அய்.அய்.டி. தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடி மாணவிக்கு வீடு மற்றும் மடிக்கணினி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

viduthalai
3 Min Read

சென்னை, ஜூன் 14 சென்னை அய்.அய்.டியில் உயர்கல்வி பயில தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவிக்கு வீடு மற்றும் மடிக்கணினியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

பழங்குடி மாணவி

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கிடும் வகையில் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பெண்கல்வி முன்னேற்றத்திற்காக புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வருகிறார்.

முதலமைச்சரின் சிறப்பான இத்திட்டங்களின் பலனாக அனைத்து தரப்பு மாணவ, மாணவியர்களுக்கும் சிறப்பான கல்வி வழங்கப்பட்டு வருவதுடன், தேசிய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு 49 சதவீதம் என்ற அளவில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. சேலம் மாவட்டம், கல்ராயன்மலையை சேர்ந்த கருமந்துறை, அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயின்ற ஆ.ராஜேஸ்வரி என்ற பழங்குடியின மாணவி அண்மையில் நடைபெற்ற ஜே.இ.இ. தேர்வில் அகில இந்திய அளவில் 417ஆவது இடத்தில் தேர்ச்சி பெற்று சென்னை அய்.அய்.டி.யில் உயர்கல்வி பயில தகுதி பெற்றுள்ளது பாராட்டுக்குரிய சாதனையாகும்.

மலைவாழ் இன ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ஆ.ராஜேஸ்வரியின் தந்தை கடந்த 2023-இல் உடல்நலக் குறைபாடு காரணமாக இறந்துவிட்டார். தாயார் ஆ.கவிதா, அக்கா ஜெகதீஸ்வரி, அண்ணன் சிறீ கணேஷ் ஆகியோருடன் கருமந்துறை மலைப்பகுதியில் வசித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே படிப்பில் சிறந்து விளங்கிய மாணவி ஆ.ராஜேஸ்வரி 10ஆம் வகுப்பில் 438 மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பில் 600க்கு 521 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். ஆ.ராஜேஸ்வரி தனது பள்ளி தலைமை ஆசிரியர் வழிகாட்டுதலின்படி பழங்குடியின நலத்துறையின் சிறப்பு வகுப்புகளிலும், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செயல்பட்டு வரும் அரசு பயிற்சி மய்யத்திலும் சேர்ந்து உயர்கல்வி நுழைவுத்தேர்விற்கு தயாராகி வந்தார்.

வீடு ஒதுக்கீடு

இந்நிலையில் JEE Mains & JEE Advance தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 417-ஆவது இடத்தில் தேர்ச்சி பெற்று சென்னை அய்.அய்.டி.யில் பயில தகுதி பெற்றுள்ளார். மேலும் JEE Advanced தொடர்பான கவுன்சிலிங்கிற்காக தற்போது குமிழி ஏகலைவா உண்டி உறைவிட மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பழங்குடியினர் நலத்துறை மூலம் வாசுகி பவுண்டேசன் மூலம் நடத்தப்படும் உயர்கல்விக்கான பயிற்சி பெற்று வருகிறார். இவர் சென்னை அய்.அய்.டி.யில் Aerospace Engineering பாடப்பிரிவில் உயர்கல்வி பயில விருப்பம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவி ஆ.ராஜேஸ்வரி சென்னை அய்.அய்.டி.யில் உயர்கல்வி பயில தகுதிப் பெற்றுள்ளதை அறிந்தவுடன், மாணவி ஆ.ராஜேஸ்வரிக்கு எனது சல்யூட் (Salute) என பாராட்டி வாழ்த்து தெரிவித்து, அவரது உயர்கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் 12.6.2025 அன்று சேலம் மாவட்ட சுற்றுப் பயணத்தின்போது, பழங்குடியின மாணவி ஆ.ராஜேஷ்வரியை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்து, பழங்குடியினர் நலத்துறையின் தொல்குடித் திட்டத்தின் கீழ் ரூ.5.73 இலட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினையும், உயர்கல்வி பயில்வதற்கு உதவிடும் வகையில் ரூ.70,000 மதிப்பிலான மடிக்கணினியையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து மாணவி ராஜேஸ்வரி கூறும்போது, ‘‘முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்னை நேரில் பாராட்டி, மடிக்கணினி வழங்கினார். மேலும் வீடு கட்டி கொடுப்பதற்காக ஆணையும் வழங்கினார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *