ராஜஸ்தான் பன்வாரிதேவி வழக்கு என்னாயிற்று?

viduthalai
3 Min Read

 

ராஜஸ்தானில் நடந்த பன்வாரி தேவி வழக்கு (Bhanwari Devi Case) இந்திய சட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். இது பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான சட்டங்கள் உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

* பன்வாரி தேவி யார்? பன்வாரி தேவி ராஜஸ்தானின் பட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூக நலப் பணியாளர் (saathin). ராஜஸ்தான் அரசின் பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்தார். குழந்தை திருமணங்களை எதிர்ப்பது, பெண்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

* 1992ஆம் ஆண்டில், பன்வாரி தேவி, ஒரு ஒன்பது வயது குழந்தைக்கு நடக்க இருந்த திருமணத்தைத் தடுக்க முயன்றார். இது உயர் ஜாதி  பார்ப்பனக் குடும்பத்தினரின் கோபத்தைத் தூண்டியது. இதன் விளைவாக, செப்டம்பர் 22, 1992 அன்று, பன்வாரி தேவி தனது கணவருடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அய்ந்து பேர் கொண்ட கும்பல் அவரது கணவரைத் தாக்கி மயக்கமடையச் செய்தது. பின்னர், அவரது கணவர் கண்முன்னே பன்வாரி தேவியை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்தனர்.

* பன்வாரி தேவி காவல்துறையில் புகார் அளித்த போதிலும், காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப்  பதிவு செய்ய 52 மணி நேரம் தாமதப்படுத்தியது. மேலும், மாவட்ட நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்தது. குற்றவாளிகள் உயர் ஜாதி பார்ப்பனர்கள்  என்பதால், கீழ் ஜாதிப் பெண்ணை வல்லுறவு செய்ய மாட்டார்கள் என்றும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வல்லுறவு செய்ய முடியாது என்றும், உறவினர்களின் முன்னிலையில் வல்லுறவு நடைபெற வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றம் கூறி குற்றவாளிகளை விடுவித்தது. இது பெரும் சர்ச்சையையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியது.

* மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் பன்வாரி தேவிக்கு நீதி கேட்டும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராடினர்.

* விசாகா வழிகாட்டுதல்கள் (Vishaka Guidelines): “விசாகா” என்ற பெயரில் பல தன்னார்வ தொண்டு நிறுவ னங்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் இணைந்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுவைத் தாக்கல் செய்தன. இந்த மனுவின் விளைவாக, 1997 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க “விசாகா வழிகாட்டுதல்களை” வெளியிட்டது.

* பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கும், புகார்களை விசாரிப்பதற்கும் ஒரு முறையான வழிமுறை இருக்க வேண்டும் என்று இந்த வழிகாட்டுதல்கள் வலியுறுத்தின.

* பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது முதலாளிகளின் பொறுப்பு என்று இந்த வழிகாட்டுதல்கள் குறிப்பிட்டன.

* இது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14 (சமத்துவம்), 15 (பாகுபாடு காட்டாமல் இருப்பது) மற்றும் 21 (வாழும் உரிமை மற்றும் தனிமனித சுதந்திரம்) ஆகிய பிரிவுகளின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

* பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2013 (Sexual Harassment of Women at Work place (Prevention, Prohibition and Redressal) Act, 2013): விசாகா வழிகாட்டுதல்கள் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தன. பன்வாரி தேவி வழக்கு ஒரு முக்கிய தூண்டுகோலாக அமைந்தது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான இந்த ஒரு விரிவான சட்டத்தை இந்திய அரசு 2013 இல் இயற்றியது.

பன்வாரி தேவிக்கு நேரடி நீதி இன்னமும் முழுமையாகக் கிடைக்கவில்லை. மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. குற்றவாளிகளில் சிலர் இறந்துவிட்டனர். இருப்பினும், அவரது போராட்டமும், இந்த வழக்கும் இந்தியப் பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டங்கள் உருவாக ஒரு முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை.

பிஜேபி ஆண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 33 ஆண்டு களுக்குமுன் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கின்மீது இன்றுவரை தீர்ப்புக் கிடைக்கவில்லை.

அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்முறை குற்றவாளிமீதான வழக்கு அய்ந்தே மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டு, தண்டனையும் கிடைக்க வழி செய்யப்பட்டது.

‘திராவிட மாடல்’ அரசுக்கும், பிஜேபி ஆட்சிக்கும் இடை யிலான வேறுபாட்டை உணர்வீர்! பார்ப்பன உயர் ஜாதி யினர் கீழ் ஜாதிப் பெண்ணை பாலுறவு செய்ய மாட்டார்கள் என்று தீர்ப்பில் குறிப்பிட்ட மாவட்ட நீதிமன்றத்தின் மனு நீதிப் புத்தியையும் அறிவீர்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *