மீனம்பாக்கம், ஜூன்.4- கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பியதால் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விமான கட்டணமும் பல மடங்கு உயர்ந்து இருந்தது.
சென்னை திரும்பினர்
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து (2.6.2025) அன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் சொந்த ஊர் களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்றிருந்த சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், கடந்த 2 நாட்களாக சென்னைக்கு திரும்பி வந்தவண்ணம் உள்ளனர்.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள், பேருந் துகளில் பயணச் சீட்டு கிடைக்காததால் கடைசி நேரத்தில் விமானங்களில் சென்னைக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
கட்டணம் உயர்வு
இதனால் சென்னை விமான நிலையத்துக்கு மதுரை,தூத்துக்குடி, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் இருந்து வரும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக விமான பயணச் சீட்டு கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
அதன்படி மதுரை-சென்னை இடையே சாதாரண நாட்களில் ரூ.4,542 ஆக இருந்த கட்டணம் 2.6.2025 அன்று ரூ. 18,127 ஆக உயர்ந்து இருந்தது. தூத்துக்குடி-சென்னை இடையே சாதாரண நாட்களில் ரூ.4,214 ஆக இருந்த கட்டணம் ரூ.17,401 ஆக அதிகரித்து காணப் பட்டது.
மேலும் திருச்சி- சென்னை இடையே சாதாரண நாட்களில் ரூ.2,334 ஆக இருந்த கட்டணம் ரூ.9,164 ஆகவும், கோவை-சென்னை இடையே சாதாரண நாட்களில் ரூ.3,550 ஆக இருந்த கட்டணம் ரூ.6,475 ஆகவும் உயர்ந்து இருந்தது.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த விமான நிறுவன அதிகாரிகள், “விமானத்தில் கட்டணங்கள் எதுவும் உயர்த்தப்படவில்லை. குறைந்த கட்டண பயணச் சீட்டுகள் ஏற்கெனவே விற்று தீர்ந்து இருக்கும். கடைசி நாளில் எடுக்க முயன்றால் கூடுதல் கட்டண பயணச் சீட்டுகள் மட்டும் இருக்கும். இது வழக்கமான ஒன்றுதான்” என்றனர்.