவரப்பட்டவர்களில் கலைஞர் முக்கியமானவர். அவரைப் போலவே பேச வேண்டும் என்று ஆசைப்பட்டார். அழகிரி பேச்சாற்றல் குறித்து அவர் கூறுகிறார்:
சிம்மம் கர்ச்சித்தது
‘சிம்மம் கர்ச்சித்தது; புலி உறுமியது; கோடையிடி குமுறியது; பெரியார் பேச்சில் காணப்பட்ட அழுத்தம் திருத்தமான வாதமும், அழகிரி பேச்சில் காணப்பட்ட வீரங்கொப்பளிக்கும் வரிகளும், அண்ணா பேச்சின் அழகு தமிழும் என்னை வெகுவாக கவர்ந்தன’ என புகழாரம் சூட்டினார்.
சுயமரியாதை இயக்கத்தின் வீரியமிக்க பேச்சாளரான பட்டுக்கோட்டை அழகிரிசாமி சுயமரியாதை இயக்க மேடைகள் மட்டுமின்றி மாற்றுக் கட்சி பொதுக் கூட்டங்களுக்கும் செல்வார். அங்கு மேடையில் பேசி கொண்டு இருப்பவர்களிடம் துண்டு சீட்டு அனுப்பி கேள்வி கேட்பது வழக்கம். அப்போது அழகிரிக்கும் மாற்று கட்சியினருக்கும் வாத, பிரதிவாதம் நடைபெறும். சில சமயம் கைகலப்பும் ஏற்பட்டு இருக்கிறது.
மாற்றுக் கட்சியினர் முகாம்களுக்கு சென்று கேள்வி கேட்கும் துணிச்சல்காரரான அழகிரிசாமியை அஞ்சா நெஞ்சன் என்று அழைத்தார் பெரியார்.
1945ஆம் ஆண்டு புதுச்சேரியில் திராவிடர் கழகத்தின் மாநாடு நடைபெற்றது. அப்பொழுது எதிர்ப்பாளர்கள் குழப்பம் விளைவித்து மாநாட்டு பந்தலுக்கு தீ வைத்து கலவரத்தை ஏற்படுத்தினர். மாநாட்டுக்கு – வந்தவர்களில் பலர் தாக்கப்பட்டனர். கலைஞரும் தாக்கப்பட்டு சாலையோரம் கிடத்தப்பட்டார். அவரை பெரியார்தான் காப்பாற்றி மீட்டார்.
இப்படி ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் மாலையில் நடந்த மாநாட்டுக்கு துணிச்சலாக தலைமை தாங்கினார் அழகிரி.
செங்கல்பட்டு மாநாடு
1929இல் செங்கல்பட்டில் நடைபெற்ற முதலாம் சுயமரியாதை மாநாட்டின்போது இரவு 10 மணிக்கு தொடங்கி பல மணி நேரம் சளைக்காமல் உரை நிகழ்த்தினார்.
1931இல் ஈரோட்டில் நடந்த இரண்டாம் மாகாண சுயமரியாதை மாநாட்டில் தொண்டர் படை தலைவராக இருந்து மிகச் சிறப்பாக செயலாற்றி மாநாட்டின் வெற்றிக்கு அடிப்படை காரணமானார்.
1.8.1938இல் தந்தை பெரியார் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை துவக்கியபோது தளபதி அழகிரி உறையூரிலிருந்து ‘தமிழர் பெரும்படை’ என்ற பெயரில் சென்னைக்கு 600 மைல்கள் நடைபயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி புதிய வரலாறு படைத்தவர். நடை பயண கலாச்சார அரசியலை முதலில் அறிமுகப்படுத்தியவர் தளபதி அழகிரியே எனக் கூறலாம்.
உழைப்பின் சின்னமாய் உலவிய தளபதி அழகிரி உடல் நலனை கவனிக்கத் தவறியதன் விளைவு காசநோயால் பாதிக்கப்பட்டார். நலம் குன்றியிருந்தும் கூட்டங்களுக்கு சென்று உரை நிகழ்த்துவதை நிறுத்தவில்லை.
அஞ்சா நெஞ்சன் அழகிரியின் பால்தான் கொண்ட அன்பால், ஈர்க்கப்பட்ட பேச்சால் தான் வளர்ந்து நிற்கிறேன் என்று பிற்காலத்தில் குறிப்பிட்ட முத்தமிழறிஞர் கலைஞர் தன் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.
மறுபடியும் காண்பேனா?
1948இல் ஈரோட்டில் ஹிந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றபோது உடல் நலிவோடு இருந்த தளபதி அழகிரி கலந்து கொண்டார். ‘அப்போது அவர் பேசும்போது உங்கள் அனைவரையும் மறுபடியும் காண்பேனா? என்று சொல்ல முடியாது. என் தலைவருக்கும், தோழர்களுக்கும் இறுதியாக என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளவே இப்போது வந்தேன்?’ என்று தழுதழுத்த குரலில்கூறி கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தோழர்களை கண் கலங்க வைத்தார். மேடை உணர்ச்சி பிளம்பாக காட்சியளித்தது.
அவர் சொல்லியபடியே நடந்தது.
28.3.1949 அன்று அந்த ஒய்வறியா உழைப்பாளியின் விழிகள் திறக்கவில்லை. வாழ்வியல் பாடத்தைப் போதித்த வணங்காமுடி மண்ணில் இருந்து மறைந்து வரலாறானார்.
அழகிரியின் முடிவு செய்தி கேட்டு தந்தை பெரியார் மிகுந்த வேதனையடைந்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,
‘‘நண்பர் அழகிரிசாமி முடிவு எய்தியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன். அழகிரிசாமி எனக்கு 30 ஆண்டு நண்பரும், என்னை மனப்பூவர்மாய், நிபந்தனை இல்லாமல் பின்பற்றி வருகிற ஒரு கூட்டு பணியாளருமாவார்.
கொள்கை வேற்றுமை, திட்ட வேற்றுமை என்பது எனக்கும் அவருக்கும் ஒரு நாளும் காண முடிந்ததில்லை. அவருடைய முழு வாழ்க்கையிலும் அவர் இயக்கத் தொண்டைத் தவிர வேறு எவ்வித தொண்டிலும் ஈடுபட்டதில்லை.
போதிய பணம் இல்லை
விளையாட்டுக்குகூட கொள்கையை விலைபேசி இருக்க மாட்டார். அப்படிப்பட்ட ஒருவர் ‘‘உண்மையான வீரமும், தீரமும் உள்ளவர் இச்சமயத்தில் முடிவெய்தி விட்டது என்பது எனக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது என்பதோடு இயக்கத்துக்கும் பதில் காண முடியாத பெருங்குறை என்றே சொல்லுவேன்’’ என்று வீர வணக்கம் செலுத்தி இருந்தார்.
நாதஸ்வர வித்வான் தோளில் துண்டு போடுவதற்கு இருந்த தடையை உடைத்த தளபதி அழகிரி
செட்டி நாட்டில் கானாடுகாத்தான் என்ற ஊரில் முக்கிய பிரமுகர் இல்ல திருமண நிகழ்வு. திருமண ஊர்வலத்தில் பிரபல நாதஸ்வரக் கலைஞரான மதுரை சிவக்கொழுந்து துண்டைத் தம் தோளின்மீது போட்டுக் கொண்டு நாதசுரம் வாசிக்கிறார். இதைக் கண்ட ஆதிக்க ஜாதி வர்க்கத்தினர் அந்த துண்டு தங்களை அவமதிப்பாக கூறி அதை எடுக்கும்படி கூறினர். ‘‘இது துண்டு அல்ல; வியர்வையை துடைக்கும் கைக்குட்டை’’ என்று சிவக்கொழுந்து கூறினார். அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத ஆதிக்க வர்க்கத்தினர் துண்டை இடுப்பில் கட்டிக் கொள்ளும்படி வற்புறுத்தினர். திடீரென கூட்டத்தில் இருந்து ஒரு குரல் சிவக்கொழுந்து துண்டை எடுக்காதீர்கள் என ஒலித்தது அந்தக் குரலுக்குசொந்தக்காரர் பட்டுக்கோட்டை அழகிரி. ஊர்வலம் நடுத் தெருவில் நின்றது. அவ்வூரிலேயே அய்யா அவர்களும் தங்கியிருந்ததால் அவரிடம் விரைந்து சென்று தகவல் தெரிவித்து அடுத்த நடவடிக்கைக்கான இசைவு பெற்றுத் திரும்புகிறார் தளபதி அழகிரிசாமி.
‘என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். நானிருக்கிறேன் தோள் துண்டை எடுக்கக் கூடாது’ என்று கர்ஜிக்கிறார் அழகிரி.
கழகத் தோழர்கள் திரண்டு வர சிவக்கொழுந்து தோளில் துண்டணிந்தவாறே பெருமிதத்துடன் நாதசுரம் வாசித்து வர அவருக்கு அழகிரி விசிறியால் வீசிக் கொண்டே ஊர்வலத்தில் நடந்து வந்தார்.