டெஹ்ரான், ஜூன் 22- ஈரான் நாட்டில் சிக்கியுள்ள 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறி தாயகம் செல்ல, அந்நாடு பிரத்யேகமாக தனது வான்வழியைத் திறந்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையில் போர் தொடங்கியுள்ள நிலையில், இருநாடுகளும் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், ஈரான் மற்றும் இஸ்ரேல் பயணிகள், விமானம் உள்ளிட்ட அனைத்து வான்வழிப் பயணங்களுக்கும் தடை விதித்து தங்களது வான்வழியை மூடியுள்ளன.
இந்நிலையில், இருநாடுகளிலும் உள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக இந்திய அரசு ஆபரேஷன் சிந்து எனும் பெயரில் புதிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
வான்வழி திறப்பு
இதன் அடிப்படையில், இந்தியர்களை மீட்டு அழைத்து செல்ல 3 சிறப்பு விமானங்கள் ஏற்பாடு இயக்கப்படவுள்ள நிலையில், அவை பறப்பதற்காக மட்டும் ஈரான் அதன் வான்வழியை மீண்டும் திறந்து அனுமதி வழங்கியுள்ளது.
ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், மஷாத் நகரத்திலிருந்து, அந்நாட்டின் மஹான் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, இந்தியர்களுடன் புறப்படும் முதல் விமானம் இன்று (ஜூன் 20) மாலை தலைநகர் டில்லியில் தரையிறங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரான் தூதரகத்தின் உயர் அதிகாரி கூறியதாவது:
எங்கள் மக்களாகவே…
“நாங்கள் இந்தியர்களையும் எங்களுடைய மக்களாகவே கருதுகிறோம். ஈரானின் வான்வழி மூடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக நாங்கள் எங்களது வான்வழியை மீண்டும் திறக்கின்றோம்.
இதற்காக, சுமார் 1,000 இந்தியர்கள் டெஹ்ரானிலிருந்து கோம் நகருக்கும், அங்கிருந்து மஷாத் நகரத்துக்கும் அழைத்து செல்லப்பட்டு, மூன்று சிறப்பு விமானங்கள் மூலம் டில்லிக்கு அனுப்பப்படவுள்ளனர்.” என அவர் கூறியுள்ளார்.
இத்துடன், முதல் விமானம் இன்று இயக்கப்படுகிறது. இதையடுத்து, (ஜூன் 21) இரண்டு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. தேவைப்பட்டால், வரக்கூடிய நாள்களில் இந்தியர்களுக்காக அதிக விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரானில் சுமார் 10,000-க்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தாயகத்துக்கு செல்ல விரும்பினால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரானிலிருந்து 110 இந்திய மாணவர்கள் அர்மேனியா எல்லை வழியாக அந்த நாட்டிலிருந்து வெளியேறி தாயகம் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பாக உள்ள இந்தியா்கள்:
ஈரானில் வசிக்கும் இந்தியா்களையும் எங்கள் நாட்டு குடிமக்களாகவே கருதுகிறோம். இங்கு 10,000 இந்தியா்கள் வசிக்கின்றனா். அவா்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனா்.
அவா்களில் தாயகம் திரும்ப விரும்புபவா்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தித் தர இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகத்துடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளோம்.
டெஹ்ரான் மீது கடந்த சில நாள்களுக்கு முன் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சில இந்திய மாணவா்களுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது என்றாா்.