பாடநூல் கழக நூல்களை இணைய வழியில் பெறும் வசதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

viduthalai
3 Min Read

சென்னை, ஜூன் 11- பாடநூல் கழக நூல்களை இணைய வழியில் பெறும் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்கா திறப்பு விழா நேற்று (10.6.2025) நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் திசைதோறும் திராவிடம், முத்தமிழ் அறிஞா் மொழிபெயா்ப்புத் திட்டம், இளந்தமிழா் இலக்கியத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின்கீழ் உருவாக்கப்பட்ட 84 நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

இணைய வழியில் விற்பனை:

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமானது மேனாள் முதலமைச்சர் கலைஞரால் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு பதிப்பிக்கப்படும் நூல்களை வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் எளிதில் வாங்கும் வகையில், இணையவழி www.tntextbooksonline.com விற்பனை வசதி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நூல்களை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

காணொலியில் நூலகக் கட்டடங்கள் திறப்பு:

பல்வேறு மாவட்டங்களில் நூலகங்களுக்காக கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தாா். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கட்டப்பட்ட முழுநேர கிளை நூலத்துக்கான புதிய கட்டடத்தையும் திறந்து வைத்ததுடன், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 70 சிறப்பு நூலகங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தாா்.

மாநிலத்தில் 821 பொது நூலகங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 352 நூலகக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நூலகங்கள், நூலகக் கட்டடங்கள் திறப்பு விழா நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், சென்னை மேயா் ஆா்.பிரியா, சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநா் பொ.சங்கா், தமிழ்நாடு எஸ்சி., எஸ்டி., மாநில ஆணைய துணைத் தலைவா் இமயம் உள்பட பலா் பங்கேற்றனா்.

புத்தகப் பூங்கா

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்தப் புத்தகப் பூங்காவில் பல்வேறு பதிப்பாளா்களால் வெளியிடப்படும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள உயா்கல்வி பாடநூல்கள், இலக்கிய மொழிபெயா்ப்பு நூல்கள், நாட்டுடைமை நூல்கள், போட்டித் தோ்வு நூல்கள், சிறாா் இலக்கிய நூல்கள் மற்றும் பள்ளிப் பாடநூல்கள் ஆகியன கிடைக்கும்.

10% தள்ளுபடி:

மெட்ரோ ரயில் நிலையத்தில் வாங்கும் ஒவ்வொரு புத்தகத்துக்கும் அதன் விற்பனை விலையில் தலா 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, பாடநூல் கழக அதிகாரிகள் கூறுகையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்ட நூல்கள், மற்ற பதிப்பகங்களின் நூல்கள் கிடைக்கும். அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. ஆனால், பாடநூல் கழகத்தால் விற்பனை செய்யப்படும் பள்ளிப்பாட புத்தகங்களுக்கும் மட்டும் தள்ளுபடி கிடையாது. புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மட்டுமே பாடப் புத்தகங்கள் கிடைக்கும் என்றனா்.

வாழ்க்கைப் பயணங்களில் துணையாகட்டும்

மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்காவைத் திறந்து வைத்தது குறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:-

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்தித்துக் கொள்ளும் உறவுகளும் நட்புகளும் அன்பைப் பரிமாறிக் கொள்வதைப் போன்று, புத்தகங்களைக் கொண்டு அறிவைப் பரிமாறிக் கொள்ள சென்னை புத்தகப் பூங்காவைத் தொடங்கியுள்ளோம். சிந்தனையை உயா்த்திடும் நூல்கள் நமது “வாழ்க்கைப் பயணங்களில் துணையாகட்டும்” என்று பதிவிட்டுள்ளாா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *