மும்மொழித் திட்டத்தை ஒப்புக்கொண்டால்தான் மாநிலத்திற்குக் கல்வி நிதியைத் தருவோம் என்று கூறுவதா? ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடத்துவது கமிஷன் ஏஜெண்ட் வேலையா? பேர அரசியலா?

viduthalai
5 Min Read

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

திருவாரூர், ஜூன் 7 தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தையே ஒரு பக்கம் வாங்கிக் குவித்துக் கொண்டு, இன்னொரு பக்கம், ஒன்றிய பி.ஜே.பி. அரசின் மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்குரிய கல்வி நிதியைத் தருவோம் என்று சொல்லலாமா? கமிஷன் ஏஜெண்ட் வேலை செய்யும் பேர அரசியலை நடத்துகிறது ஒன்றிய பி.ஜே.பி. அரசு என்று செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

செய்தியாளர்களிடையே

தமிழர் தலைவர் ஆசிரியர்

இன்று (7.6.2025) காலை திருவாரூர் மாவட்டம் கீழப்பாலையூரில் இல்லத் திறப்பு விழாவிற்குச் சென்றிருந்த  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டியின் விவரம் வருமாறு:

ஒன்றிய அரசின் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து…

செய்தியாளர்:  தென்னிந்திய அளவில், நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது என்று சொல்கிறார்கள்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீட்டின் வாயில் வரை நெருக்கடி வந்திருக்கின்றது என்று சொல்லி யிருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: வருமுன்னர் காத்தல் என்பது ஓர் ஆட்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். அதுபோல, இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கக்கூடிய ‘திராவிட மாடல்’ ஆட்சி – அதனை முன்கூட்டியே உணர்ந்து, சில மாதங்களுக்கு முன்பே, நாடாளுமன்றத் தொகுதிக் குறைப்பு ஆபத்து இருக்கிறது என்பதை எடுத்துக் கூறியது.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது ஒன்றிய அரசினுடைய கொள்கையாகும். அதனைச் சிறப்பாக செய்தமைக்காகத் தண்டிக்கக் கூடாது; பாராட்டவேண்டும். மற்ற மாநிலங்களை யெல்லாம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில், இரண்டு குழந்தைகள் போதும் என்று சொன்னார்கள்.

அது பொருளாதாரத்திற்காக மட்டுமல்ல; பெண் உரிமைக்காகவும்தான் என்றார் தந்தை பெரியார் அவர்கள்.

ஆக, அப்படிப்பட்ட உரிமையை சிறப்பாக தென்மாநிலங்களில் இருந்த ஆட்சிகள் நிறைவேற்றின.

ஆகவே, தென்மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆட்சிகள் சிறப்பாக செய்த தைப் பாராட்டாமல், ஒரு வேதனையை உண்டாக்குகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

பல மாதங்களுக்கு முன்பாகவே, நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்!

அது என்னவென்றால், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்று அவர்கள் கொண்டு வந்தால், தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையான 39 இல், 7, 8 தொகுதிகள் குறையக்கூடிய அபாயம் இருக்கின்றது என்பதை, பல மாதங்களுக்கு முன்பாகவே, நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆபத்து என்று சொல்லி, எதிர்க்கட்சிகளையும் சேர்த்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதில் பிரகடனப்படுத்தினார்.

அதோடு நிற்காமல், இதுபோன்று பாதிக்கப்பட்டிருக்கின்ற மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் அந்த ஆபத்துக் குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

எனவே, மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இதுவரையில், தெளிவான உறுதிமொழியை ஒன்றிய பா.ஜ.க. அரசு சொல்லவில்லை.

இன்னுங்கேட்டால், தமிழ்நாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிறார்; அவரிடம், கூட்டணி சேருகிறோம் என்று சில கட்சிகள் போயிருக்கின்றன; தங்கள் கட்சியை அடமானம் வைத்தவர்களும் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைக்கு அவர்களேகூட வாய்மூடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஆபத்து வரும்போது பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள்.

அந்த ஆபத்து வந்தவுடன், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

புயல் வருவதற்கு முன்பு, அதற்குரிய முன்னேற்பாடு களை செய்வது முக்கியமா? அல்லது புயல் வந்த பிறகு, நாங்கள் நிவாரணம் கொடுப்போம் என்று சொல்வது முக்கியமா? என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது!

ஆகவேதான், முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது என்பது ஒன்று.

இரண்டாவது, இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிடவேண்டும். இதற்காக மக்கள் எழுச்சியாக தமிழ்நாட்டில் குரல் எழுப்பவேண்டும்.

மாநில அதிகாரங்களை ஒடுக்குவதற்காகவும், நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டு உறுப்பினர்களின் ஓங்கி ஒலிக்கும் குரல்களை ஒடுக்குவதற்காகவும் இந்த முயற்சியை ஒன்றிய அரசு செய்கிறது.

ஆகவே, தமிழ்நாட்டின் செயலை வரவேற்கின்றோம்.

கல்வியில் நூற்றுக்கு நூறு சாதனையை செய்திருக்கின்றது ‘திராவிட மாடல்’ அரசு!

செய்தியாளர்: ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்குக் கல்வி நிதியை மறுத்ததினால், கட்டாய கல்வித் தொகையை விடுவிப்பதற்குத் தனியார் பள்ளிகள் தமிழ்நாடு அரசிற்கு நெருக்கடி கொடுக்கின்றனவே?

தமிழர் தலைவர்: இந்தியாவிலேயே கல்வியில் நூற்றுக்கு நூறு சாதனையை செய்திருக்கின்றது தமிழ்நாடு அரசான ‘திராவிட மாடல்’ அரசு.

இதைக் கண்டு அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவில்லை. இதைத் திட்டமிட்டு நாசப்படுத்தவேண்டும் என்பதற்காக, மும்மொழித் திட்டத்தைத் திணிக்கிறார்கள். அதனை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.

நடைமுறையில் 50 ஆண்டுகளுக்கு முன்பே மும்மொழித் திட்டத்தை ஒழித்த ஆட்சி திராவிட ஆட்சி.

அரசியல் பேதம் செய்கிறார்கள்!

இன்றைய காலம் செயற்கை நுண்ணறிவு காலமாகும். இந்தக் காலத்தில், மூன்றாவது மொழியைப் படிக்கவேண்டும் என்று சொல்லி, அரசியல் பேதம் செய்கிறார்கள். மும்மொழித் திட்டத்தை ஒப்புக்கொண்டால்தான், நாங்கள் நிதி ஒதுக்கீடு செய்வோம் என்று ஒன்றிய அரசு சொல்கிறது.

இது என்ன கமிஷன் ஏஜெண்ட் வேலையா? பேர அரசியலா?

ஒன்றிய அரசு செய்த சூழ்ச்சிப் பொறி!

அரசமைப்புச் சட்டப்படி, நம்மிடமிருந்து வசூலித்த பணத்தைத்தான், ஒன்றிய அரசு நிதியாக தருகிறது.

உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்து, அது நிலுவையில் இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு நிதி நெருக்கடி கொடுக்கவேண்டும் என்பதற்காக ஒன்றிய அரசு செய்த சூழ்ச்சிப் பொறி!

10 ஆயிரம் கோடி ரூபாய் நீங்கள் கொடுத்தாலும், எங்கள் கொள்கையை விடமாட்டோம்!

ஆனால், நம்முடைய முதலமைச்சர் அருமையாகச் சொன்னார், 10 ஆயிரம் கோடி ரூபாய் நீங்கள் கொடுத்தா லும், எங்கள் கொள்கையை விடமாட்டோம் என்றார்.

மாநிலங்களுடைய அதிகாரங்களை வரையறுப்ப தற்குத் தனிக் குழுவையே அமைத்திருக்கின்றார்.

ஆகவே, மாநில உரிமைகளைப்பற்றி பேசுவதற்கு, ஒத்தக் கருத்துள்ள மாநில முதலமைச்சர்களையெல்லாம் ஒன்று திரட்டுகிறார். சரியான போக்கைத்தான் தமிழ்நாடு அரசு கடைப்பிடித்து வருகிறது; அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

இதுவரையில், கல்யாணத் தரகர்கள்தான் இருந்தார்கள்; இப்போது அரசியல் தரகர்கள் வந்திருக்கிறார்கள்!

செய்தியாளர்: பா.ம.க. உள்கட்சி விவகாரத்தில், பா.ஜ.க. தலையீடு இருக்கிறதா? ஏனென்றால், ‘துக்ளக்’ குருமூர்த்தி, டாக்டர் ராமதாசை சந்தித்திருக்கிறாரே?

தமிழர் தலைவர்: இதற்கு முன்பு பழைய புரோக்கர் ஒருவர் இருந்தார், அரசியல் ரீதியாக.

அந்தப் புரோக்கருக்கு என்ன வேலை என்றால், சம்மன் இல்லாமலேயே ஆஜர் ஆவார்.

இவர், சம்மன் வாங்கிக்கொண்டு ஒரு புதிய புரோக்கராகக் கிளம்பியிருக்கிறார். அவர்தான் ஆடிட்டர் குருமூர்த்தி.

இதுவரையில், கல்யாணத் தரகர்கள்தான் இருந்தார்கள். இப்போது அரசியல் தரகர்கள் வந்திருக்கிறார்கள்.

– இவ்வாறு திராவிடர் கழகத்  தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *