வருவாய்த்துறை உயர்நீதிமன்றங்களை பாதுகாவலனாக நினைப்பது தவறு – உச்சநீதிமன்றம்

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூன் 22– உயா்நீதி மன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

விசாரணை

ஒரு நிறுவனத்துக்கு ரூ.256.45 கோடியை திரும்பச் செலுத்துமாறு தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயா்நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

மேலும், மும்பை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை நடத்தியது.

விண்ணப்பம்

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: சேவை வரியை விடுவிக்கக்கோரி நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயம் கடந்த ஜனவரி மாதம் அனுமதித்து உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து, தங்களுக்கு வழங்கவேண்டிய ரூ.256.45 கோடியை திரும்பச் செலுத்துமாறு நிறுவனம் சாா்பில் மே மாதம் விண்ணப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, தீா்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய கலால் சட்டம், 1944 பிரிவு 35ஜி-இன்கீழ் பேலாபூா் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, ஒன்றிய கலால் துறை ஆணையரகத்தின் ஆணையா் மும்பை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்

உயர்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலன் அல்ல

ஆனால் இந்த விவகாரத்தில் பேலாபூா் ஒன்றிய சரக்கு மற்றும் சேவை வரி, ஒன்றிய கலால் துறை ஆணையரகத்தின் ஆணையா் தாக்கல் செய்த மனுவும் மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதாக ஜூன் 12-ஆம் தேதி உத்தரவில் மும்பை உயா்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை நிறுவனம் தாக்கல் செய்ய அறிவுறுத்தி தீா்ப்பாயத்தின் உத்தரவுக்கு மும்பை உயா்நீதிமன்றம் 8 வாரம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. வருவாய்த் துறையின் பாதுகாவலராக உயா்நீதிமன்றங்கள் செயல்பட முடியாது.

இந்த விவகாரத்தில் 6 வாரங்களுக்குள் வருவாய்த் துறை பதிலளிக்க வேண்டும். அதுவரை மும்பை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனா்.

மேலும், இந்த விவகாரத்தில் மத்திய கலால் சட்டம், 1944 பிரிவு 35-எல் -இன்கீழ் தீா்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மேல்முறையீடு செய்யாதபட்சத்தில் வருவாய்த் துறை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யலாம் எனக்கூறி அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை 2-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *