2,800 லிருந்து 2,300 ஆண்டுகள் என கீழடி நகர நாகரிக வயதை 500 ஆண்டுகள் குறைக்கும் ஒன்றிய தொல்லியல் துறை-அதிர்ச்சித் தகவல்கள்!

viduthalai
3 Min Read

சென்னை, மே 31– கீழடி நாகரிக வயதினை 2,800 ஆண்டில் இருந்து 2,300 ஆண்டுகள் என மொத்தம் 500 ஆண்டுகளை ஒன்றிய தொல்லியல் துறை குறைக்கிறது. அதற்கான காரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கீழடி அகழாய்வு

மதுரை அருகே உள்ள கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் தொல்லியல் துறை அங்கு கிடைத்த பழைமையான எச்சங் களின் அடிப்படையில் அகழாய்வுப் பணிகளை தொடங்கியது. சுமார் 2 ஆண்டுகள் அங்கு நடந்த பணிகளை ஒன்றிய தொல்லியல் துறையின் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி நடத்தினார்.

அப்போதுதான் வைகைக் கரையில் மண்ணுக்குள் புதைந்து இருந்த கீழடி என்ற மிகவும் பழைமையான நகர நாகரிகம் வெளியே கொண்டு வரப்பட்டது. இருந்தாலும் கீழடி அகழாய்வுக்கு, ஒன்றிய அரசு தொடர்ந்து நிதி ஒதுக்கவில்லை. எனவே தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை, கீழடி அகழாய்வுப் பணியை தற்போது தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், 2 ஆண்டுகள் தான் மேற்கொண்ட அகழாய்வுப் பணிகள் குறித்த 982 பக்கம் கொண்ட அறிக்கையை அமர் நாத் ராமகிருஷ்ணன், ஒன்றிய தொல்லியல் துறையிடம் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பித்தார். அதனை பொதுவெளியில் ஒன்றிய அரசு வெளியிடவில்லை.

அறிக்கையில் திருத்தம்

இந்த நிலையில் திடீரென்று, அந்த அறிக்கையில் சில திருத்தங் களை செய்யச் சொல்லி ஒன்றிய தொல்லியல் துறை அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு திருப்பி அனுப்பியது. ஆனால் அமர்நாத் ராமகிருஷ்ணன், தான் கொடுத்த ஆய்வறிக்கையில் எந்த தவறும் இல்லை. அனைத்து ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.எனவே அதில் திருத்தம் செய்ய இயலாது என்று கூறி மீண்டும் ஒன்றிய தொல்லியல் துறைக்கே அனுப்பி வைத்து விட்டதாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் ஒன்றிய அரசு, இந்த ஆய்வறிக்கையில் என்ன திருத்தம் செய்ய விரும்புகிறது? என்ற தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அமர்நாத் ராமகிருஷ்ணன் கொடுத்த அறிக்கையில், கீழடி நாகரிகம் முதலில் 2,800 ஆண்டுகளுக்கு  முன்பு தோன்றியது என்றும், அதன்பின் 2,500 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி பெற்று இருந்தது என்றும் கூறியிருக்கிறார். ஆனால் ஒன்றிய அரசு, அதனை ஏற்க மறுக்கிறது. அதாவது கீழடி நாகரிகம் தோன்றியது 2,300 ஆண்டுகள் தான் என கூறுகிறது. அதில் தான் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது ஒன்றிய அரசு 500 ஆண்டுகளை குறைக்கிறது.

ஆய்வாளர்கள் கருத்து

இது குறித்து தமிழ்நாடு தொல்லியல் ஆய்வாளர்கள் சிலர் கூறியதாவது:- இந்தியாவின் பழைமையான நாகரிகம் என்று சொல்லப்படும் சிந்து சமவெளி நாகரிகம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. அந்த நாகரிக மக்கள் யார் என்பது புரியாத புதிராக இருந்தது. ஆனால் கீழடி நாகரிகத்திற்கு பிறகு அதற்கான விடை தெரிய தொடங்கி வருகிறது. அதாவது சிந்து சமவெளி நாகரிகம் முடிவுற்றது, சுமார் 2,800 ஆண்டுகளுக்கு முன்புதான். அதாவது கீழடி நாகரிகம் தொடங்குவதும், சிந்து சமவெளி நாகரிகம் முடிவுக்கு வந்த ஆண்டுகளுக்கும் இடையே ஒரு பிணைப்பு இருக்கிறது.

எனவே சிந்து சமவெளியின் தொடர்ச்சி தான் கீழடி. எனவே இந்த 2 நாகரிகமும் தமிழர்களுக்கு உரியது. ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள ஒன்றிய அரசு தயாராக இல்லை. கீழடியில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டதில் அதன் ஆண்டுகள் 2,800 ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொல்லும் போது, அதனை ஏன் 2,300 ஆண்டுகள் என்று குறைக்க வேண்டும்?. கீழடி என்பது தமிழர் நாகரிகம் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதற்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. எனவே 500 ஆண்டுகளை குறைப்பது தமிழரின் மொழி, . இன அடையாளம், வரலாற்று உண்மை ஆகியவற்றை அழிக்க நினைக்கும் ஒரு முயற்சிதான்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *