புதுடில்லி, ஜூன் 22- ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிப்பு கட்டாயம்
ஆதார் அட்டை விவரங்களை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். சிறு வயதில் ஆதார் அட்டை பெற்றிருந்தால், 18 வயதுக்கு பின் பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க வேண்டும். 10 ஆண்டுகளாக தகவல்கள் புதுப்பிக்காமல் இருந்தால் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை (Aadhaar Card) வைத்திருப்பவர்கள் நிச்சயம் ஆதார் விவரங்களில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் அதை தவறாமல் செய்திட வேண்டும். அரசு ஆவணங்களில் ஆதார் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், நீங்கள் இதுவரை ஆதார் விவரங்களை புதுப்பிக்கவில்லை என்றால், ஒன்றிய அரசின் UIDAI ஆணையம் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை தற்போது நீட்டித்துள்ளது. நீங்கள் உங்களின் ஆதார் விவரங்களை இணைய வழியாகவே இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம். இதற்காக தனியாக ஆதார் இ-சேவை மய்யங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. myAadhaar தளத்திற்கு சென்று புதுப்பிக்கலாம். தேவைப்பட்டால், ஆதார் இ-சேவை மய்யம் சென்றும் புதுப்பிக்கலாம்.
இணைய வழியில் பதிவேற்றம்
நீங்கள் உங்களின் ஆவணங்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்தும் ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்கலாம். அதாவது, முகவரி மாற்றம் உள்ளிட்ட விவரங்களை புதுபிக்க ஆவணங்கள் தேவைப்படும். ஆதார் அட்டையை பெற்ற பின்னர் சுமார் 10 ஆண்டுகளுக்கு விவரங்களை புதுப்பிக்காமல் இருப்போர், நிச்சயம் கைவிரல் ரேகை, கருவிழிகள் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். அந்த வகையில், நீங்கள் myAadhaar தளத்திற்கு சென்று வரும் 2026ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி வரை இலவசமாக உங்களது விவரங்களை ஆதார் அட்டையில் புதுப்பித்துக்கொள்ளலாம். இன்னும் உங்களுக்கு ஓராண்டு காலம் காலக்கெடு நீட்டிக்கப்பட்டாலும், நேரம் இருக்கும்போதே அதை புதுப்பித்துவிடுங்கள். தள்ளிப்போடாதீர்கள். காலக்கெடு நீட்டிக்கப்பட்டது குறித்து கடந்த ஜூன் 14ஆம் தேதி UIDAI அதன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது.