ஆரிய நாகரிகத்துக்கு முந்தையது திராவிடர் நாகரிகம் என்ற உண்மையை ஏற்க முடியாதவர்கள் செய்யும் சூழ்ச்சிதான் கீழடி ஆய்வைப் புறக்கணிப்பது!
ரூ.45 கோடியை நமது ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் ஒதுக்கினால்,
கீழடிபற்றிய முழு ஆய்வு அறிக்கையை நாமே வெளியிட முடியும்!
எப்பொழுதும்போல் ஆசிரியர் வழிநடத்துவார் – நாம் தொடர்வோம்!
சென்னை, ஜூன் 19 ஆரிய நாகரிகத்திற்கு முந்தையது திராவிடர் நாகரிகம் என்ற உண்மையை ஒப்புக் கொள்ள மனம் இல்லாதவர்கள்தான் கீழடி ஆய்வு அறிக்கையை இருட்டடிக்கிறார்கள். நமது ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் இந்த ஆய்வுக்காக ரூ.45 கோடி ஒதுக்கி னால், நாமே இந்த ஆய்வறிக்கையை வெற்றிகரமாக வெளியிட முடியும் என்றும், எப்பொழுதும்போல் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் நம்மை வழிநடத்துவார் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., முரசு கொட்டினார்.
ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில்…
நேற்று (18.6.2025) காலை சென்னை சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு (பானகல் மாளிகை) அருகே, தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயல்வதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்
எம்.பி., சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே, நம் அனைவரையும் வரவேற்று சிறப்பித்திருக்கின்ற அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, இந்நிகழ்வில் பங்கேற்று நம்மிடையே கருத்துரை வழங்கவிருக்கின்ற அனைத்துக் கட்சித் தலைவர் பெருமக்களே, திரளாகக் கூடியிருக்கின்ற தமிழ்ச் சொந்தங்களே, இதே நாளில் இன்றைக்கு மதுரையிலும் திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஸநாதன சக்திகளுக்கு
எச்சரிக்கை
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள், சென்னையில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து, தலைமை வகித்து, ஸநாதன சக்திகளுக்கு எச்சரிக்கை விடுக்கின்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்.
உரிய நேரத்தில், இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கி ணைத்திருக்கின்ற திராவிடர் கழகத்திற்கு என்னுடைய பாராட்டுதலையும், இந்த வாய்ப்பளித்தமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கீழடி ஆய்வுத் தொடர்பான அறிக்கையைத் திருப்பி அனுப்பியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
ஒன்றிய கலாச்சாரத்
துறையின் அமைச்சர் தீவிரமான ஆர்.எஸ்.எஸ்.காரர்!
கஜேந்திரசிங் செகாவத் என்பவர், ஒன்றிய கலாச்சாரத் துறையின் அமைச்சர். அவர் ஒரு தீவிரமான ஆர்.எஸ்.எஸ்.காரர். இன்னும் சொல்லப்போனால், ஒரு வடிகட்டிய ஆர்.எஸ்.எஸ். தொண்டர். கலப்படமில்லாத ஒரு நபர்.
அவரிடத்தில் ஏதாவது பரிந்துரைக்குப் போனால், வெளிப்படையாகவே அவர், நீங்கள் எங்கள் அரசை கடுமையாக விமர்சிக்கிறீர்கள்; பிறகு ஏன் பரிந்துரைக்கு வருகிறீர்கள் என்று கேட்கக்கூடிய அளவிற்கு ஆர்.எஸ்.எஸ். சிந்தனை யாளர் அவர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் பிரதிநிதிகள், மக்கள் சார்பிலே பரிந்துரையை எடுத்து வருகிறார்கள் என்கின்ற நாகரிகம்கூட அவரிடத்தில் இல்லை என்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றேன்.
அமெரிக்க ஆய்வகத்தில்தான் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது!
தமிழர்களின் தொன்மை கீழடி ஆய்வறிக்கையில் வெளிப்பட்டு இருக்கிறது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டு காலத்தை உறுதி செய்திருக்கிறார். தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு நிறுவிய ஓர் ஆய்வகத்தில் இந்த அறிக்கை உருவாக்கப்படவில்லை; அல்லது இந்தக் காலம் உறுதிப்படுத்தப்படவில்லை.
உலகளாவிய அளவில் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்கின்ற அமெரிக்க ஆய்வகத்தில்தான் இது ஆய்வு செய்யப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதை கரிமச் சோதனை என்பார்கள்; கார்பன் டேட்டிங் அதை ஆங்கிலத்தில் ஏ.எம்.எஸ். கார்பன் டேட்டிங் என்று சொல்கிறார்கள்.
Accelerator mass spectrometry – Carbon Dating Laboratory
உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொண்ட ஓர் ஆய்வகம்!
இது உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் பின்பற்றக்கூடிய வழிமுறை. அதற்கென்று நிறுவப்பட்டு இருக்கின்ற, சோதனை செய்யக்கூடிய ஓர் ஆய்வகம்.
அமெரிக்காவில் இருக்கின்ற ஆய்வகம் என்பதினால், அது உயர்ந்தது என்று நாம் சொல்லவில்லை. உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொண்ட ஓர் ஆய்வகம்.
அவர்கள், இதுபோன்ற ஆய்வுகளில் கிடைக்கின்ற கரிமங்களை, எலும்புக் கரியாக மாறியிருக்கும். நெல் போன்ற தானியங்கள் எரிந்து கரியாக மாறியிருக்கும். மனிதனுடைய பல், நீண்ட காலம் இருக்கக்கூடிய ஒரு பொருள். தடயங்களில் மிக முக்கியமான ஒரு பொருள். அறிவியல் ஆய்வுக்குப் பயன்படக்கூடிய, ஒரு தடயங்களில் ஒன்று பல். அது எரிந்து கரியாக மாறியிருக்கும். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மண்ணில் புதைந்திருக்கும்.
அமர்நாத் ராமகிருஷ்ணா மட்டுமே ஆய்வு செய்து சொன்ன அறிக்கை அல்ல!
அப்படிப்பட்ட கரிமங்களை எடுத்து, அதனுடைய காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய ஓர் ஆய்வு முறை, உலகத்தாரால் ஒப்புக்கொள்ள ஒரே ஆய்வு முறை அதுதான். அவர்கள்தான் இதற்குச் சான்றிதழ் கொடுத்தி ருக்கின்றார்கள். அந்த ஆய்வகத்தில் நம்முடைய அமர்நாத் ராமகிருஷ்ணா போன்றவர்கள் யாரும் இல்லை.
அமர்நாத் ராமகிருஷ்ணா மட்டுமே ஆய்வு செய்து சொன்ன அறிக்கை அல்ல இது. அல்லது தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மிகைப்படுத்தித் தந்த ஒர் அறிக்கை அல்ல.
உலகத்தில் இருக்கின்ற பல நாடுகள், எந்த ஆய்வகத்தில் கொடுத்து ஆய்வு செய்கிறார்களோ, அந்த ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தது ஏ.எஸ்.அய். இந்திய ஒன்றிய அரசின் நிறுவனம்தான் அதற்கான அனுமதியைத் தருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் நேரிடையாக அனுப்பிவிட முடியாது. அமர்நாத் இராமகிருஷ்ணா நேரிடையாக அங்கே கொடுத்து அந்தச் சோதனையை செய்துவிட முடியாது. இதற்கொல்லாம் பன்னாட்டு அணுகுமுறைகள் இருக்கின்றன; நடைமுறைகள் இருக்கின்றன. ஆய்வு செய்வதற்கான சட்டப்பூர்வமான வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றித்தான், கீழடி செய்யப்பட்ட 11 அடுக்கிலிருந்து கிடைத்த கரி மங்கள்தான் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.
கி.மு. 6 ஆம் நூற்றாண்டு!
அந்த ஆய்வில்தான், இது கி.மு. 6 ஆம் நூற்றாண்டு என்று சொல்லப்பட்டது. இது இதுவரையில் சொல்லப்பட்டு வந்த ஆரிய நாகரிகத்தை அடியோடு புரட்டிப் போடுகிறது. அதை பொய் என்று நிரூபிக்கிறது.
எல்லாத் தளங்களிலும் ஆரியர்கள்தான் சாதனை படைத்திருக்கிறார்கள், முந்தையவர்கள், முன்னோடிகள் என்று இதுவரையில் அவர்கள் சொல்லி வந்த கருத்துகள், இப்போது ஓர் ஆய்வில், அறிக்கையில் பொடிப் பொடியாகச் சிதறுகின்றன. இதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை.
தமிழர்களும் இந்தியர்கள்தான்!
நாம் எல்லோரும் இந்தியர்களாக இருக்கவேண்டும் என்று சொல்லுகின்ற அவர்களுடைய பார்வையில் பார்த்தால், தமிழர்களும் இந்தியர்கள்தான்.
ஆக, தமிழர்களின் தொன்மை என்பது இந்தியர்களின் தொன்மையைக் குறிக்கின்ற ஒன்று என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆக, தமிழர்களை இந்தியர்களாகவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழர்களின் தொன்மையை, இந்தியர்க ளுக்கான வரலாறு என்பதாகவும் அவர்களால் உள்வாங்க முடியவில்லை, ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதிலிருந்து வெளிப்படுகின்ற ஒரு எதிர்வினைதான் – இந்த அறிக்கைக்கு இன்னும் போதுமான ஆதாரம் தேவை என்கிறார்கள்.
‘ரிசர்ச் மெத்தடாலஜி’ என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான். எந்தப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றாலும், பிஎச்.டி., இப்படித்தான் செய்யவேண்டும் என்று ஒருமுறை இருக்கிறது.
மாதிரி எடுப்பது எப்படி? ரேண்டமாக எடுப்பதா? நூறு சதவிகிதம் எடுப்பதா? என்பதற்கு ஒரு வழிமுறை வைத்திருக்கிறார்கள்.
ஒரு வழிமுறை இருக்கிறது;
அதை யாரும் மீற முடியாது!
அதை எப்படி ஆய்வு செய்து, புள்ளியில் ஆதாரங்கள் அடிப்படையில் ஒரு டேட்டாவை உருவாக்குவது – அதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது; அதை யாரும் மீற முடியாது. அவரவர் விருப்பப்படி முனைவர் பட்டம் செய்ய முடியாது.
அதுபோன்றதுதான், இந்தத் தொல்லியல் ஆய்வும் கூட. உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் ஒரு கிரிட்டிரியா வைத்திருக்கிறார்கள். அதன்படி ஒரு பட்டியல் போடவேண்டும். இந்தந்த கிரிட்டிரியா அடிப்படையில், இந்தந்த வழிமுறைகளைப் பின்பற்றி யிருக்கவேண்டும்; நீங்கள் இந்தந்த வழிமுறைகளைப் பின்பற்றவில்லை. ஒரு இரண்டு நடைமுறைகளைத்தான் நீ பின்பற்றியிருக்கின்றாய்; இன்னும் நான்கு நடைமுறைகள் எஞ்சியிருக்கின்றன. அவற்றை நீ பின்பற்று. அல்லது அய்ந்து நடைமுறைகளைத்தான் பின்பற்றியிருக்கின்றாய்; ஆறாவது நடைமுறையையும் பின்பற்றி அதனை உறுதிப்படுத்து என்று சொல்.
ஒன்றுமே சொல்லாமல், அந்த அறிக்கையைத் திருப்பி அனுப்பி, இன்னும் எங்களுக்கு ஆதாரம் தேவை; scientific based evidence எங்களுக்குத் தேவை என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
உலகியல் அடிப்படையில் எத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவோ, உலக நாடுகள் எந்தந நடைமுறைகளை ஏற்றுக் கொண்டிருக்கின்றனவோ, அந்த நடைமுறைகளை அப்படியே பின்பற்றி ஆய்வு செய்ததன் அடிப்படையில், தமிழரல்லாத தொல்லியல் வல்லுநர்கள், அறிவியல் வல்லுநர்கள் உறுதி செய்தி ருப்பது, இங்கே கிடைத்திருக்கும் பொருள்களின் காலம் கி.மு.6 ஆம் நூற்றாண்டு.
2600 ஆண்டுகள் என்பதை
நாம் உறுதிப்படுத்தி இருக்கின்றோம்!
2600 ஆண்டுகளுக்கு முந்தையது. தமிழனு டைய தோற்றம், அவனுடைய மொழியின் தோற்றம் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கிறது.
ஆனால், நமக்குக் கிடைத்திருக்கின்ற ஆதா ரத்தின் அடிப்படையில், அறிவியல் அடிப்படையில், தொல்லியல் அறிவியல் அடிப்படையில் 2600 ஆண்டுகள் என்பதை நாம் உறுதிப்படுத்தி இருக்கின்றோம். அதற்கு முன்பும் தமிழன் வாழ்ந்தான்; அதற்கு முன்பும் தமிழ் இருந்தது. அதற்கு முன்பும் நாம் நாகரிகத்தோடு வாழ்ந்திருக்கின்றோம் என்பதை இவையெல்லாம் உறுதிப்படுத்துகிறது.
ஆனால், அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்திய அரசியல், தமிழர்கள் – தமிழரல்லாதவர்கள் என்ற அடிப்படையில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது!
ஆக, இந்திய அரசியல், தமிழர்கள் – தமிழரல்லாத வர்கள் என்ற அடிப்படையில்தான் இயங்கிக் கொண்டி ருக்கின்றது. இந்தத் தமிழர்கள் என்பதைத்தான், நம்மு டைய அறிவியல் அல்லது வரலாற்றியல் வல்லுநர்கள், திராவிடம் என்ற அடையாளத்தோடு இணைத்து, ஆரியத்தை வேறுபடுத்திக் காட்டினார்கள்.
தி.மு.க. எதிர்ப்பு என்பது மட்டும்தான் அவர்களின் அஜெண்டா!
திராவிடம் வேறு – தமிழ் வேறு என்று சிலர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்; உளறிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்குத் தி.மு.க. எதிர்ப்பு என்பது மட்டும்தான் அஜெண்டா – அதனால், இப்படி உளறுகிறார்கள். தி.மு.க. எதிர்ப்பு என்பது தமிழ்த் தேசியம் ஆகாது. தமிழ்த் தேசியம் என்பது இந்திய தேசியத்தை எதிர்ப்பதுதான்; ஸநாதன தேசியத்தை எதிர்ப்பதுதான்; ஹிந்துத்துவ தேசியத்தை எதிர்ப்பதுதான். அதுதான் உண்மையான தமிழ்த் தேசியமாக இருக்க முடியும்.
ஆனால், வெறும் தி.மு.க. எதிர்ப்பையே தமிழ்த் தேசியம் என்ற ஒரு போலியான அரசியலை இங்கே முன்வைக்கிறார்கள்.
ஆகவே, ஆரிய நாகரிகம் என்பதற்கு நேர் எதிரானது திராவிட நாகரிகம் என்பதுதான். அதுதான் அன்றைக்கு, அந்த அடையாளத்தின் தமிழர்களின் தொன்மையை உறுதிப்படுத்தின.
கீழடியில் இரண்டு செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.
ஒன்று, தமிழர்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு என்று வைத்துக் கொண்டாலும்கூட, அப்போதே நகர்ப்புற நாகரிகத்தோடு வாழ்ந்தவர்கள் இவர்கள். சுடுமண் குழாய்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். கழிவு நீர் சாக்கடைகளை உருவாக்கியிருக்கிறார்கள். இரும்பு போன்ற பொருள்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இரும்பை உருக்கி, அந்தத் தாதுவிலிருந்து பிரித்தெ டுக்கக்கூடிய முறை அன்றைக்கே இருந்திருக்கின்றது.
2300 ஆண்டுகளுக்கு முன்பே நகர்ப்புற நாகரிகம் இருந்திருக்கின்றது!
அந்த நாகரிகத்தை அவர்கள் எட்டியிருக்கிறார்கள், 2300 ஆண்டுகளுக்கு முன்னால் என்றால், அதற்கு முன்பு ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாவது, அது ஒரு தொடர் வளர்ச்சியை, பரிணாம வளர்ச்சியைப் பெற்றுதான் அந்த இடத்திற்கு அது வந்திருக்க முடியும். திடீரன்று ஒன்று சுயம்புவாக ஒரு வளர்ச்சி நிலையை எட்ட முடியாது.
2300 ஆண்டுகளுக்கு முன்பே நகர்ப்புற நாகரிகம் இருந்திருக்கின்றது என்று சொன்னால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அது படிப்படியாக வளர்ந்து வந்திருக்கின்றது என்று பொருள்.
மொழியால், சமஸ்கிருதத்திற்கு முந்தையது தமிழ்!
அப்போதே நம்முடைய பானை ஓட்டுகளில் நம்மு டைய எழுத்துகள் இருந்திருக்கின்றன என்றால், அந்த வாக்கிய முறைகள் இலக்கணப்படி இருந்திருக்கின்றன என்று சொன்னால், அந்த மொழி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சியடைந்திருக்கின்றது; அது இலக்கிய வளத்தையும் பெற்றிருக்கின்றது என்பதை உணர முடிகிறது ஆகவே, மொழியால், சமஸ்கி ருதத்திற்கு முந்தையது தமிழ். மொழி வரலாற்றில்.
நாகரிகத்தால், இவர்கள் இதுவரை சொல்லிக் கொண்டிருந்த ஆரிய நாகரிகத்தை முந்தையது தமிழர் நாகரிகம் என்பதை கீழடி உறுதிப்படுத்துகிறது. இதில் தொன்மை என்பதுதான் மிக முக்கியமானதாகும். அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த யுத்தம் இன்னும் தொடரும். இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளிவிட்டு, இந்துக்களாக மாறுங்கள் என்று அவன் பொத்தாம் பொதுவில் ஒரு முழக்கத்தை வைக்கிறான். இந்த நாடு இந்துக்களுக்கான நாடு என்ற பிரச்சாரத்தை மேற்கொள்கிறான்.
அவர்களின் ஒரு யுக்திதான், இப்போது முருகன் பக்தர்கள் மாநாடு அறிவிப்பு!
மத அடிப்படையில், கடவுள் நம்பிக்கை அடிப்படையில் எல்லா வரலாற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இவர்களை மாய்மால அரசியலில் வீழ்த்திவிடலாம் என்று அவன் கணக்குப் போடுகிறான். அதில் ஒரு யுக்திதான், இப்போது முருகன் பக்தர்கள் மாநாடு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதையெல்லாம் நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்; எப்படி அந்த சதிகளை முறியடிக்கப் போகிறோம்! இதுதான் நம் முன் உள்ள சவால். இந்த அடிப்படையில்தான் தமிழர்களை நாம் ஒருங்கிணைக்க வேண்டியிருக்கிறது.
எனவே இவர்கள், அமர்நாத் ராமகிருஷ்ணாவின் மேல் இருக்கின்ற வெறுப்பால், அறிக்கையைத் திருப்பி அனுப்பிவிட்டதாக நாம் கருதிவிட முடியாது. ஒட்டுமொத்த தமிழர்களின் தொன்மையை நிலைநாட்ட நாம் போராடுகிறோம் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தற்காலிகமான பின்னடைவுதான்; அவர்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது!
இது ஒரு தற்காலிகமான பின்னடைவாக இருக்குமே தவிர, அவர்களால் வெற்றி பெற முடியாது.
வரலாறு, வரலாறுதான்; அறிவியல், அறிவியல்தான். அதை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது, மாற்ற முடியாது. இடைக்காலமாகத் திரிபுவாதம் செய்ய முடியும். ஆனால், உண்மையை மறைக்க முடியாது.
இது நிரந்தரமானது அல்ல. மக்கள் நினைத்தால் தூக்கியெறிவார்கள். அந்தக் காலம் நெருங்கப் போகிறது.
ஆகவே, அப்போது அறிவியல், அறிவியலாக வெளிப்படும்.
ஒன்றிய அரசு கீழடி ஆய்வறிக்கையை அதிகாரப்பூர்வமாக ஏற்று அறிவிக்கவேண்டும்!
எனவே, கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக ஒன்றிய அரசு, அதிகாரப்பூர்வமாக ஏற்று அறிவிக்கவேண்டும்; அதனை வெளியிடவேண்டும்.
பாராட்டுகள், வாழ்த்துகள்!
அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிட மாற்றத்தை ரத்து செய்யவேண்டும். அவருக்கு இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக எமது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருடைய மன உறுதிக்கு, அவருடைய போர்க் குணத்திற்குப் பாராட்டுகள்.
கார்பன் டேட்டிங் ஆய்வகம் அமைக்க
நிதி ஒதுக்குக!
அடுத்து, வைகை நதிக்கரையின் ஓரத்தில், இன்னும் அகழாய்வு செய்யவேண்டிய தேவை இருக்கிறது. அதனால், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நான் விடுக்கின்ற வேண்டுகோள், அதே கரிமச் சோதனைக்கான ஆய்வகத்தை நாமே இங்கு உருவாக்கலாம். அதற்குச் செலவு 40 கோடி ரூபாயிலிருந்து 45 கோடி ரூபாய்தான். அந்த நிதியை ஒதுக்கீடு செய்து, கார்பன் டேட்டிங் ஆய்வகத்தை இங்கே அமைக்கவேண்டும்.
தமிழர் தலைவர் எப்போதும் போல்
வழி நடத்துவார்!
290 இடங்களையும் நாம் ஆய்வு செய்யவேண்டும். கரிமச் சோதனைக்கான ஆய்வகத்தை அமைப்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்வரவேண்டும் என்கின்ற வேண்டுகோளை வைத்து, என்றும் தமிழர்களின் போர் பின்வாங்கப்படாது; தோற்றுப் போகாது – வெற்றி பெறும் என்பதைச் சொல்லி, தமிழர் தலைவர் இந்தப் போராட்டத்தை எப்போதும்போல் வழிநடத்துவார் என்று சொல்லி, அவருக்கு என்றென்றும் நாங்கள் உற்ற துணையாக நிற்போம்!
பெரியாரியல் முன்னெடுக்கும் இந்த யுத்தத்தில், விடுதலைச் சிறுத்தைகள்
உற்ற துணையாக நிற்கும்!
இந்த யுத்தத்தில், பெரியாரியல் முன்னெடுக்கும் இந்த யுத்தத்தில், விடுதலைச் சிறுத்தைகள் உற்ற துணையாக நிற்போம் என்பதை மறுபடியும் சொல்லி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.