பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் 50 ஆயிரம் ஊழியர்கள் நியமனம்: ரூ.230 கோடி ஊதிய ஊழல்

Viduthalai
2 Min Read

போபால், ஜூன் 7 மத்தியப் பிரதேச அரசில் 50 ஆயிரம் `கோஸ்ட்’ ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அங்கு ரூ.230 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணியில் போலியாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள் ‘கோஸ்ட்’ ஊழியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

மிகப்பெரிய மோசடி

மத்தியப் பிரதேச மாநில அரசு ஊழி யர்களில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு, அதாவது அங்குள்ள ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 9 சதவீதம் பேருக்குக் கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஆனால், இதற்காக அந்த ஊழியர்கள் எந்தவிதப் போராட்டத்தையும் நடத்தவில்லை என்பது ஆச்சரியமான விஷயமாக உள்ளது. மேலும், இது ஒரு ‘மர்மமான’ விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், இது மத்தியப் பிரதேச வரலாற்றில் மிகப்பெரிய ஊதிய மோசடியாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

இதுதொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த `கோஸ்ட்’ ஊழியர்களின் ஆவணங்கள் எல்லாம் உரிய முறையில் இருக்கின்றன. அவர்களின் பெயர், பணியாளர் குறியீடு உள்ளிட்டவை அரசு ஆவணங்களில் உள்ளன. ஆனால் சில காரணங்களால் அவர்களின் ஊதியம் கடந்த 6 மாதங்களாக வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தற்போது வரை அவர்களுக்கு ஊதியம் தரப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் இருக்கிறார்களா? அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டார்களா? அல்லது அவர்கள் மோசடியான ‘கோஸ்ட்’ ஊழியர்களா என பலவிதமான கேள்விகள்  எழுந்துள்ளன.

அதிகாரிகளுக்கு
அரசு உத்தரவு

இந்நிலையில், கடந்த மே 23 ஆம் தேதி இது தொடர்பாக மத்தியப் பிரதேச மாநில அரசு கருவூலக ஆணையர், அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:

‘‘மத்தியப் பிரதேச அரசில் அய்எப்எம்எஸ் பிரிவின் கீழ் உள்ள நிரந்தர / தற்காலிக ஊழியர்களின் விவரங்கள் இந்தக் கடிதத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரம் ஊழியர்க்கு கடந்த டிசம்பர் 2024 முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. பணியாளர் குறியீடு இருந்தும் கூட அய்எப்எம்எஸ்-சில் அவர்களின் சரிபார்ப்பு முழுமை அடையவில்லை. மேலும், அவர்கள் வேலையை விட்டிருந்தால் அதற்கான செயல்முறையும் முடியவில்லை’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.230 கோடி மோசடி

இதன்மூலம் ரூ.230 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகவும், இதுதொடர்பாக 15 நாள்களில் விளக்கம் அளிக்கவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அதிகாரிகளுக்கு அவசர உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கருவூலக ஆணையர் பாஸ்கர் லக்ஷ்கர் கூறும்போது, ‘‘இந்த 50 ஆயிரம் `கோஸ்ட்’ ஊழியர்கள் எங்கிருந்து வந்தனர் என்று தெரியவில்லை. நாங்கள் ஆய்வுசெய்த போதுதான் இந்த முரண்பாடு கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

ஆறு மாதமாக ஊதியம் பெறாத 50 ஆயிரம் ஊழியர்களில் 40 ஆயிரம் பேர் நிரந்தர ஊழியர்கள் மற்றும் , 10 ஆயிரம் பேர் தற்காலிக ஊழியர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கான மொத்த ஊதிய நிலுவைத் தொகை ரூ.230 கோடியாகும். மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படாததால், மிகப்பெரிய மோசடி நடந்திருக்கலாம் எனச் சந்தேகம் ம.பி.யில் அதிகரித்துள்ளது. அதாவது வேலை பார்க்காமல் அல்லது அப்படி ஊழியர்களே இல்லாமல் குறிப்பிட்ட சிலருக்கு காசோலை மூலம் அல்லது வேறு விதமாக ஊதியம் போய்க் கொண்டு இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *