ராஜஸ்தானில் சுவாரசிய நிகழ்வு திருமணமாகாமல் 70 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தாத்தா – பாட்டி திருமணம் பேரக்குழந்தைகள் முன்னிலையில் தடபுடலாக நடந்தது

Viduthalai
2 Min Read

துங்கர்பூர், ஜூன் 10-  திருமண மாகாமல் 70 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த தாத்தா – பாட்டி திருமணம். அவர்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகள் முன்னிலையில் மேளதாளம் முழங்க ஆடல் பாடலுடன் தடபுடலாக நடந்தது.

ராஜஸ்தானில் நடந்த இந்த சுவாரசிய நிகழ்வு பற்றிய விவரம் வருமாறு:

முறைப்படி திருமணம்

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் கலந்தூர் என்ற பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் வழக்கப்படி வயது வந்த ஆணும், பெண்ணும் அவர்கள் விருப்பப்படி வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்ளலாம்.

முறைப்படி திருமணம் செய்து கொள்வது கட்டாயம் அல்ல. அதனால் இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமா பாய் கராரி (95) என்பவரும், ஜீவாலி தேவி (90) கடந்த 70 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 8 குழந்தைகள், மற்றும் பல பேரக்குழந்தைகள் உள்ளனர்.

முறைப்படி திருமணம் செய்து கொள்ளாத இணையர் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்ற கட்டுப்பாடு மட்டும் இந்த பழங்குடியினர் சமுதாயத்தில் உள்ளது. அதனால் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ராமா பாய் கராரிக்கும், ஜீவாலி தேவிக்கும் ஏற்பட்டது. இதனால் அவர்களை திருமணம் செய்து கொள்ளும்படி பிள்ளைகளும், பேரக் குழந்தைகளும் வற்புறுத்தினர். இதனால் முறைப்படி திருமணம் செய்து கொள்ள தாத்தா – பாட்டி இணையர் சம்மதித்தனர். இவர்களது திருமணத்தை தடபுடலாக கொண்டாட குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

பேரக்குழந்தைகள் முன்பு

கடந்த 1ஆம் தேதி திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. பத்திரிகை அச்சடிக்கப்பட்டு கிராம மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. திருமணத்துக்கு முன்தினம் ராஜஸ்தானில் பிரசித்திப் பெற்ற ஹால்கி, பந்தோலி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பேரக்குழந்தைகள் முன்னிலையில்…

கடந்த 4ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தாத்தாவும், பாட்டியும் மாநில கலாச்சாரத்தின் படி புத்தாடைகள் அணிந்து புது மணமக்கள் மிடுக்குடன் காட்சி யளித்தனர். அவர்கள் கம்பீரமாக நடந்து வந்து மணமேடையில் அமர்ந்தனர். அவர்களின் 8 குழந்தைகள், பேரக்குழந்தைகள் முன்னிலையில் தாத்தாவும், பாட்டியும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அப்போது மேள தாளம் முழங்கியது. ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒன்றாகத் திரண்டுவந்து ஆடி, பாடி திருமண விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.

இந்த தகவலை ராமாபாயின் மகன் கான்டிலால்கராரி தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *