பெரியார் உலகம்
- சுயமரியாதைச் சுடரொளி பூங்கா
Self Respect Torch Bearer Park
- நன்கொடையாளர் பெயர் பதிவேடு தூண்கள்
Donors Pillars
- நீர் ஊற்று | WATER PARK
- ஒளி – ஒலி திறந்தவெளி அரங்கம்
AMPHITHEATRE
- தந்தை பெரியார் சுடர் | Periyar Ayya Torch
- பீடம் | PODIUM BUILDING
அ. வரவேற்பிடம்
Ground Floor Lobby
ஆ. பெரியார் வாழ்க்கை வரலாற்றுக் கூடம்
Periyar art Gallery
இ. பெரியார் அருங்காட்சியகம்
Periyar Museum
ஈ. பெரியார் புத்தக நிலையம்
periyar book house
உ. மினி திரையரங்கம்
Audio visual room
- நூலகம் | LIBRARY
- ஆராய்ச்சி மய்யம் | RESEARCH CENTRE
- உணவகம் |FOOD COURT
இந்த நவமணிகளும் என்ன என்று புரிகிறதா? இதற்கு மேலும் பிரமாண்டம் ஒன்று உண்டு!
படியுங்கள் – கண்கொட்டாது படியுங்கள் – கேளுங்கள் காது கொடுத்துக் கேளுங்கள்.
இவையெல்லாம் எங்கு – எந்த இடத்தில்?
திருச்சியையடுத்த சிறுகனூரில் ‘பெரியார் உலகம்!’ ‘பெரியார் உலகம்’ என்று நமது தலைவர் – தமிழர் தலைவர் உணர்ச்சிப் பொங்கச் சொல்லிக் கொண்டு இருக்கிறாரே – அவற்றின் தோராயமான பொருளடக்கம் தான் இது!
40 அடி பீடம் – 95 அடி உயரமான தந்தை பெரி யாரின் சிலை! (சுயமரியாதைச் சிலை’ – Statue of
Liberty) நினைக்கும் போதே நம் தலைகள் நிமிர்கின்றன.
27 ஏக்கர் நிலப் பரப்பில் உள்நாட்டவரும் சரி, வெளி நாட்டவரும் சரி கண்டு களித்து அறிவு மணம் நுகர்ந்து செல்லும் சூரிய ஒளி பாய்ச்சும் சுற்றுலாத்தலமாக உருவாகி, மக்கள் திரளின் மொய்ப்பாக வரலாற்றில் நிமிர்ந்து நிற்கப் போகிறது.
‘பெரியார் ஒரு கால கட்டம் – ஒரு சகாப்தம் – ஒரு திருப்பம்!’ என்று சொன்னாரே அறிஞர் அண்ணா!
‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்றாரே நமது புரட்சிக் கவிஞர்.
‘இயற்கையின் புதல்வர்’ என்றாரே வ.ரா.
(வ. இராமசாமி அய்யங்கார்)
‘தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்’ என்று விருது வழங்கியதே யுனெஸ்கோ மன்றம் – 1970!
அந்த மாபெரும் சிந்தனை ஊற்று – பேரிமயமாம் தந்தை பெரியாரின் பெயரில் அமையவிருக்கும் பெரியார் உலகின் ஒரு பொருளடக்கம் தான் இது.
2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கவுதமப் புத்தருக்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் கம்பீரமான மிக உயர்ந்த சிலைகள் உண்டு – நினைவிடங்கள் உண்டு!
19ஆம் நூற்றாண்டில் பிறந்து, ஒரு நூற்றாண்டை நெருங்கும் அளவுக்கு வாழ்ந்து, ‘அவர் கால்படாத பிடிமண் கிடையாது’ என்று சொல்லும் அளவுக்குத் தமிழ் மண்ணை அளந்து – மாலை நேரங்களில் மைதானங்களில் தமிழ்நாட்டின் முதல் பேராசிரியராக பகுத்தறிவுப் பாடம் நடத்தினாரே – ஜாதி ஒழிப்புச் சங்கநாதம் செய்தாரே – பெண்ணடிமை ஒழிப்புப் பீரங்கியாக முழங்கினாரே – சமூகநீதியின் சமுத்திரமாகப் பொங்கி எழுந்தாரே – பல்லாயிரம் ஆண்டு காலமாக பழைமைச் சீழ் பிடித்துக் கிடந்த மூடநம்பிக்கைகளின் ஆணி வேர் – சல்லி வேர் சகிதமாக வெட்டி வீழ்த்தினாரே – ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்ற பொதுவுரிமை – பொதுவுடைமைச் சித்தாந்தப் பெரு மழை பொழிந்தாரே – உள்ளதைப் பங்கிட்டு உண்பது – உழைப்பை பங்கிட்டுச் செய்வது என்ற புது வெளிச்சத்தை மானுடத்துக்குத் தந்து புரட்சிப் புதுப்பாதை அமைத்துத் தந்தாரே – ஆம் அந்தப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கான – காலம்தோறும் நின்றுபேசும் நினைவகம்தான் அந்தப் ‘பெரியார் உலகம்!’
அய்யாவுக்குப் பின்னும், அன்னை மணியம்மையாருக்குப் பிறகும் – இந்த இயக்கம் இருக்குமா என்று ‘‘ஆரூடம்’’ கணித்துக் கிடந்த கிணற்றுத் தவளைகளை வாயடைக்கச் செய்து ‘பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம்!’ என்ற நிலைக்கு மேலால் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறாரே, நமது தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தொலைநோக்குச் சிந்தனையில் உருவான கருதான் இந்தப் பெரியார் உலகம்!
கரு உருவானால் போதுமா? அதனை வானளாவ உருவாக்கிக் காட்ட வேண்டாமா?
உலகம் உள்ள வரைக்கும் இந்த உலகத் தலைவரின் உயர் எண்ணங்களின் மணம் வீசிக் கொண்டிருக்க வேண்டாமா?
உயிர் எழுத்தாகவும், மெய்யெழுத்தாகவும் வரும் தலைமுறைப் படித்துப் பயனுறு வாழ்வின் வசந்தத்தைச் சுவைக்க வேண்டாமா?
‘பெரியாருக்கு முன் – பெரியாருக்குப் பின்’ என்ற புத்தம் புதுபுரட்சி வரலாற்றை காலத்தின் மண்ணில் கால் பதித்து கற்றுக் கொடுக்கும் பேராசானாக வடிவமைக்க வேண்டாமா?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் திருக்குறளை யாத்த திருவள்ளுவர் குறித்துப் பெருமையுடன் பேசிக் கொண்டு இருக்கிறோம்.
அதிலும் எத்தனை எத்தனை இடைச் செ(ா)ருகல்கள் – மடைமாற்றங்கள்! வள்ளுவனுக்கே பூணூல் மாட்டி ‘வாதாபி ஜீரணம், வாதாபி ஜீரணம், ஜீரணம் ஜீரணம், வாதாபி ஜீரணம்!’ ஆக்கிய கூட்டமாயிற்றே!!
அந்த வஞ்சகம் இங்கு எடுபடாது – காரணம் இவர் பகுத்தறிவுப் பகலவன் – கிட்டே நெருங்கினால் சுட்டுப் பொசுக்கி விடும் என்ற வகையில் காலத்தை வென்று நிற்கும் வெண்தாடி வேந்தருக்கான பெரியார் உலகம்.
சிந்தனை வளர்ச்சிக்கு வகை செய்யும் அவர்தம் தத்துவத்தின் ஒவ்வொரு சொல்லும் முனை மழுங்காமல் வடிவமைக்கப்படும்.
புதிய சித்தாந்தத்தின் புத்தகமாகப் பூத்துக் குலுங்கும் அறிவு மலர்ச்சோலையாக வாடாமல் வளர்ந்து நிற்கும்.
தந்தை பெரியாரின் புகழைப் பரப்புவதற்காக அல்ல– அவற்றை எல்லாம் கடந்த அறிவுலக ஆசான் அவர்.
இமயமலையில் ஏறி காதில் பூசுற்றலாம் – இவரோ எரிமலை! இடைச் செருகலுக்கு இடம் அளிக்காத – இரு பொருளுக்கு வாய்ப்பு அளிக்காத – வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற வகையில் துல்லியமாகக் கருத்துக் கதிர் வீசும் காலத்தை வென்ற கதிரவன்!
அடங்கி ஒடுங்கிக் கிடந்த மக்களுக்குச் சுயமரியாதை என்னும் முதுகெலும்பைத் தந்த சுத்த சுயம்பிரகாசம்.
அவர் உழைப்பை உண்டு உயிர் வாழாத ஒரே ஒரு மனிதனை இம்மண்ணில் காட்ட முடியுமா?
அவர் கொளுத்திய தீயால் தானே ஆதிக்கக் குப்பைகள் சாம்பலாயின! அவர் கொட்டிய உழைப்பின் வியர்வையால்தானே நம் கண்களுக்குக் கல்வி ஒளி கிடைத்தது!! அவர் கண்ட களங்கள்தானே உத்தியோக படிக்கட்டுகளை மிதிக்கும் தெம்பை நம் கால்களுக்குக் கொடுத்தன!!!
எல்லா வீதிகளிலும் காலில் செருப்பணிந்து கம்பீரமாக வீறு நடை போட்டுச் செல்லுகிறோமே இந்த வீரம் – இந்த வெண்தாடித் தலைவரால் – அவரின் வீச்சால் கிடைத்த விருது தானே!
‘கும்பிடுகிறேன் சாமி!’ என்று குனிந்த நம் முதுகுகள் நிமிர்ந்தது எப்படி?
‘பொட்டச்சி’ என்று பெண்ணினத்தை மலத் துணியாக நினைத்த மமதையின் மண்டையைப் பிளந்த சம்மட்டி யார் கொடுத்தது? அவர் தந்த அறிவாயுதம் அல்லவா?
‘திராவிடம்’ ‘திராவிடன்’ என்ற தீரமான – தீர்க்கமான இன அடையாளத்தை போர் வாளாக நம் கையில் அவர் கொடுத்த ஆயுதம் தானே ஆரியத்தை அலற வைக்கிறது – துடிதுடிக்க வைக்கிறது.
வடக்கே தலை தூக்கும் ஸநாதன சித்தாந்தம் தெற்கே திரும்பிப் பார்க்க அஞ்சுகிறதே – அதற்கான போராயுதம் திராவிடத்துவம் தானே!
ஆம் – இன்று நடப்பது இரு சித்தாந்தங்களுக்கான போராட்டம் – எளிதாகச் சொன்னால் ஆரியர் – திராவிடர் போராட்டம்.
இராமாயண காலம் முதல் நடக்கிறது. இப்பொழுது திராவிட சித்தாந்தத் தீ வடக்குத் திசையிலும் வீச ஆரம்பித்து விட்டது.
வட நாட்டிலும் பார்ப்பன ஆதிக்கம் வீழ்ச்சி பெற திராவிட இயக்கம் தேவை என்று ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ எழுதவில்லையா!
ஆம்! இவற்றை ஆணித்தரமாக நிலை நிறுத்த – நம் சந்ததிகளும் சுவாசிக்க – ‘சுதந்திரத்துக்கும், சுயமரியாதைக்கும் அதிக தூரம் இல்லை’ என்ற தந்தை பெரியாரின் மானுட உரிமை எக்காலத்திலும் நின்று நிலைக்க நிறுவப்படுவது தான் சிறுகனூர் ’பெரியார் உலகம்!.’
ஏதோ சாதாரணமானதாக எண்ணி விடாதீர்கள்! எதிர் காலத்துக்கான உத்தரவாதம் –
இதை நிர்மாணிப்பது என்பது எளிதான ஒன்றல்லதான்! அதே நேரத்தில் முடிக்க முடியாததும் இல்லை.
கவுதம புத்தரைப்போல் சுகபோகங்களை எல்லாம் தூக்கி எறிந்து, நாள்தோறும் நாள்தோறும் எளிய வாழ்வை மேற்கொண்டு, நாக்கும் மூக்கும் வெறுத்தாலல்லாது கிடைத்ததை உண்டு, இரவும், பகலும் ஒன்றே என்று இறுதி மூச்சு அடங்கும் வரை உழைத்த ஒரு பெரும் தலைவர்.
இன்னொரு மாநிலமான வைக்கம் வரை தம் குடும்பத்தாருடன் சென்று களம் கண்டு வைக்கம் வீரராக வெளி வந்தாரே!
திருவனந்தபுரம் சிறைச் சாலையில் கையிலும், காலிலும் விலங்கு போட்டு, கொலைகாரக் கைதிகளுடன் கடும் உழைப்பைக் கொட்டிய அந்தக் கொடுமையை நினைத்தால் நெஞ்சம் ரத்தக் கண்ணீர் வடிக்கும்.
இந்த வரலாற்றை எல்லாம் சொல்ல வேண்டாமா? மனிதன் என்றால் ஆறறிவுள்ளவன் – பகுத்தறிவுவாதி. அதை மழுங்கடிக்கலாமா? சிந்தனை என்னும் அந்தச் சிறப்பான அறிவைச் சீழ் பிடிக்கவிடலாமா?
‘கடவுளை மற – மனிதனை நினை;
‘சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு’
‘மானமும் அறிவும் மனிதர்க்கழகு’ என்று மானுடத்துக்கு வற்றாத அறிவுச் செல்வத்தை புகட்டிச் சென்றுள்ள தந்தை பெரியாருக்குக் காலத்தை வென்று நிலைக்கும் ‘‘பெரியார் உலகம்!’’
உங்கள் பங்கு என்ன தோழர்களே!
அவரால் பலன் பெற்ற நாம் ஒவ்வொருவரும் நன்றி உணர்ச்சியைக் காட்ட வேண்டாமா?
தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8.47 கோடி தலைக்கு 10 ரூபாய் என்றாலே காரியம் முடிந்து விடுமே!
அரசுப் பணியாளர்கள் அள்ளிக் கொடுக்கலாம் – (80G) வரி விலக்கு உண்டு.
தமிழினச் செல்வந்தர்கள் இலட்சங்களைக் கொடுக்கலாம்.
கதவைத் தட்டுங்கள் தோழர்களே! தட்டுங்கள் திறக்கட்டும் – கேளுங்கள் கொடுக்கப்படும்.
நமது தமிழர் தலைவரின் சிந்தனைவோட்ட மெல்லாம் ஒவ்வொரு நொடியும் ‘பெரியார் உலகமாகவே’ இருக்கிறது!
கை கொடுங்கள் காரியம் கை கூடும்!
பெரியார் உலகம் – ‘உலக மக்களின் உலகம்’
உற்றார், உறவினர்கள், நண்பர்கள், உற்ற நண்பர்கள் உலகெங்கும் இருக்க மாட்டார்களா?
முயலுங்கள் முடியும்!
நம்மால் முடியாதது மற்றவர்களால் முடியாது – மற்றவர்களால் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்.
வெல்வோம் – பெரியார் உலகிற்குள் செல்வோம்!
குறிப்பு: Psrpi – Periyar World என்ற பெயரில் காசோலை, வரைவோலை அல்லது NEFT (மூலம் டிரான்ஸ்பர்) NAME- PSRPI-PERIYAR WORLD, BANK-IOB, BRANCH-VEPERY, Current A/C NO.232002000000095, IFS CODE-IOBA0002320 அனுப்ப வேண்டுகிறோம்.