முருகன் மாநாடு பேரால் வசூல் வேட்டை!

3 Min Read

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்காக நிதி வசூல் செய்த ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஹிந்து முன்னணி, பா.ஜ., உள்ளிட்ட இயக்கங்கள் சேர்ந்து, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை வரும் ஜூன் 22இல் நடத்துகின்றன.

எல்லா இயக்கங்களையும் போல, அர்ஜுன் சம்பத் தலைமையிலான ஹிந்து மக்கள் கட்சியும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்தோரும் மாநாட்டில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஹிந்து மக்கள்  கட்சியை சேர்ந்த பலர், தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மாநாட்டுக்காக நிதி வசூல் செய்யும் தகவல் வந்துள்ளது.

அது தவறான செயல், இந்த மாநாட்டுக்கும் ஹிந்து மக்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது’ என, ஹிந்து முன்னணி மாநில செயலர் குற்றாலநாதன், தன் கண்டனத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். கூடவே, ஹிந்து மக்கள் கட்சி சார்பில் வசூல் செய்து கொடுத்திருந்த ரசீதையும் ஆவணமாக பதிவிட்டுஇருந்தார்.

இந்தப் பதிவை அடுத்து, தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண்டத்தில் இருக்கும் கிரஷர் நிறுவனம் ஒன்றில் இருந்து, மாநாட்டிற்கு 10,000 ரூபாய் வசூல் செய்த, ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி ஞானசுந்தரம் என்பவரை கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் மாநில செயலர் வசந்தகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். (‘தினமலர்’ 19.6.2025)

எப்படி இருக்கிறது? முருகக் கடவுள் பெயரால் ஒரு மாநாடு – அந்த மாநாட்டின் பெயரால் ஆள் ஆளுக்கு நன்கொடைப் புத்தகங்களை அச்சிட்டு வசூல் வேட்டையாடுகின்றனர் என்றால், இவர்களின் கடவுள் மத யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

1976 மே திங்களில் காஞ்சிபுரத்தில் அகில இந்திய இந்து மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியே பக்தியைப் பற்றி சொன்ன கருத்து என்ன?

‘‘மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிகப் பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோவில்களுக்குப் போவதையும், மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாகக் கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது’’ என்று கூறியது எத்தகைய உண்மை என்பது – மதுரையில் ‘முருகன் மாநாடு’ என்ற பெயரில் அவரவர்களும் வசூல் வேட்டையில் ஈடுபடுவதன் மூலம் தெற்றென விளங்கவில்லையா?

கோயில்களில் ‘சாமி தரிசனம்’ என்று சொல்லிக் கொண்டு முக்கிய பிரமுகர்கள் (வி.அய்.பி.) என்ற பெயரால் அதிக பணம் பெற்றுக் கொண்டு உடனடியாக ஏற்பாடு செய்வது எதைக் காட்டுகிறது?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாதாரண பக்தர்கள் இரண்டு நாட்கள் கால் கடுக்கக் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலையையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

‘காசே தான் கடவுளடா’ என்ற சினிமா பாடல்தான் நினைவிற்கு வருகிறது. சிதம்பரம் நடராஜன் கோயில் பற்றிய வழக்கில் கோயில் தீட்சதர்கள், கோயில் ஆண்டு வருவாய்  ரூ.37,199 என்றும், செலவு ரூ.37,000 என்றும், மீதி ரூ.199 என்றும் நீதிமன்றத்தில் கூச்ச நாச்சமின்றி   கூறவில்லையா? அதே கோயில் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது 15 மாதங்களில் கோயில் வருமானம் ரூ.25,12,485 என்று தெரிவிக்கப்பட்டதே!

இப்போது சொல்லுங்கள்! கோயில், கடவுள், சாமி என்பன எல்லாம் சுரண்டி கொழுப்பதற்கான ‘வியாபார மாடல்’ என்று புரியவில்லையா!

கடவுள் ஒரு வியாபாரப் பொருள் அவ்வளவுதான் – என்பதற்கு எடுத்துக்காட்டு – மதுரையில் ‘முருகன் மாநாடு’ என்ற பெயரால் நடக்கும் ‘வசூல் வேட்டை’ வெட்கக் கேடு!

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *