‘‘ஊசிமிளகாய்” – சமய அறிஞர் சுகி.சிவம் பேட்டியின் முத்தாய்ப்பு!

Viduthalai
2 Min Read

ஊசி மிளகாய்

நேற்று (12.11.2023) ‘சன்’ நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு பேட்டியைக் கண்டோம், கேட்டோம்.

‘ஸநாதனம்’பற்றிய சில கேள்விகளை – ஆன்றவிந்த சமயச் சான்றோர்களில் ஒருவராகத் தமிழ்நாட்டில் வலம் வந்து, உண்மைகளைத் தேவைப்படும்போதெல்லாம் ‘புட்டு புட்டு’ வைக்கும் அறிஞர் சுகி.சிவம் அவர்களிடம் அந்தத் தொலைக்காட்சியின் செய்தியாளர் அபிநயா கேள்விகளைக் கேட்டார்!

விருப்பு வெறுப்பின்றி  சமய நெறியாளர் சுகி.சிவம் அவர்கள் தந்த விளக்கம், தூங்குவோரை நிச்சயம் எழுப்பியிருக்கும்; (தூங்குவதுபோல் பாசாங்கு போடுவோர்பற்றி யாருமே கவலைப்படத் தேவையில்லை).

ஒரு பெண் ஊடகவியலாளர், தான் படித்து, பணிப் பொறுப்பேற்று, இப்படி தெளிவும், துணிவும் கொண்டு கேள்வி கேட்டு, அதுவும் பிரச்சினைக்குரியதாகிக் கொண்டிருக்கும் ‘‘ஸநாதனம்”பற்றி சமய அறிஞரிடம் கேள்வி கேட்க முன்வந்திருப்பதற்கான வாய்ப்பே, ஸநாதனத்தின் பழைய கட்டு உடைந்துள்ளது; அது என்றும் மாறாதது என்ற புரட்டை உடைத்து எடுத்த எடுப்புச் செய்தியாகும்!

சமையல் அறைக்குள்ளேயே இருங்கள்; படித்தால் ஆகாது என்ற ஆண்கள் முன்னால் அமர்ந்து, இப்படி சமயம்பற்றி ‘அனாயாசமாக’ கேள்வி கேட்டு, நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் அறிவுப் பணியே – ‘‘ஸநாதனம் இன்று கட்டுடைந்த ஒன்று” என்பதை அகிலத்திற்குத் தரும் அறிவிப்பாகும்!

பல கேள்விகளுக்கும் பதில் தெளிவாகக் கூறிக்கொண்டே – சொல்லாடலில் மிகவும் விழிப்போடு பேசி, ஒரு கருத்து விருந்தளித்தார் சமய அறிஞர் சுகி.சிவம் அவர்கள்.

குறுகிய அப்பேட்டியின் இறுதிப் பகுதியில் ஒரு முத்தாய்ப்பு வைத்தார்!

முந்தைய பல கேள்விகள் – அமைச்சர் உதயநிதி அவர்களது உரைபற்றிய கேள்வியாகவும், அதற்கான பொதுநிலை – அதன் சார்புள்ள விளக்கமாகவும் கொடுத்து வந்தார்.

இறுதியில், பெரியபுராணம், இராமாயணம்பற்றி ஒரு கருத்துக் கூறி முடித்தார். மிக அருமையாக பல மணிநேர பரப்புரைகளை – பலரும் விளங்கிக் கொள்ளவும், அமைச்சர் உதயநிதியின் உரையைப் பிடித்தாவது தோல்வி வெள்ளத்திலிருந்து நாம் தேர்தல்களில் தப்பி மீள முடியுமா என்றே கணக்குப் போட்டு, ‘துரும்பை இரும்பெனப் பற்றும் குறும்பர்கள்’ கூனிக் குறுகிப் போகும் அளவுக்கு நாசூக்கான நயம் மிகுந்த சொல்லாடல் அது!

மோட்சத்திற்குப் போவதற்கு சில முயற்சிகளை ஆசையுடன் செய்து, கைலாயத்தில் இடம்பெற பெரியபுராணம் பாடி, அங்கே இடம் பிடிக்க சிலர் முயற்சிக்க – வேறு சிலர் இராமாயணம் படித்து அதைக் கூறி வைகுண்டம் சென்று அங்கே நிம்மதியாக அமர்ந்து எல்லாவற்றையும் சுவைக்கலாம் என்று முயற்சிப்பார்கள்.

இப்போது சிலர் ‘ஸநாதனம்’பற்றி இப்படி விவகாரம் கிளப்பி, பார்லிமெண்டில் சென்று அமர்ந்து அனுபவிக்கலாம் என்று நினைக்கிறார்கள் என்ற கருத்தடங்கிய வாசகங்களோடு முடித்தார்!

வாழைப் பழத்தில்கூட அல்ல – அய்ஸ்கிரீமில் ஒரு கீறு கீறி, அழகாக யாருக்கும் புரியும்படியே விளக்கினார்.

வளர்க அவரது  உண்மை பரப்புப் பயணம்!

தூங்கியவர்கள் விழிக்கட்டும்!

ஏங்கியவர்களுக்கு மிஞ்சுவது ஏமாற்றமே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *