சென்னை,ஜூன் 25 பறவை இனங்களை பாதுகாக்க மாநில பறவை ஆணையம் அமைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பறவை இனங்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு முன்னணியில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 17 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. அவற்றில் 14 ராம்சார் இனங்களில் இருக்கின்றன. பறவைகள் இனங்களை பாதுகாப்பதை மேலும் பலப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாநில பறவை ஆணையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமான முன் மொழிவு தமிழ்நாடு அரசுக்கு முதன்மை தலைமை வனப் பாதுகாவலரிடம் இருந்து வரப் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் மாநில பறவை ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பி னர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதன் தலைவராக இருப்பார். வருவாய் நிர்வாக ஆணையரின் பிரதிநிதி, ஊரக மேம் பாடு மற்றும் ஊராட்சி ஆணையரின் பிரதிநிதி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனப் படைகள் தலைவர்), பொதுப் பணித் துறை மற்றும் நீர் வளத் துறை தலைமை பொறியாளர், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழக இயக்குனர், கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் (புலிகள் திட்டம்), கூடுதல் முதன்மை தலைமை பாதுகாவலர்(வன விலங்குகள்) ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வார்டன் உறுப்பினர் செயலாளராக இருப்பார். இந்த ஆணையத்துக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அனைத்து பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கூடு கட்டுவதற்கு வசதியும், முன்னேற்றமும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம் தயாரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகள் வசிக்கும் இடங்களுக்கான வரைபடங்களை தயாரிக்க வேண்டும். பறவைகள் சரணாலயத்தை புதுப்பிக்கும் பணிகள் மற்றும் மறு ஆய்வு செய்தல், இந்த பணிகளுக்காக உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளித்து பயன்படுத்தி கொள்வது போன்ற பணிகளை இந்த ஆணையம் மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.