தமிழர்களின் நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயலும் ஒன்றிய பிஜேபி அரசின் அடாவடியைக் கண்டித்து மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (18.6.2025) புதன் காலை10.30 மணியளவில் சென்னை சைதை கலைஞர் பொன்விழா வளைவு அருகில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
கொளுத்தும் வெயில் என்றாலும் அதனைச் சிறிதும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
நாட்டில் நடப்பது ஆரியர் – திராவிடர் போராட்டமே என்பார் தந்தை பெரியார்.
அதற்கு வேறு எடுத்துக்காட்டுகள் தேவையில்லை, சிவகங்கை மாவட்டம் கீழடி என்ற பகுதியில் 270 கி.மீ. நீளம் கொண்ட வைகை நதியின் வழித்தடத்தில் பத்து கிலோ மீட்டரில் 500 முதல் 600 பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கள ஆய்வுகளின் அடிப்படையில் 293 இடங்கள் கண்டறிப்பட்டு, 100 ஏக்கர் தென்னந்தோப்பு தேர்வு செய்யப்பட்டு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. 2014–2015ஆம் ஆண்டு முதற்கட்ட ஆய்வு நடத்தப்பட்டது.
102 குழிகளில் கீழடி அகழ் ஆய்வில் கிடைத்த பொருள்களை ஆய்வு செய்தபோது நகர நாகரிகம் அங்கு இருந்ததற்கான முடிவுக்கு வர முடிந்தது.
14 தமிழி (தமிழ் பிராமி) எழுத்துகளுடன் கூடிய பனையோடு களும் கிடைத்தன. அதிசயத் தக்க வகையில் தங்க அணிகலன்கள் செப்புப் பொருட்கள், இரும்புக் கம்பிப் பொருள்கள், காதணிகள், இரும்பு உளிகள், 1500க்கும் மேற்பட்ட மணிகள், உறை கிணறுகள் கட்டடங்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள் எல்லாம் கிடைக்க ஆரம்பித்த நிலையில் ஆய்வுப் பணிகள் மிகுந்த ஆர்வத்துடன் முடுக்கி விடப்பட்டன.
சிந்து சமவெளி நாகரிகத்திற்குப் பிறகு முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த வைகை நதிப் படுகை ஆய்வு கருதப்படுகிறது.
இரண்டாவது கட்ட அகழாய்வின் முடிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. இவை 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவின் தென் பகுதியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முக்கியத்துவத்தைக் கருதி, ஒன்றிய தொல்லியல் துறையின் பணிகளை மேலும் ஊக்கப்படுத்துவதற்கு மாறாக, அதனை மேலே வளரவிட மனம் வராமல், அதனை முடக்குவதில் தான் ஆர்வம் காட்டியது. அடுத்த கட்ட ஆய்வுகளுக்கு நிதியை ஒதுக்கவில்லை. (தமிழ்நாட்டிற்குச் சட்டப்படி, முறைப்படி அளிக்கப்பட வேண்டிய நிதிகளை நிராகரிப்பதுதானே ஒன்றிய பிஜேபி அரசின் பார்ப்பனப் பார்வை என்னும் கொள்கை).
12.1.2017 அன்று அந்தக் கால கட்டத்திலேயே ஒன்றிய அரசின் இந்த உதாசீனப் போக்கை எதிர்த்து திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுண்டு. (நேற்று நடத்தியது இரண்டாவது கண்டன ஆர்ப்பாட்டமாகும்). திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் 40க்கும் மேற்பட்டோர் கீழடி சென்று செயல்பாடுகளைப் பார்வையிட்டனர்.
எரிவதை இழுத்து விட்டால் கொதிப்பது அடங்கும் என்பதற்கேற்ப, கீழடி அகழ் ஆய்வுப் பணியை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும், கடமை உணர்ச்சியுடனும் அயராது மேற்கொண்டு வந்த ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களை அசாம் மாநிலம் கவுகாத்திற்குப் பணியிடம் மாற்றித் தூக்கி அடித்தது. (என்னே வஞ்சகம்!).
கோவா, டில்லி, தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா என்று அவரைத் துரத்தித் துரத்தி அடித்து வருகிறது.
இந்தியாவின் தொன்மை நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று நிறுவ வேண்டும். அதற்கு மாறாக திராவிட நாகரிகம் தான் முந்தியது என்பதற்கான தொல்லியல் தரவுகள் உறுதியாகக் கிடைத்த நிலையில் கீழடியில் கீழறுப்பு வேலைகளில் ஒன்றிய பிஜேபி பார்ப்பன அரசு ஈடுபட்டு வருகிறது.
அதனைக் கண்டித்துதான் நேற்று திராவிடர் கழகம் இரண்டாவது முறையாக அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்டு கண்டனக் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தினை நடத்தியது.
நேற்று அதே நேரத்தில் மதுரையிலும் திமுக மாணவர் அணி சார்பில் இதே காரணத்துக்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதும் சிறப்புக்குரியது.
சென்னையில் திராவிடர் கழகம் நடத்திய – அனைத்துக் கட்சியினரும் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆளுமைகள் தெரிவித்த கருத்துகளின் சாரம்.
(1) புராணங்களை வரலாறாகக் காட்டும் ஒன்றிய பிஜேபி அரசு – அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட உண்மையை நிராகரிக்கிறது.
(2) இந்தியாவில் ஆரியத்தின் வேதகால நாகரிகத்துக்கு முந்தையது திராவிட நாகரிகம் என்பதைக் கீழடி அகழ் ஆய்வு மெய்ப்பிப்பதால், கீழடி ஆய்வை இருட்டடிக்க வேண்டும்; ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் நிலைப்பாடு!
(3) ஆர்.எஸ்.எஸின் ஒற்றைக் கலாச்சாரத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. நாம் அரசமைப்புச் சட்டத்தை முன்னிறுத்துகிறோம். அவர்கள் மனுதர்மத்தை முன்னிறுத்துகிறார்கள்.
(4) ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி முடிவைக்கூட 12 ஆண்டுகளுக்குப் பிறகு – அதுவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்ட பிறகுதான் வெளியிடப்பட்டது (2021).
(5) இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்று அறிஞர் அண்ணா கூறியதை நினைவு படுத்துகிறோம்.
(6) ஒன்றிய அரசு நிதி ஒதுக்க மறுக்கும் நிலையில், திராவிட மாடல் அரசு இதற்கான நிதியை ஒதுக்கித்தர வேண்டும்.
(7) முதலமைச்சர் இதற்கான நிதியை அளிப்பீர் என்று ஒரு வேண்டுகோள் அறிக்கையை வெளியிட்டால் நிதி தாராளமாகவே வந்து சேரும்.
(8) சட்டமன்றம், நீதிமன்றங்களை விட மக்கள் மன்றமே வலிமையானது.
(9) இந்திய அரசமைப்புச் சட்டம் 29ஆம் பிரிவு என்ன கூறு கிறது? ஒவ்வொரு மாநிலமும் அதன் கலாச்சாரத்தைப் பாதுகாக்க உரிமைப் படைத்தது.
(10) பாலராமனுக்கு அறிவியல் ஆதாரம் உண்டா? ராமர் பாலத்திற்கு ஆதாரம் உண்டா? மவுடீகத்திற்கும் புராணத்துக்கும் மதிப்புக் கொடுப்பதுதான் ஓர் அரசி்ன கடமையா?
(11) அரசியல் ஆதிக்கம் என்பது கையில் போடப்பட்ட விலங்கு; பொருளாதாரம் என்பது காலில் மாட்டப்பட்ட விலங்கு; பண்பாட்டு ஆதிக்கம் என்பது மூளையில் மாட்டப்பட்ட விலங்கு. இவற்றை மக்கள் சக்தியுடன் வீதியில் இறங்கி முறியடிப்போம்.
(12) உரிய நேரத்தில் வழக்கம்போல் திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியார் வழியில் இந்தப் பிரச்சினையை முன்னெடுத்துள்ளார். அவர் கரத்தை வலுப்படுத்துவோம் – பணி தொடர்வோம்! பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முழங்கிய கருத்துகளின் பிழிவே மேற்கண்டவை!
மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் அவர்கள் விதி எண் 377 (நாள் 6.8.2022)இன்படி தமிழ்நாட்டில் நடைபெற வேண்டிய அகழ் ஆய்வுகளுக்கு ஒன்றிய அரசு காட்ட வேண்டிய ஆதரவு, உரிய நிதி ஒதுக்கீடு பற்றி வலியுறுத்தியதை எடுத்துச் சொன்னார் (அருகில் காண்க)
ஆனாலும் ஒன்றிய அரசு மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுபற்றி வாய்த் திறக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.
‘மயிலே மயிலே, இறகு போடு!’ என்றால் இறகு போடாது; அதே போன்ற நிலையில் தான் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பிஜேபி சங்பரிவார் அரசு உள்ளது.
மக்களைச் சந்திப்போம் – மக்கள் சக்தியைத் திரட்டுவோம் – வாக்குச் சீட்டு மூலம் தண்டிப்பதும்கூட ஒருவகையான அணுகுமுறை தான்.
இது தொடக்கம்தான் – வெற்றி கிட்டும் வரை நம் பணிகள் தொடரும்! தொடரும்! போராடுவோம், வெற்றி பெறுவோம்!
திராவிடர் கழகத்தின் அழைப்பை ஏற்று பங்கேற்ற கட்சித் தலைவர்களுக்கும், கொளுத்தும் வெயிலிலும் திரண்டு நின்று உரிமைக் குரல் கொடுத்த பெரு மக்களுக்கும் நன்றி! நன்றி!!