தி.மு.க. பொதுக் குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சங்கநாதம்

viduthalai
5 Min Read

தி.மு.க. கொள்கை கோட்பாட்டை கொண்டது
டில்லிக்கு தமிழ்நாடு என்றும் பணியாது, கட்டுப்படாது

மதுரை, ஜூன்.2- தி.மு.க.வுக்கு ஆதரவான அலை வீசுகிறது என்றும், டில்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே கட்டுப்படாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசினார்.

மதுரையில் நேற்று  (1.6.2025) நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கொள்கைக் கூட்டம்

தி.மு.க. வழக்கமான அரசியல் கட்சி அல்ல. வரலாற்றில் எத்தனையோ அரசியல் கட்சிகள் வரும், போகும். ஆனால், கொள்கைக்காக தோன்றி, லட்சியத்துக்காக தியாகங்கள் செய்து, மக்களின் ஆதரவைப் பெற்ற அரசியல் இயக்கம், இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு மாநிலக்கட்சி ஆட்சியைப் பிடித்த வரலாற்றை படைத்த இயக்கம், நம்முடைய இயக்கம் ‘கொள்கையை பரப்ப கட்சியும், கொள்கையை வென்றெடுக்க ஆட்சியும் தேவை என்று உழைப்பவர்கள் நாம். தடம் மாறாத கொள்கைக்கூட்டம் நாம். அதனால்தான் எந்த கோமாளிக் கூட்டத்தாரும் நம்மை வெல்ல முடியவில்லை; இனியும் வெல்ல முடியாது.

வியூகம்

இது வழக்கமான பொதுக்குழு அல்ல ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும் பொதுக்குழு.

அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்க வேண்டும் என்றால், 7ஆவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது. தி.மு.க. கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. “2ஆவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது”. இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்கவேண்டும். அதுக்கான வியூகத்தை வகுக்கும் பொதுக்குழுதான் இது.

உங்களுக்கே தெரியும், நான் மமதையில் பேசுகிறவன் அல்ல. “கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை” என்று ஆணவக்குரலில் சொல்பவன் அல்ல. எந்தக்காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது. என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்.

முதல் மாநிலம்

சூரியன் நிரந்தரமானது. அதேபோன்று தி.மு.க.வும் நிரந்தரமானது. தி.மு.க.எப்படி நிரந்தரமானதோ, அதே போன்று தி.மு.க. ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். அந்த நிலையை உருவாக்க முடியும். உங்களால்தான் முடியும். நம்மால்தான் முடியும்.

ஆதரவு அலை

ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தி.மு.க. மேல்தான் அதிக விமர்சனங்கள் குவியும். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு எதிரான அலையைவிட, ஆதரவு அலைதான் அதிகமாக வீசுகிறது. அது வெளியே தெரியாமல் மறைக்க, திசைதிருப்ப சிலர் நினைக்கிறார்கள்.

எப்படிப்பட்ட சூழலில் நாம் ஆட்சியில் அமர்ந்தோம் என்று மக்களுக்கு தெரியும். கடந்த அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி ஆட்சியால், அதல பாதாளத்துக்கு சென்ற தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம். ஒன்றிய பா.ஜனதா அரசு, நம்முடைய உரிமைகளுக்கு எதிராக எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அத்தனையையும் எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறோம். நமக்கு நியாயமாக ஒதுக்கவேண்டிய நிதியை ஒதுக்காமல், தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக முடக்க நினைத்தாலும், அந்த நெருக்கடிகள் அனைத்தையும் கடந்து மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இன்று இந்தியாவிலேயே வளர்ச்சியில் ‘நம்பர் ஒன்’ மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறோம்.

பொய்யை விதைப்பார்கள்

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது. அதனால், வழக்கத்தைவிட அதிகமாக, தி.மு.க.வுக்கு எதிராக, தி.மு.க. ஆட்சிக்கு எதிராக, அவதூறு அம்புகளை மக்கள் மத்தியில் எதிராளிகள் வீசுவார்கள். கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்கள் மனதில் பொய்யை விதைக்க முயற்சிப்பார்கள். சமூக ஊடகங்கள் மூலமும், விதைப்பார்கள் இதையெல்லாம் முறியடிக்க நாம் தயாராக வேண்டும்.

அவர்களின் பொய்களுக்கு முன்னால், நம்முடைய உண்மை மக்களிடம் சென்று சேரவேண்டும். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பழனிசாமி என்ன நினைத்தார்? தி.மு.க.கூட்டணி பிரியவேண்டும் என்று நினைத்தார். அதுக்காக, என்னென்ன கதைகளையோ உருவாக்கினார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜனதாவுடன் பிரிந்த மாதிரி நடித்தால், நம்முடைய கூட்டணி உடையும் என்று நினைத்தார்கள். ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை.

அதனால்தான், இப்போது டில்லிக்கு சென்று, பல கார்களில் மாறிமாறி, அமித்ஷாவை சந்தித்து, மீண்டும் பா.ஜனதாவிடம் சரணடைந்து விட்டார். அ.தி.மு.க. – பா.ஜனதா கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது ஒரு வார்த்தை கூட பேசாமல், பவ்யமாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். என்ன ஒரு அடக்கம்? சசிகலா இவரை முதலமைச்சராக அறிவித்தபோது, எப்படி எல்லாம் ‘ஆக்சன்’ செய்தாரோ அதே மாதிரி நடிப்பு. என்ன… காலில் மட்டும்தான் விழவில்லை. அது தனியாக செய்தார்களா என்று நமக்கு தெரியவில்லை.

டில்லிக்கு கட்டுப்படாது

நாம் கேட்பது… ஒரு மாநிலத்தில், ஒரு கூட்டணிக்கு யார் தலைமை வகிக்கிறார்களோ, அவர்கள்தான் கூட்டணியை அறிவிப்பார்கள். ஆனால், இங்கு அமித்ஷா அறிவிக்கிறார். இதிலிருந்தே இவர்கள் லட்சணத்தை நாம் புரிந்து கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக பா.ஜனதாவின் கட்டுப்பாட்டுக்கு சென்றிருக்கிறது அ.தி.மு.க.. அடுத்து, ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுசெல்லத்தான் பழனிசாமி துடிக்கிறார். அதனால்தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார். நான் ஏற்கெனவே சொன்னதுதான், மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன், எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது.

டில்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே ‘அவுட் ஆப் கண்ட்ரோல்’ (கட்டுப்படாது) தான். இதை மக்களிடம் நாம் எடுத்துச்செல்ல வேண்டும்.

பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்தால், தமிழ் நாட்டை என்ன செய்வார்கள் என்று சொல்ல வேண்டும். மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். ஜாதிக் கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்கவிட மாட்டார்கள். பிற்போக்குத் தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது. ஹிந்தி மொழித்திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு செய்து, தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்து விடுவார்கள் என்று மக்களிடம் எடுத்துசொல்லவேண்டும். அதுமட்டுமல்ல, புதிதாக சிலர் “நாங்கள்தான் மாற்று” என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள். அவர்களுக்கும் பதிலடி தர வேண்டும்.

வீழாது தமிழ்நாடு

எனக்கு தெரிந்தது;அரசியல் மட்டும்தான். தலைவர் கலைஞராக இருந்தால், கவிதை எழுதுவார்; கதைகள் எழுதுவார்; சினிமா வசனம் எழுதுவார்; இலக்கிய மேடைகளில் கலக்குவார். ஆனால், நான் அரசியல்-அரசியல், உழைப்பு-உழைப்பு என்று வளர்ந்தவன். டி.வி. பார்த்தால்கூட, செய்தி சேனல்தான் பார்ப்பேன்.

சோசியல் மீடியாவை பார்த்தாலும், அரசியல் செய்திகள், பேட்டிகளைத்தான் பார்ப்பேன். தி.மு.. இருக்கும் வரை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, டில்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது. தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *