ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் பின்னணி

Viduthalai
3 Min Read

ஒன்றிய அரசின் 2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிவிப்பு, குறிப்பாக தென் மாநிலங்களில், தொகுதி மறுவரையறை (Delimitation) குறித்த புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட தென் மாநிலங்கள், ‘‘புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடந்தால், நாடாளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும்

2021ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய கணக்கெடுப்பு 2027-க்கு ஒத்திவைக்கப்பட்டது, தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான ஒன்றிய அரசின் சூழ்ச்சி’’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

‘‘1971ஆம் ஆண்டு கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்ட தொகுதி மறுவரையறை கட்டமைப்பை 2056 வரை நீட்டிக்க வேண்டும்’’ என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.

‘‘கணக்கெடுப்பு தாமதத்திற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை’’ என காங்கிரஸ் கட்சி ஒன்றிய அரசை விமர்சித்துள்ளது.

2027 மார்ச் 1ஆம் தேதி 00:00 மணி குறிப்பு நேரமாக இருக்கும்.  கணக்கெடுப்பு 2026 மார்ச்-ஏப்ரலில் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027 பிப்ரவரியில் 21 நாட்களுக்கு நடைபெறும். டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படுவதால், செயல்முறைகள் வேகமாக இருக்கும். கணக்கெடுப்பு முடிந்ததும், தொகுதி மறுவரையறைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு,  தொகுதி மறுவரையறை ஆணையம்  ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் (84ஆவது திருத்தம்) 2002 ஆம் ஆண்டில், “2026 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடத்தப்படும் முதல் கணக்கெடுப்பு” வரை மாநிலங்களுக்கு இடையேயான தொகுதிகளின் மறுவரையறை செய்யப்படாமல் இருக்க வேண்டுமென திருத்தப்பட்டது.

மக்களவையில் மொத்த இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும், இதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை.

2027ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.

2029இல் அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்தால் தொகுதி மறு சீரமைப்பு என்ற அடிப்படையில் மக்கள் தொகையை மய்யப் புள்ளியாக வைத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை என்று வரையறைத்து, நாடாளுமன்றத் தேர்தலை நடத்திட பிஜேபி திட்டமிட்டுள்ளது –  நன்றாகவே புரிகிறது.

கரோனாவைக் காரணம் காட்டி 2021இல் நடக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

அதன்படி பார்த்தாலும் 2025ஆம் ஆண்டுக்கு முன்பே மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தியிருக்கலாம்.

எதிலும் நேர்மையான பார்வையில்லை. நாடாளுமன்றக் கட்டடத்தையே 800 உறுப்பினர்கள் அமருமாறு கட்டி முடிக்கப்பட்ட போதே பிஜேபியின் உள்நோக்கம் புரிந்து விட்டது.

2027 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை முடிவு செய்தால், தென் மாநிலங்களின் எண்ணிக்கை குறையும்.

இந்திய அரசாங்கத்தின் கொள்கையை இம்மாநிலங்கள் கடைப்பிடித்ததால், குடும்பக் கட்டுப்பாடு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது அதனால் மக்கள் தொகை அதிகமாக வாய்ப்பு இல்லை.

அதே நேரத்தில் வடமாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாடு என்றால் என்னவென்றே தெரியாது – அங்கெல்லாம் மக்கள் தொகை அதிகரிப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இது மாநிலங்களின் உரிமையைக் கண்டிப்பாகப் பாதிக்கச் செய்யும்.

பிஜேபி என்றால் சூழ்ச்சிதான் – வஞ்சகம் தான் – இநு்தப் பிரச்சினையை மக்கள் மன்றத்திற்கும் கொண்டு சென்று முறியடிக்க கட்சிக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து வீதிக்கு வந்து போராட வேண்டும். நாடாளுமன்றத்திலும் கடுமையாகக் குரல் கொடுக்க வேண்டும்.

தொகுதி மறுவரையறை குறித்த விவாதம், மாநிலங்களுக்கு இடையிலான அரசியல் சமநிலையை மட்டுமல்லாமல், பிரதிநிதித்துவத்தின் நீதியையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *