உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்வதா? மணிப்பூரில் பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி

Viduthalai
1 Min Read

இம்பால், ஜூன் 12- மணிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

குழுக்களுக்கிடையே வன்முறை

மணிப்பூர் மாநிலத்தில் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மெய்தி, குகி இன குழுக்களுக்கு இடையேயான வன்முறையில் 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட னர். இதனால் முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலகியதைத் தொடர்ந்து, மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூரில் தடை உத்தரவுகளை மீறி பல பகுதிகளில் பாதுகாப்புப் படையினருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனத் தலைவர் கைது

இதற்கிடையே கடந்த 9ஆம் தேதி இம்பால் மேற்கு மாவட்டத்தில் சாலைகளில் உள்ள தடைகளை அகற்ற முயன்ற போது பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இதில் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அரம்பாய் தெங்கோல் அமைப்பின் தலைவர் கனன் சிங் உள்பட சிலர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மெய்தி இனக்குழுவின் முக்கிய தலைவர் கைதான தகவல் வெளியானதை தொடர்ந்து அங்கு இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக மாறியதால் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.

பெண்கள் போராட்டம்

பாதுகாப்புப் படை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போயினாவோ பங்கீஜாம் (வயது 39) என்பவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். இதுபோல் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஈடுபட்டதற்காக 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

மெய்தி இன தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து இம்பாலில் பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *