புதுடில்லி, ஜூன் 21 இன்றைய உலகில் தாய்மொழியைப் போலவே ஆங்கிலம் முக்கியமானது என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கி லம் கற்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆங்கிலம் என்பது என்ன?
“நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி இருந்தார். அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஹிந்தி மொழியில் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், “ஆங்கிலம் ஓர் அணை அல்ல, அது ஒரு பாலம். ஆங்கிலம் ஓர் அவமானம் அல்ல, அது ஓர் அதிகாரம் அளிப்பதாகும். ஆங்கிலம் ஒரு சங்கிலி அல்ல, அது சங்கிலிகளை உடைக்கும் ஒரு கருவி.
ஏழைக் குழந்தைகளுக்கு எதிரானது பா.ஜ.க.
இந்தியாவின் ஏழைக் குழந்தை கள் ஆங்கிலம் கற்பதை பாஜக – ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. ஏனென்றால், நீங்கள் (ஏழைக் குழந்தைகள்) கேள்விகள் கேட்க, முன்னேற, போட்டியிட அவர்கள் விரும்புவதில்லை. இன்றைய உலகில், ஆங்கிலம் உங்கள் தாய்மொழியைப் போலவே முக்கியமானது. ஏனெனில் அது வேலைவாய்ப்பை வழங்கும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உள்ளது. நாம் அவற்றைப் போற்ற வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். உலகத்துடன் போட்டியிடும், ஒவ்வொரு குழந்தைக்கும் சம வாய்ப்பை வழங்கும் இந்தியாவுக்கான வழி இதுதான்” என ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்துள்ளார்.