இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் இன்று (2.6.1951)
காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாண அரசு, 24.03.1947 அன்று ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணை மூலமாக, 14 பணியிடங்கள் இருந்தால், அவற்றில் இரண்டை, பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்டவருக்கு ஒதுக்கீடு செய்தது. ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியாரின் தலைமையிலான சென்னை மாகாண அரசுதான், இந்தியா விலேயே முதன்முறையாகத் தனி ஒதுக்கீடு வழங்கியது.நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, 21.11.1947 அன்று பிறப்பித்த அரசு ஆணையின்படி, இதற்கு முன் 12 என்று கணக்கிடப் பட்ட பணியிடங்கள் 14-ஆக உயர்த்தப்பட்டு, உயர்த்தப்பட்ட இரு பணியிடங்களும் பார்ப்பனர் அல்லாத, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு, ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.
இந்தியா குடியரசு நாடாகி, இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில், இரண்டு பார்ப்பன மாணவர்கள் வகுப்புவாரி ஒதுக்கீட்டால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், இந்த ஒதுக்கீட்டு ஆணை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15-ஆவது விதி மற்றும் 29(2)-ஆவது விதி ஆகியவற்றுக்கு முரணானது’ என்றும், ‘தனிநபர் உரிமையைப் பாதிக்கும் வகுப்புவாரி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய கமிட்டியில் இடம்பெற்ற அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே இந்த வழக்கில் வாதிகளுக்காக வாதாடினார்.
1928 முதல் ஓரளவுக்காவது நடைமுறையில் இருந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவை ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15-ஆவது விதிக்கும் 29(2)ஆவது விதிக்கும் முரணானது’ என்று சொல்லி ரத்துசெய்து உத்தரவிட்டு, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சென்னை மாகாண அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றபோது, ‘கம்யூனல் ஜி.ஓ. செல்லாது’ என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் விளையக்கூடிய பேராபத்தைத் தடுக்கத் திட்டமிட்ட தந்தை பெரியார், 1950 டிசம்பர் முதல் தேதியன்று திருச்சியில் ‘கம்யூனல் ஜி.ஓ. மாநாடு’ ஒன்றைக் கூட்டினார். ‘கல்வி, அரசியல் உத்தியோகங்களில் பின்தங்கிய மக்களுக்கு ஜனத்தொகை விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு செய்யும் வகையில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இடமளித்து அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.
கட்சி வேறுபாடின்றி மக்கள் அனைவரும் பெரியாருக்கு ஆதரவு தந்தார்கள். காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு பிரிவினரும்கூட தந்தை பெரியாரின் நியாயமான கோரிக்கைக்கு மறைமுகமான நல்லாதரவு காட்டினர்.
தமிழ்நாட்டில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. பெரியாரின் வேண்டுகோளை ஏற்று 14.08.1950 அன்று மாணவர்கள் களத்தில் இறங்கினர். சென்னை மாகாணம் முழுவதிலும், ‘அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்’ அல்லது ‘அரசியல் சட்டம் ஒழிய வேண்டும்’ என்ற முழக்கம் தலைதூக்கியது.
இந்திய அரசமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட கொஞ்ச காலத்திலேயே, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இடமளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் முதல் திருத்தத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார்.
அரசமைப்புச் சட்டத்தின் 1951-ஆம் ஆண்டு செய்யப்பட்ட முதல் திருத்தம், 15-ஆவது விதியின் 4-ம் உட்பிரிவாகச் சேர்க்கப் பட்டது.
இந்திய அரசமைப்பின் முதல் சட்டத் திருத்தம் 02.06.1951 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தத்தின் மூலம், அரசானது சமூகத்திலும், கல்வியிலும் தள்ளப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக சிறப்பு விதிகளை உருவாக்கலாம் என்று பிரிவு 15 (4) சேர்க்கப்பட்டது.
எனவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம், சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக தந்தை பெரியாரின் போராட்டங்களுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகக் கருதப்படுகிறது.