வேளாண்மை சாராத வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட திட்டக்குழு தயாரித்த நான்கு அறிக்கைகள் முதலமைச்சரிடம் அளிப்பு

Viduthalai
3 Min Read

சென்னை, ஜூன் 10 மாநில திட்டக் குழு தயாரித்துள்ள 4 அறிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், திட்டக்குழு துணைத் தலைவரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (9.6.2025) வழங்கினார்.

திட்டக் குழு தயாரித்த
நான்கு அறிக்கைகள்

ஊரகப் பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள், வாகன உற்பத்தி துறையின் எதிர்காலம், அறிவுசார் பொருளாதாரம் ஆகியவை தொடர்பாக 4 அறிக்கைகளை மாநில திட்டக்குழு தயாரித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க..ஸ்டாலினிடம் இந்த அறிக்கைகளை திட்டக்குழுவின் அலுவல்சார் துணைத் தலைவரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சமர்ப்பித்தார்.

திட்டக்குழுவின் செயல் துணை தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா, நிதி துறை செயலர் உதயச்சந்திரன், திட்டக்குழு உறுப்பினர் செயலர் சுதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

4 அறிக்கைகள்

வேளாண்மை சாராத வேலை வாய்ப்பு: தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் வேளாண் சாராத பணிகளின் தன்மை மற்றும் அளவை அறியும் நோக்கில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 75 சதவீதத்துக்கும் அதிகமான ஆண் தொழிலாளர்கள், 50 சதவீதத்துக்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள், வேளாண்மை அல்லாத துறைகளில் வேலை செய்யும் நிலை இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு, வேளாண் துறையின் சதவீதத்தில் 20 சதவீதம் குறைந்திருப்பதை இது காட்டுகிறது. இந்த ஆய்வின்படி, 15-34 வயது இளம் தொழிலாளர்களே இந்த மாற்றத்தின் முக்கிய காரணியாக உள்ளனர். அதிக ஊதியம், நிலையான வேலைவாய்ப்பு போன்றவையே வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகளை நோக்கி இளைஞர்களை ஈர்த்துள்ளன.

தொலைநோக்கு ஆவணம்: ‘நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம்’ என்ற தலைப்பிலான ஆவணம் அய்க்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, 2030-ஆம் ஆண்டுக்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளின்கீழ் உள்ள 17 இலக்குகள் வாரியாக அத்தியாயங்களை கொண்டுள்ளது. மாநிலத்தின் தற்போ தைய நிலை, பல்வேறு நலத்திட்டங்கள், சிறப்பு முயற் சிகள் மற்றும் கொள்கை உரு வாக்கங்கள் மூலம் அரசின் முன்னெ டுப்புகளை இந்த ஆவணம் விளக்குகிறது.

வாகன உற்பத்தி

வாகன உற்பத்தி துறை: திட்டக்குழு, தொழில் வழிகாட்டி நிறுவனம், ஆட்டோ கார் நிறுவனத்தின் நிபுணத்து வத்துடன் இணைந்து ‘தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ் (வாகன உற்பத்தி) துறையின் எதிர்காலம்’ என்ற அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனம், ஹைப்ரிட், ஹைட்ரஜன், சிஎன்ஜி மற்றும் டீசல் உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களை மேம்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்து இதில் கூறப்பட்டுள்ளது.

2030-ஆம் ஆண்டுக்குள் மின் வாகனம், பேட்டரி தொழில்நுட்பம், ஆட்டோமேஷன் ஆகியவற்றில் 2 லட்சத் துக்கும் அதிகமான தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதன் அவசியம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. ஆராய்ச்சி, மேம்பாட்டை விரிவுபடுத்துவது குறித்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அறிவுசார் பொருளாதாரம்: தொழில்நுட்பம், புத்தாக்கம், நிலைத்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு உற்பத்தி துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்பதை ‘அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி – வடிவமைக்கும் பாதை’ என்ற அறிக்கை பரிந்துரைக்கிறது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவை இதில் முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம்

முதலமைச்சரிடம் திட்டக்குழு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் திட்டக்குழு செயல் துணை தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் கூறியதாவது: 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் தொலைநோக்கு திட்டத்தை முன்வைத்து இந்த அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சி, சமூகநீதி மற்றும் அறிவுசார் பரிணாமத்தை ஒருங் கிணைக்கும் விரிவான செயல திட்டமாக இந்த அறிக்கைகள் அமைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *