ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். அரசின் போக்கைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்! சென்னையில் வரும் 18ஆம் தேதி நடத்தப்படும்! அனைத்துக் கட்சித் தலைவர்களையும், தோழர்களையும் அழைக்கிறோம் வாரீர்! வாரீர்!!

viduthalai
6 Min Read

* வேத காலம் என்று சொல்லப்படுவதற்கு முந்தையது தமிழர்களின் கீழடி நாகரிகம் என்ற உண்மையை மறைப்பதே ஒன்றிய பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். அரசின் நோக்கம்
*கீழடி: ஆதாரங்களை சரியாகத் தந்தும் தடுத்து நிறுத்துவதன் பின்னணி என்ன?
தமிழ் மக்களின் பண்பாட்டு வரலாற்றை மூடி மறைக்கும்
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி ஆய்வைத் தடுத்து நிறுத்தும்  ஒன்றிய பிஜேபி – ஆர்.எஸ்.எஸின் போக்கைக் கண்டித்து சென்னையில் வரும் 18ஆம் தேதி திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துக் கட்சியினரும் திரண்டு வருமாறு அழைக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:

‘கீழடி அகழாய்வு அறிக்கையை அங்கீகரிக்க முடியாது’ என்று ஒன்றிய பா.ஜ.க. அரசின் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ெஷகாவத் கூறியுள்ளார். இவர்களுக்கு தமிழ்நாட்டு வாக்குகள் மட்டும் தேவையாம்!

கீழடி ஆய்வு முடிவுகளை அறிவிக்க மறுப்பது ஒன்றிய
பிஜேபி அரசின் மனநிலையைக் காட்டுகிறது

‘‘தமிழ்நாட்டில் நடக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள், அறிவியல் பூர்வமாக, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அங்கீகாரம் வழங்குவதற்கு முன், அதிக நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அங்கீகாரம் வழங்கப்படும்” என்று அவர் நேற்று (10.6.2025) செய்தியாளர்கள் மத்தியில்   தமிழ்நாட்டின் இந்நாள், மேனாள் பா.ஜ.க. தலைவர்களை அருகில் வைத்துக் கொண்டு பேட்டி அளித்துள்ளார். இது தான் பா.ஜ.க.வின் உண்மையான மனநிலை!

கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளுக்கு  இன்னும் பல அறிவியல் பூர்வமான சான்றுகள்   அவசியம் என்று இந்த விசயத்தில் பேசும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வும், ஒன்றிய அரசும், இதுவரை ஆதாரப்பூர்வமாக எதையாவது வரலாற்றுப்படி கோரியிருக்கிறார்களா? இராமாயண, மகாபாரதக் கதைகளை நிறுவுவதற்குப் பல இடங்களில் அகழாய்வு செய்கிறோம் என்கிறார்களே, அவ்வப்போது சில கதைகளை ‘அனுமானங்கள்’ என்ற பெயரிலும் வெளியிடுகிறார்களே, உருப்படியான ஆதாரங்கள் எவற்றையாவது தந்திருக்கின்றனரா? ஆய்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றனவா? இன்னமும் சரஸ்வதி நதி பூமிக்கடியில் ஓடிக் கொண்டிருக்கிறது என்கிறார்களே, அதற்கு மாறாகத் தானே இந்தியப் புவியியல் ஆய்வு முடிவுகள் வெளிவருகின்றன. ஆனாலும், சிந்துவெளி நாகரிகத்துக்குச் சரஸ்வதி பெயரைச் சூட்டத் துடியாய்த் துடிக்கிறார்களே, இவற்றுக்கெல்லாம் எள் மூக்கு முனையளவு ஆதாரங்கள் உள்ளன என்று காட்ட முடியுமா?

என்ன ஆதாரம் இல்லை கீழடி ஆய்வில்?

கீழடி அகழாய்வின் முதல் இரு கட்டங்கள் முடிந்து, அவற்றின் ஆய்வு முடிவுகளை அறிவியல் சான்று களின் அடிப்படையில் முன்வைத்து, அறிக்கையை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அனுப்பிவைத்து இரண்டாண்டுகளுக்குப் பிறகும், அதை ஏற்க மனமில்லாமல், எப்படியாவது எதைச் சொல்லியாவது கீழடி அகழாய்வைப் புறந்தள்ளிவிட வேண்டும் என்னும் ஒற்றை நோக்கம் தானே தொடர்ந்து ஒன்றிய அரசிடமிருந்து வெளிப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அமைச்சரும், நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு அவர்கள் “5,350 ஆண்டுகள் பழமையானவர்கள். தொழில்நுட்பம் கொண்டவர்கள். மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் தமிழர்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்?” என்று சரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

என்ன ஆதாரம் இல்லை கீழடி அகழாய்வில்?

கண்டெடுக்கப்பட்ட கரிமப் பொருள்களிலிருந்து, அதன் காலத்தைக் கணக்கிடுவதற்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகம் உள்பட பல ஆய்வகங்களுக்கும் அனுப்பப்பட்டு, அவற்றின் முடிவுகள் வந்திருக்கின்றன. வேறு என்ன ஆதாரம் வேண்டுமென்கிறார்கள்?

சமஸ்கிருதத்திற்கு இப்படிப்பட்ட
ஆதாரங்களைக் காட்ட முடியுமா?

அக் கரிமப் பொருள்கள் கிடைக்கும் ஆழத்தைக் கணக்கிட்டு, அதையொட்டி கிடைக்கும் பானையோடுகளில் பதிக்கப்பட்டுள்ள எழுத்துகளின் வயதையும் கணக்கிட முடியும். அப்படி கணக்கிட்டால், கடந்த நூற்றாண்டில் அசோகர் பிராமி எழுத்துகள் தான் மூத்த எழுத்துகளாக இதுவரை இருந்தன. இவை அவற்றுக்கும் முந்தைய தமிழி எழுத்துகள் என்ற உண்மையை ஏற்க வேண்டியிருக்கும். அதனால் தானே ஏற்க மறுக்கிறார்கள். சமஸ்கிருதத்திற்கு இப்படி ஒரு சான்றை அவர்களால் காட்ட முடியவில்லையே! சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்று பல காலமாகப் பேசி வந்த புரட்டுகள் பொய்யென்றாகிவிடுமே! திராவிட மொழியாகிய தமிழ் மொழியின் தொன்மை; அறிவியல்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டால் என்னாவது என்ற பதற்றம் தானே கீழடி அகழாய்வை முடக்கப் பார்த்தது தொடங்கி, இன்று அந்த ஆய்வு அறிக்கையை ஏற்க முடியாது என்று சொல்லும் வரைக்கும் வந்திருக்கிறது. அனைத்துக்கும் அடிநாதமாக இருப்பது தமிழ் – திராவிட வெறுப்பும், ஆரியப் பெருமிதமும் தானே! ஆனால், தமிழின் பெருமையை நாங்கள் பேசுகிறோம் என்று வெற்றுத் தம்பட்டம் அடிக்கிறது பா.ஜ.க.

இந்தியக் கலாச்சாரத் துறை அமைச்சருக்கு, தொன்மை மிக்க ஒரு மொழியினை, அதன் வரலாற்றினை, அதை நிறுவும் அறிவியல் சான்றினை ஏற்க மனமில்லையே! இது தானே பா.ஜ.க. அரசின் நிலைப்பாடு!

இராம ஜென்மப் பூமிக்கு முறையான
ஆதாரங்கள் காட்டப்பட்டனவா?

இன்னும் போதிய அறிவியல் ஆதாரங்கள் தேவை எனவேதான் அங்கீகரிக்க முடியவில்லை என்ற ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் அவர்கள் கூற்று, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் முன்கூட்டியே திட்டமிட்ட முடிவுதான். அம் முடிவுக்கேற்ப, ஏதோ ஒரு பொருந்தாத சாக்குப் போக்கு, இது நியாயமானதல்ல!

கீழடியை ஏற்றால், திராவிட நாகரிகம் வேதகால நாகரிகம் என்று இவர்கள் சொல்லி வந்த காலத்திற்கும் முந்தையது என்ற உண்மையை ஒப்புக் கொள்ள நேருமே என்ற காரணத்தால் தங்களது கருத்தினை மறைமுகமாக நிலை நிறுத்தவே மேலும் அறிவியல் சான்றுகள் தேவைப்படுகின்றன என்கிறார் ஒன்றிய அமைச்சர்.

அவரையும், அவருக்கு உத்தரவிடும் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களையும் கேட்கிறோம்.

பிரச்சினையை ஏற்படுத்திய அயோத்தி இராமன் கோயில் இடம்பற்றி, ஆதாரங்கள் சான்றாவணங்கள் அடிப்படையில் உச்சநீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. மற்ற ஆதரவு அமைப்புகள் வாதங்களை வைத்ததுண்டா?

இராம ஜென்ம பூமி கட்சி அமைப்பாளர், ‘‘இராமன் பிறந்த பூமி என்பது எங்கள் நம்பிக்கை’’  என்று தானே வாதிட்டார்.

ஒத்தக் கருத்துள்ளோர் ஓரணியில் திரளட்டும்!

உச்சநீதிமன்றமும் மற்ற தீர்ப்புகளைப்போல் அல்லாது, அப்போது அளித்த தீர்ப்பில், அது மக்களின் நம்பிக்கை  – கடவுளைக் கேட்டு தீர்ப்பு எழுதியதாகக் கூறப்பட்ட விசித்திரம் நடந்ததே! அதை என்ன சொல்ல! பல ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பு, பொருளாதார வளம் பெருகியிருக்க வேண்டிய சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, ‘இராமர் பாலம்’ என்று இல்லாத சில மணற்பாறைகளைக் காட்டி பிரச்சினை ஆனபோது, நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அதற்குரிய ஆதாரம் கிடைக்கவில்லை என்று ஒன்றிய அரசாலும் – ஆர்.எஸ்.எஸ். அரசாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ரூ.2,200 கோடி திட்டம் பயனற்று போனதே!

ஆயிரக்கணக்கானோர்க்குக் கிடைக்கவிருந்த வேலை வாய்ப்புப் பறிக்கப்பட்டதே! தென் மாவட்டங்களின் பொருளாதார வளமும் மண் மூடிப் புதைக்கப்பட்டதே!

இவர்கள் சொன்ன எதற்கும் நிபுணர் ஆய்வுகள், போதிய சான்றுகள் தங்களிடம் இல்லாத நிலையில், ஆதாரப் பூர்வமாக உள்ள கீழடி நாகரிகத்தைக் கட்டுப்பாடாக இருட்டடிப்பு செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்காக தமிழர்களின் தொன்மையைப் பலி கொடுக்க முடியுமா?

பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்காக, கீழடி அகழாய்வை, தமிழ்நாட்டின் தொன்மையை நிறுவும் பல்வேறு அகழாய்வுகளைப் பலி கொடுக்க முடியாது. ஆதாரப்பூர்வமான வரலாற்றுச் செய்திகளை மறைத்து, இந்திய வரலாற்றினைப் பொய்யான தகவல்கள், அனுமானங்கள், இதிகாசங்களின் அடிப்படையில் மாற்றி எழுத முயற்சிக்கும் ஒன்றிய அரசு, கீழடி அகழாய்வு முடிவை அங்கீகரிக்க மறுப்பதையும் ஏற்க முடியாது.

இது ஒரு பண்பாட்டு அழிப்பு என்பதால் தமிழ்நாட்டு மக்களும், ஆய்வாளர்களும் ஒன்றுபட்டுத் திரண்டு மக்கள் மன்றத்தின் துணை கொண்டு குரல் கொடுப்பது இன்றியமையாததாகும்.

ஒத்தக் கருத்துள்ளவர்கள் அனைவரும் கலந்தாலோசித்து தக்க அழுத்தம் தரும்  வகையில் ஒரு மாபெரும் அறப்போராட் டத் திட்டத்தை அறிவிப்பது அவசரம் – அவசியம்.

இவ் விவகாரத்தில் தமிழர்களின் ஒற்றுமையைக் காட்டும்வகையில், ஒருமித்த குரல் எழுப்ப வேண்டியது அவசியமாகும். தமிழ்நாட்டின் வரலாற்று, பண்பாட்டுச் சிறப்புகளை சிறுமைப்படுத்த முயற்சிப்பதையும், காலத்தால் மூத்த தமிழி எழுத்து வடிவத்திற்குக் கிடைத்துள்ள சான்றுகளை மறுப்பதையும் கண்டித்து, திராவிடர் கழகத்தின் சார்பில், 18.6.2025 புதன்கிழமை அன்று சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். (2017லும் ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியதுண்டு) ஒத்த கருத்துள்ள அமைப்புகளின் தலைவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கனிவுடன் அழைப்பு விடுக்கின்றோம்.ஒன்றிய அரசின் சமஸ்கிருதச் சார்பு நிலைக்கும், தமிழ் காழ்ப்பு நிலைப்பாட்டுக்கும் கடும் கண்டனங்களை எழுப்ப வேண்டும். அனைத்துக் கட்சிகளும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்புகளும் போராட முன்வர வேண்டும்.

 கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

 

சென்னை
11.6.2025

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *