வெல்வாய் ‘விடுதலை’யே!

viduthalai
1 Min Read

கவிஞர் கலி. பூங்குன்றன்

‘விடுதலையே’, ‘விடுதலையே’ – உன்

வியர்வை வேரில்

விழி பெற்ற மானுடர் நாங்கள்!

எத்தனை எத்தனை

காயங்களை ஏற்றாய்?

எவ்வளவு ஜாமின் தொகைகள் – உன்

எழுத்து வெடி குண்டுக்கு?

சமூக நீதிக் குரலை நீ

உயர்த்தியதற்கு

சாவு மணியடிக்க

துடித்ததே ஆரியம்!

சளைக்கவில்லை நீ –

சமர் தொடுக்க

போர் சங்கு ஊதினாய்

சப்த நாடியும் அடங்கியது!

சமுத்திரத்தின் அலைகளையும்

செவி டாக்கியது உன் போர் முரசு!

இறுதிச் சிரிப்பு உனக்கே! உனக்கே!!

இன்றளவும் கண்ணிவெடி

வைக்கிறார்கள்

புண்ணாகிப் போவார்கள் – உன்

போர்த் திறத்தாலே!

எப்படித் தோற்பாய் நீ!

நியாயமெல்லாம் உன் பக்கம்!

வெகு மக்களும் உன்

சொல்லுக்குள் அடக்கம்!

உன் சமூகநீதியின் சப்தம்

இமயமலையின் கதவையே

தட்டுகிறது!

இளந் தலைவர் ராகுல் காந்தி

சமூகநீதி சாட்டையை சுழற்றுகிறார்!

சங்கிகள் பதறுகின்றார்

சவுக்கடி பேசுகிறது

சரித்திரம் மாறுகிறது

ராமராஜ்யத்துக்கு

முடிவு சிராயு நதியில்தான்!

சாமானிய மக்களின்

தோள்களும்

தோட்டாக்கள் ஆகின!

சமூக அரசியலின்

அகராதியே மாறுகிறது!

தொண்ணூறு ஆண்டை

முடித்தாய் ‘விடுதலை’யே!

நூற்றாண்டு முடியுமுன்  – முழுப்

‘பட்டாபிஷேகம்’ உனக்கே தான்!

பிச்சை கேட்கும் பார்ப்பனீயம்

பிழைத்துப் போகட்டுமென்று

பிரித்துக் கொடுப்போம்

பேராசை இல்லை நமக்கு!

பெரியார் என்னும்

மனிதநேயத்

தோப்புக் கனிகள் நாமன்றோ!

ஒரு கையில்

அறிக்கைத் தீப்பந்தம்!

மறு கையில்

வாழ்வியலின்

வாச முத்தம்!

வீர மணியோசையோ

நித்தம் நித்தம்!

‘விடுதலை’யே நீ பதித்த

ஒவ்வொரு அடியும்

வரலாற்றின் கல்வெட்டு!

உன் பாதை தொடர்வோம்

உன்னிடத்தில்தானே

எங்களின் பாதுகாப்பு

வெல்க, வெல்கவே!

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *