தமிழ்நாடு முழுவதும் அமைதிப் புரட்சியை ஏற்படுத்திய கலைஞரின் கட்டணமில்லா பேருந்து திட்டம் கல் உடைக்கச் சென்ற பிள்ளைகள் உயர்கல்வி கற்றுச் சாதனை

Viduthalai
2 Min Read

நெல்லை நகரத்தில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குக்கிராமம், ஒரு நாளைக்கு  காலை மாலை இரண்டு பேருந்துகள் மட்டுமே!

கூட்டம்  இல்லாததால் தனியார் பேருந்துகள் அந்த ஊருக்குப் போகாது.  அந்த ஊரில் 150 குடும்பங்கள் கிட்டத்தட்ட சிலர் படிப்பறிவில்லாத மக்கள் தாழ்த்தப் பட்ட சமூகம் – நிலபுலன் இல்லை, ஏதோ ஒரு காலத்தில் அங்கே குடியேறி அப்படியே வசிக்கிறார்கள்.

விவசாயக் கூலிகள், கல்குவாரிகளில் கல் உடைக் கும் பணிகள் மட்டுமே, அதிகம் போனால் சிலரிடம் சைக்கிள் மட்டுமே இருக்கும். அங்கிருந்து நகரத்திற்கு பெரியவர்கள் கூட வாரத்திற்கு சில நாள்தான் வருவார்கள்.

அருகில் உள்ள ஊரில் 5 ஆம் வகுப்புவரை பள்ளி இருந்ததால் பிள்ளைகள் அனைவரும் அதுவரை எப்படியோ படித்துவிட்டனர்.

அதன் பிறகு மானூர் கடந்து தாழையூத்து செல்லவேண்டும். இல்லையென்றால் நெல்லை ஜங்சன், ஒரு நாள் சென்றுவர பேருந்து கட்டணம் குறைந்தது 20 ரூபாய் ஆகும். கல் உடைக்க வாரக்கூலியே 150 ரூபாய்தான் – விவசாயக்கூலியோ ஒரு நாளைக்கு 30 ரூபாய் அப்படி இருக்க பேருந்திற்கு எங்கே பணம்? பல தலைமுறைபிள்ளைகள் கல்விக்கனவு காற்றில் கரைந்துபோனது.

அந்த கரைந்த கனவுகளோடு தாய் தந்தையோடு கல் உடைக்கச் சென்ற பிள்ளைகளின் அழுகுரல் எப்படியோ கலைஞரின் உள்ளத்தை உலுக்கியது.

1996 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று கலைஞர் முதலமைச்சரானார்,   குக்கிராமத்தில் படிக்கும் வறிய குடும்பத்துப் பிள்ளைகளின் கனவை நினைவாக்க தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக்கு சென்று வர ஏதுவாக கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் அமைதிப்புரட்சியை ஏற்படுத்தியது.

குக்கிராமத்தில் 5 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பெற்றோரோடு கல் உடைக்கச் சென்று வந்த பிள்ளைகள் சீருடை அணிந்து நகரங்களுக்கு உயர்கல்வி படிக்கச் சென்றனர்.

அப்படிச் சென்ற மாணவிகளில் ஒருவர் இன்று மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் உள்ளார்.

சில  மாணவர்கள் சேலம் இரும்பு உருக்காலை தலைமை திட்ட ஆலோசகர்களாக உள்ளனர். அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் பொறியியலாளர்களாக உள்ளனர். இஸ்ரோவில் தலைமை அறிவியலாளர்களாக உள்ளனர். 1990 வரை 10 ஆம் வகுப்பைத்தாண்டாத அந்த குக்கிராமம் இன்று வீட்டிற்கு ஒரு மருத்துவர், பொறியியலாளர், வங்கி அதிகாரி என நிறைந்துள்ளனர்.

சிலர் மட்டுமே சைக்கிள் வைத்திருந்த ஊர் அது. இன்று ஊரில் கொடை விழா என்றால் ஒவ்வொரு வீட் டிற்கு முன்னாலும் கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.

கலைஞர் என்னும் மனிதநேயர்  பள்ளி மாணவர் களுக்கு அந்த கட்டணமில்லா பேருந்து திட்டத்தைக் கொண்டு வராவிட்டால் அத்தனை பேரும் கல் உடைத்துக் கொண்டு தான் இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *