அவதூறு பரப்புவதே தொழிலா? பா.ஜ.க. பெண் நிர்வாகி கைது

Viduthalai
1 Min Read

கோவை, ஜூன் 21- கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56). பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகியாக இருக்கும் இவர், பிரதமர் மோடிக்கு ஆதரவு கருத்துகளை சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பதிவேற்றம் செய்து வந்தார். மேலும் அவர் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்பான கருத்துகளையும் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் உமா கார்கி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஹரீஷ், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்தார்.

அதில், சிங்காநல்லூரை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி உமா கார்கி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து டுவிட்டரில் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார். தந்தையர் தினத்தன்று பெரியார், மணியம்மை குறித்தும் அவதூறான தகவல்களை வெளியிட்டு உள்ளார். மேலும் அவர் அவதூறு மீம்ஸ்களை வெளி யிட்டு வருவதுடன், இரு மதத்தினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன் பேரில் உமா கார்கி மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், இரு மதத்தினரிடையே மோதல் ஏற்படுத்த முயற்சி, அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல் துறையில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் அவர் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்துக்கு அழைத்து வரப் பட்டார். இதை அறிந்த பா.ஜனதாவினர் அங்கு திரண் டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கைதான உமா கார்கியை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை ஒன்றிய சிறையில் அடைத்தனர். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *