நாடு எப்படி போகவேண்டும்? யார் கைகளில் இருக்கவேண்டும்? என்பதற்குஓர் ஆழமான வரைவுத் திட்டமல்ல – ஒரு வழிகாட்டக்கூடிய திட்டத்தை அண்ணல் அம்பேத்கர் உருவாக்கினார்!
சென்னை, நவ.13 நாடு எப்படி போகவேண்டும்? யார் கைகளில் இருக்கவேண்டும்? என்பதற்கு ஓர் ஆழமான வரைவுத் திட்டமல்ல – ஒரு வழிகாட்டக்கூடிய திட்டத்தை அண்ணல் அம்பேத்கர் உருவாக்கினார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?” சிறப்புக் கூட்டம்
கடந்த 8.11.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் நடைபெற்ற ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?” சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.
அவரது நிறைவுரை வருமாறு:
துணிவாக வந்து பேசுகிறார்கள்; தெளிவாகப் பேசுகிறார்கள்!
தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பாக சிறப்புக் கூட்டமாக ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?” என்ற தலைப்பில் நடை பெறும் சிறப்புக் கூட்டத்தின் தலைவர் முனைவர் சாமிநாதன் தேவதாஸ் அவர்களே, வரவேற்புரையாற்றிய தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் துணைத் தலைவர் மானமிகு வேண்மாள் நன்னன் அவர்களே, ஒரு வர லாற்று முக்கியம் வாய்ந்த, ஓர் அரசியல் வகுப்பில் நாமெல்லாம் மாணவர்களாக இருந்து தெரிந்துகொள்ள வேண்டிய அளவிற்கு, அவ்வளவு ஆதாரப்பூர்வமாகவும், தெளிவாகவும், இங்கே அமர்ந்திருக்கின்றவர்களுக்கு மட்டுமல்ல இந்த உரை – உலகம் முழுவதும் உள்ளவர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு – ‘Is Speak for the wider Audience” என்று சொல்வார்கள். உலகெங்கும் உள்ள அத்துணை பேரும் ஏற்கக்கூடிய அளவில் மிக அற்புதமாகப் பேசினார், நமது சிறப்பு விருந்தினரான ஜி.பாலச்சந்திரன் அவர்கள். ஏறத்தாழ ஒரு மணிநேரம் பேசியிருக்கிறார். இதை எதிர்பார்த்துத்தான் நாங்கள் அவரை இங்கே அழைத்தோம். நான் அடிக்கடி உரையாற்றுகின்றவன். எனக்கு அதிக நேரம் வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இவரைப் போன்றவர்கள் உரையாற்றுவதுதான் மிகவும் முக்கியம். இவர்களைப் போன்றவர்கள் துணி வாக வந்து பேசுகிறார்கள்; தெளிவாகப் பேசுகிறார்கள். மிக அற்புதமான கருத்துகளைச் சொன்னார்.
இங்கே இருப்பவர்களில் அதிகம் பேர் ஓய்வு பெற்ற வர்கள்தான். அவ்வளவு பேரும் தன்பெண்டு, தன் பிள்ளை, தன்வீடு என்றில்லாமல், இந்த சமுதாயத்தைப் பற்றி சிந்திப்பதினால்தான், இன்றைக்கு மூதறிஞர் குழுவில் இப்படிப்பட்ட சிறப்புக் கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவ்வப்பொழுது இது போன்ற ஓர் அரசியல் கல்வியைக் கொடுக்கவேண்டும்.
உங்களுக்கெல்லாம் அதிசயமாக இருக்கும்; தந்தை பெரியார் அவர்கள் தேர்தல் அரசியலில் நிற்காதவர்கள். ஆனால், முடிவு செய்யக்கூடியவர்.
அரசியலுக்கே போகாத ஓர் இயக்கம்; தேர்தலில் நிற்காத ஓர் இயக்கம்
அப்படி இருக்கும்பொழுது, அரசியலுக்கே போகாத ஓர் இயக்கம்; தேர்தலில் நிற்காத ஓர் இயக்கத்தினுடைய நிறுவனத் தலைவர்; சுயமரியாதை இயக்கத் தலைவர்; சமூகப் புரட்சி செய்யக்கூடிய தலைவர் – தன்னுடைய அறக்கட்டளையை உருவாக்கும்பொழுது ‘‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்” என்ற பெயரால், சுமார் 70 ஆண்டுகளுக்குமுன் உருவாக்கக் கூடிய அந்த சூழலில், ஒரு பெரிய செய்தி என்னவென்றால் நண்பர்களே, அதனுடைய நோக்கங்கள் என்று சொல்லும்பொழுது,
அரசியல் கல்வியை மக்களுக்குக் கொடுக்கவேண்டும்; மக்களிடையே பரப்பவேண்டும்!
To Propagate in Cultivate Political Education என்ற வார்த்தையைப் போட்டிருக்கிறார். இந்தத் தகவல் நிறைய பேருக்குத் தெரியாது. அரசியல் கல்வியை மக்களுக்குக் கொடுக்கவேண்டும். மக்களிடையே பரப்பவேண்டும்.
இன்றைக்கு அந்தப் பணியை – அய்யா விரும்பிய பணியை தமிழ்நாடு மூதறிஞர் குழுப் பொறுப்பாளர்கள் – உங்களைப் போன்றவர்கள் செய்வதற்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் – வாழ்த்துகள். இது தொடர வேண்டும்.
அதேபோல, இங்கே சிறப்பான வகையில், அய்யா பாலச்சந்திரன் அவர்கள் அருமையான கருத்துகளை எடுத்துச்சொன்னார்கள். பலரும் இதைக் கேட்பது என்பது மட்டுமல்ல; இன்றைய இளையதலைமுறை யினருக்குப் போய்ச் சேரவேண்டும். அதுதான் அதனுடைய அடிநாதம்.
18 வயதாகும் இளைஞர்களுக்கு வாக்குரிமையை அளித்தவர் சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங்
இளைய தலைமுறையினர் எங்கோ செல்கிறார்கள் என்று நினைக்கக்கூடாது. நாடு நாங்கள்; எங்களிடம்தான் நாடே இருக்கிறது. 18 வயதானவுடன் வாக்களிக்கும் உரிமையை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருக்கும்பொழுது செய்தார்.
வாக்களிக்கும் வயது வரம்பை 21 லிருந்து 18 வயதாகக் குறைத்து, இளைஞர்களுக்குப் பங்கு இருக்கவேண்டும் என்று ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக அதனைச் செய்தார்.
பயணம் சரியான பாதையில் போகிறதா? என்பதுதான் முக்கியம்!
இளைஞர்கள் வேறு விதமான திசைக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கிய நிலையில், அவர்கள் எப்படி சரியான திசைக்குப் போகவேண்டும்? நாடு எங்கே செல்லுகிறது? என்று பார்க்கும்பொழுது, பயணங்கள் போவது முக்கியமல்ல; அந்தப் பயணம் சரியான பாதையில் போகிறதா? என்பதுதான் மிகவும் முக்கியம்.
பாதை இல்லாத ஊருக்கெல்லாம் பாதை அமைப்பது ஈரோட்டுப் பாதை!
நம் நாட்டைப் பொறுத்தவரையில், தமிழ்நாட் டில் கடந்த நூறு ஆண்டுகளில் நீதிக்கட்சி, சுய மரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம், இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் என்று இப்படி வரிசையாக அது வந்துகொண்டிருந்தாலும், அந்தப் பாதை எங்கே செல்லுகிறது? சரியான பாதையில் செல்லுகிறதா? என்றால், நிச்சயமாக சரியான பாதையில் செல்லுகிறது என்று சொல்லி, அதனுடைய நோக்கத்தை அய்யா பாலச்சந்திரன் விளக்கினார். பாதை இல்லாத ஊருக்கெல்லாம் பாதை அமைப்பது ஈரோட்டுப் பாதை.
ஆகவே, இந்த ஈரோட்டுப் பாதையில் செல்லுகிற பொழுது, அதற்கு எதிர்ப்புகள், சங்கடங்கள், மேடு பள்ளங்கள் அத்தனையும் உண்டு. அவை அத்தனை யையும் சமாளிக்கக் கூடிய அளவிற்கு வந்து, இன்றைக்கு பெரிய குறிப்பிட்ட அளவிற்கு வந்து, தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி, தென்னிந்தியா என்று சொல்லக்கூடிய தென்னாட்டு எல்லையைத் தாண்டி, இந்தியா முழுவதற்கும் இன்றைக்கு மிக முக்கியமாக பெரியாருடைய ஈரோட்டுப் பாதைதான் இன்றைக்கு வழிகாட்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நாடு எங்கே செல்லவேண்டுமோ, அங்கே சென்று கொண்டி ருக்கிறது. அதை முழுமைப்படுத்தவேண்டும் என்பதற் காகத்தான் இதுபோன்ற பிரச்சாரங்களும், தலைப்புகளும் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
இப்பொழுது வேடிக்கை என்னவென்றால், இந்தியா விற்கு எல்லாத் துறைகளிலும் முன்னோட்டமாக எதை யும் செய்வது தமிழ்நாடு – பெரியார் மண் – பெரியார் நாடு.
‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’
இந்தியாவிற்கே இது முன்னோடி; எல்லோருக்கும் அதிசயமாக இருக்கும். நூறு ஆண்டுகளுக்கு முன் ‘‘பெண் ஏன் அடிமையானாள்?” என்று கேட்டவர் அல்லவா பெரியார் என்று சொல்லி, அந்தப் பயிற்சியை கொடுக்கிறார்கள்.
ஆகவே, இந்தக் கொள்கையை அடியோடு மாற்றவேண்டும் என்பதற்கான ஒரு பெரிய தத்துவப் போராட்டத்திற்கு, நூறு ஆண்டுகளுக்கு முன்பு எதிரே இருக்கின்ற சித்தாந்தம்தான் ஆர்.எஸ்.எஸ்.
சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது 1925. அதற்குமுன்பு, திராவிடர் இயக்கம் அரசியல் ரீதியாக இருந்தது என்பதை அய்யா பாலச்சந்திரன் அவர்கள் அழகாகச் சொன்னார். நீதிக்கட்சி பணக்காரர்கள் கட்சி யாக இருந்தது. பணக்காரர்கள் எந்தவிதமான தவறும் செய்யாமல், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கான தத்துவத்தை, சமூகநீதி தத்துவத்தை ஆட்சிக்கு வந்தபொழுது செய்தார்கள்.
அவர்கள் ஆள வந்தார்கள் – ஆனால், யாருக்காக ஆண்டார்கள்?
அழகாகச் சொன்னார் அய்யா பாலச்சந்திரன் அவர்கள்; தங்களுக்காக ஆளவில்லை; தங்களுடைய வர்க்கத்திற்காக ஆளவில்லை. தங்களுடைய ஜாதிக்காக ஆளவில்லை.
யார் யார் பாதிக்கப்பட்டார்களோ, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு, பெண்களுக் காகத்தான் தொடங்கினார்கள்.
நவ.20: நீதிக்கட்சியினுடைய நிறுவன நாள்!
இன்றைக்கு 8 ஆம் தேதி; இன்னும் 12 நாள்கள் சென்றால், நவம்பர் 20. நீதிக்கட்சியினுடைய நிறுவன நாள்.
இன்றைக்கு மக்களுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்பது முழுக்க முழுக்க ஜாதியைக் காப்பாற்றுவதற்காகத்தான். இதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை.
தத்துவகர்த்தாவாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வழி நடத்தியவர் கோல்வால்கர். அவருடைய கருத்துகள் அடங்கிய புத்தகத்தில் ஜாதி ஒழிப்பு என்று சொல்லவே கூடாது என்றார்.
இந்திய அரசமைப்புச் சட்டம், சுதந்திர வரலாற்றைப் பற்றியெல்லாம் அய்யா பாலச்சந்திரன் அவர்கள் இங்கே சொன்னார்.
இந்தியாவினுடைய வரலாறு சரியாக எழுதப்படவேண்டும் என்றால், அது தென்னாட்டில் தொடங்கி நடத்தப்படவேண்டும்
வரலாறு எழுதப்படுகிற நம் நாட்டில், சரியான வரலாறு – கீழடி அகழாய்வு, கல்வெட்டு இவற்றைப் பற்றியெல்லாம் தோண்டி எடுக்கப்பட்டாலும், அதற்குரிய இடம் ஏன் கிடைக்கவில்லை என்றால், இந்தியாவினுடைய வரலாறு சரியாக எழுதப்பட வேண்டும் என்றால், அது தென்னாட்டில் தொடங்கி நடத்தப்படவேண்டும் என்று முதலில் தெளிவாக எடுத்துச் சொன்னார். மனோன்மணியம் சுந்தரனார் காலத்திலிருந்து, அண்ணா அவர்கள் காலத்திலிருந்து வரவேண்டும்.
ஆனால், வரலாறு இன்றைக்கு வெவ்வேறு வகையிலும் மறைக்கப்பட்டும், திரிக்கப்பட்டும், இருட்டடிக்கப்பட்டு இருப்பதை அய்யா பாலச் சந்திரன் அவர்கள் தொட்டுக் காட்டினார்.
இந்தியாவில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், எந்த அரசு வந்தாலும் இந்திய அரசமைப்புச் சட்டம்மீதுதான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, ஆட்சியை நடத்தவேண்டும்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பல்வேறு சோதனைகளைச் சந்தித்தார்
இந்த அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு தனித் தன்மையானது. இதனை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய தலைமையில் வரைவுக்குழு அமைக் கப்பட்டது. அப்பொழுது அவர் பல்வேறு சோதனை களைச் சந்தித்தார். சாதாரணமான சோதனையல்ல; கடுமையான சிக்கல் நிறைந்த சோதனைகள்.
ஆறு பேர் அடங்கிய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு!
கடைசியாக அரசமைப்புச் சட்டம் உருவாக்கப் பட்டபொழுது 6 பேர் கொண்ட குழுதான் இருந்தது.
ஒருவர் அம்பேத்கர் என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். இன்னொருவர் இஸ்லாமிய சமுதாயத்தி னுடைய பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு அதிகமாக அவர் பங்கேற்கவில்லை – சையத் முகமது சாதுல்லா.
மற்ற நான்கு பேர் யார்? என்பதை நன்றாக கவனியுங்கள்.
ஒருவர் குஜராத்தைச் சேர்ந்த உயர்ஜாதிப் பார்ப்பன ரான கே.எம்.முன்ஷி.
மற்ற மூன்று பேர் யார்? என்று சொன்னால்,
அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். இவருடைய பெருமை என்னவென்று சொன்னால், தொடக்கக் காலத்திலிருந்தே வகுப்புரிமையை எதிர்த்துக் கொண் டிருந்தவர் என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும். தமிழ்நாட்டில் பிரபலமான அட்வகேட் ஜெனரலாக இருந்தவர்.
அடுத்தவர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி,
அதற்கடுத்தவர் என்.கோபாலசாமி அய்யங்கார்
நான்கு பேர் அவர்கள். அந்த நான்கு பேர் மத்தியில், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் சையத் முகமது சாதுல்லா அவர்கள் அதிகமாகப் போராடுவதாக இல்லை.
மற்ற நான்கு பேருக்கும் ஈடுகொடுத்து, தன்னுடைய கருத்துகளையெல்லாம் எங்கெங்கே முடியுமோ அங்கெங்கெல்லாம் செய்துவரவேண்டும் என்று ஒரு மூச்சுத் திணறலோடு ஒருவர், எப்படி மூச்சு விடுவதற்குப் போராடுவாரோ அதுபோன்று அவர் போராடினார்.
தன்னுடைய கருத்துகளை உள்ளே வைத்துவிட வேண்டும்; அந்த அளவிற்கு நடந்த வரைக்கும் பெரிய லாபம் என்று அவருடைய மனவோட்டம் இருந்திருக்கவேண்டும் அம்பேத்கருக்கு.
‘‘என்னை ஒரு வாடகைக் குதிரையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்!’’ – அம்பேத்கர்!
அதனால்தான், பின்னாளில் அவர் மனப் புழுக்கத்தோடு மாநிலங்களவையில் சொன்னார், ‘‘நான்தான் செய்தேன், நான்தான் செய்தேன் என்று என்மேல் பழி போடுகிறீர்களே, என்னால் சுதந் திரமாக செயல்பட முடிந்ததா?” என்று கேட்டு விட்டு, ‘‘என்னை ஒரு வாடகைக் குதிரையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்’’ என்று.
ஆனாலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் பகுதியை உருவாக்கும்பொழுது, எப்படி உருவாகவேண்டும் என்பதில் அவர் வெற்றி பெற்றார்.
ஓர் ஆழமான வரைவுத் திட்டமல்ல – ஒரு வழிகாட்டக்கூடிய திட்டத்தை உருவாக்கினார்
அதை மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள் கிறார்கள் என்று சொல்லும்பொழுது, இந்தக் கொள்கையை எதிர்த்தவர்கள், உள்ளே இருக் கின்றவர்கள் எதிர்த்த பொழுது, அவர்களைத் தாண்டி அம்பேத்கர் அவர்கள் கொடுத்தபொழுது, முதலில் ஆரம்பித்தார் – நாடு எப்படி போக வேண்டும்? யார் கைகளில் இருக்கவேண்டும்? என்பதற்கு ஓர் ஆழமான வரைவுத் திட்டமல்ல – ஒரு வழிகாட்டக்கூடிய திட்டத்தை உருவாக் கினார் என்பதுதான் மிகவும் முக்கியம்.
அரசமைப்புச் சட்டத்தின் முகப்பு
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், ‘‘இந்தியா வினுடைய மக்களாகிய நாம்” என்றுதான் ஆரம்பித்தார்.
WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:
அய்ந்து அம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு.
குடிமக்களுடைய அரசாக இருக்கவேண்டும்!
ஜனநாயகத்தில்கூட வேறு விதமாக இருக்கக்கூடாது; அது குடியரசாக இருக்கவேண்டும். குடிமக்களுடைய அரசாக இருக்கவேண்டும் என்றார்.
(தொடரும்)