அமெரிக்கா – சீனா ஆகிய இரு நாடுகள் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை பிரிட்டனில் உள்ள லண்டனில் நடைபெற உள்ளது

Viduthalai
2 Min Read

லண்டன், ஜூன் 8- அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை பிரிட்டனில் உள்ள லண்டன் நகரில் (ஜூன் 9) நடைபெறவுள்ளது.

அமெரிக்கா, சீனா ஆகிய 2 பெரிய பொருளாதார பலமிக்க நாடுகள் இடையேயான வர்த்தகப் போரானது கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். சீனா மீது 34 சதவீத வரியை விதித்தார்.

பங்குச் சந்தைகள் பாதிப்பு

இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது. இந்த வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவீதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவீத வரியும் உயர்த்தும் அளவுக்கு கொண்டு சென்றது. இதனால், உலகளாவிய பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

இறுதியாக, இரு நாடுகளும் 90 நாள்களுக்கு வரி விதிப்பை ஒத்திவைப்பதாக ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் மேற்கொண்டன. இதைத் தொடர்ந்து, 2 நாடுகளின் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர்.

நேர்மறையாக நடந்தது

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன பிரதமர் ஜீ ஜின்பிங் ஆகியோர் ஒருசில நாட்களுக்கு முன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினர். இதுதொடர்பாக அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “எங்களிடையேயான உரையாடல் மிக நேர்மறையாக நடந்து முடிந்தது” என்று தெரிவித்தார். இந்நிலையில், அமெரிக்க-சீன அதிகாரிகள் லண்டனில் அடுத்த வாரம் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

அதன்படி, லண்டனில் நாளை(ஜூன் 9) அமெரிக்க, சீன நாடுகளின் தலைவர்கள், வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

சுமூகமாக நடைபெறும்

இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்கத் தரப்பில் கருவூல அமைச்சர் ஸ்காட் பெஸ்சென்ட், வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமீசன் கிரீர் உள்பட அதிகாரிகள், சீன தலைவர்களுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுடவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும் என்று நம்புவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டில், இரு நாடுகளுக்கு இடையே 58,200 கோடி டாலர் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்ற நிலையில், வரிப் போரால் நடப்பாண்டு வர்த்தகம் வெகுவாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *