அய்தராபாத், ஜூன் 22- தெலங்கானாவில் உயிரை மாய்த்துக் கொள்ள ஆற்றில் குதிப்பவர்களை ஒரு கிராமத்தினர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றி வருகின்றனர்.
தெலங்கானா, தலைநகர் அய்தராபாத்தில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள நிஜாமாபாத் மாவட்டத்தில் யமாச்சா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1,700 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமமானது கோதாவரி ஆற்றின் கரையில் உள்ளது. இந்நிலையில், குடும்பத் தகராறு, பொருளாதார பிரச்சினை, காதல் தோல்வி உள்ளிட்ட பிரச்சினைகளை கையாள முடியாதவர்கள் ஆகியோர் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.
ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் மழைக்காலத்தில் உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்படுகின்றன.
இதனால், இந்த கிராம மக்களை உறுப்பினர்களாக கொண்டு நிஜாமாபாத் காவல் நிலையத்தினர் ஒரு வாட்ஸ்-அப் குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர். யாரேனும் காணாமல் போனால் இந்த குழுவில் காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். உடனே கிராம மக்கள் இரவு நேரத்திலும் கூட தங்கள் பகுதியில் ஆள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கின்றனர். மேலும், ஆற்றில் யாரேனும் குதித்தால் தங்களது உயிரை பணயம் வைத்து அவர்களை காப்பாற்றுகின்றனர். அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 300 பேரை காப்பாற்றி உள்ளனர் அப்படி காப்பாற்றப்பட்டவர்கள் பின்னாளில் ஊர் மக்களுக்கு சிறப்பாக விருந்து வைத்து கவுரவித்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.