காந்தியார் கொலையில் தொடர்புடையவர்கள் மீது பரிதாபத்தை உருவாக்க ஹிந்துத்துவ கும்பல்கள் சூழ்ச்சி-சரா

viduthalai
3 Min Read

சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார், பென்ஷன் பெற்றார், மற்றும் பிரிட்டிஷாருக்கு “அடிமையாக இருந்தார்” போன்ற கருத்துக்களை ராகுல் காந்தி தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது

ராகுல்காந்தி மீது சாவர்க்கரின் உறவு என்று கூறி வழக்கு தொடர்ந்தவர், உண்மையில் கோட்சேவின் இரத்த வாரிசு. இதன்படி ராகுல்காந்தி சாவர்க்கர் குறித்து கூறியது உண்மையானது என்று உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்ந்தவர் பெயர் காந்தியார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விநாயக் சாவர்க்கர்.

கட்டுரை, ஞாயிறு மலர்

மீண்டும் காந்தியார் கொலையில் விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்ற பெயர் அடிபடவே ஹிந்துத்துவவாதிகள் காந்தியார் கொலை அதனைத்தொடர்ந்து ஹிந்துத்துவ அமைப்புகள் மீது உள்ள வெறுப்பை நீர்த்துப் போகச்செய்யும் வகையில் வதந்தி பரப்பத் துவங்கிவிட்டனர்.

அதாவது நாதுராம் கோட்சே காந்தியாரைச் சுட்டபிறகு சாவர்க்கரும் இக்கொலையில் இணைந்துள்ளார் என்று கூறி அவரது சகோதரர் நாராயண் சாவர்க்கரை பொதுமக்கள் அடித்தே கொன்றனர் என்று சாவர்க்கர், கோட்சேக்கள் மீது பரிதாபத்தை உண்டு செய்யுமாறு திசை திருப்பி வருகின்றனர். சாவர்க்கர் திரைப்படத்தில் சாவர்க்கராக நடித்த மராட்டி நடிகர் தீபேந்திர ஹுட்டா கருத்து தெரிவித்தார். அதில் “வினாயக் சாவர்க்கரின் சகோதரர் நாராயண் சாவர்க்கர் மற்றும் 8000 சித்பவன் இந்து பார்ப்பனர்கள் காந்தியாரின் மரணத்திற்குப் பிறகு அடித்துக் கொல்லப்பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது” –  என்று கூறியுள்ளார்.

1948 ஜனவரி 30 அன்று காந்தியார் படுகொலை செய்யப்பட்ட பிறகு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக மகாராட்டிராவில், சித்பவன் பார்ப்பனர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. சாவர்க்கர் ஒரு சித்பவன் பார்ப்பனர் என்பதும், காந்தியார் படுகொலையில் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததும் (பின்னர் தந்திரமாக அவர் விடுவிக்கப்பட்டார்) இந்த வன்முறைக்கு ஒரு காரணமாக அமைந்தது.

காந்தியார் கொலை குறித்து அமைக்கப்பட்ட கபூர் கமிஷன் காந்தியாரின் கொலையில் சாவர்க்கரின் தொடர்பு குறித்துக் குறிப்பிட்டது. ஆனால், அதன் முடிவு வருவதற்கு முன்பே சாவர்க்கர் இறந்துவிட்டார் என்பதால் அது அப்படியே அமுங்கிப் போனது. ஆனால், வரலாற்றில் காந்தியார் படுகொலையின் போது மும்பை மாகாணத்தில் கலவரம் வெடித்தது என்ற செய்திகள் பல காணக் கிடைக்கிறது.

புதியதோர் உலகம் செய்வோம்!

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றோர் காந்தியார் கொலையின்போது பார்ப்பனர்களுக்கு எதிரான வன்முறையைக் கைவிட அறிக்கைகள் விட்டனர். வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் ஹிந்துத்துவ அமைப்பினர் கூறியது போல் பார்ப்பனர்கள் மட்டுமே –  குறிப்பாக சித்பவன் பார்ப்பனர்கள் மீதான தாக்குதல் குறித்து தகவல்கள் இல்லை. அதிலும் 8000 சித்பவன் பார்ப்பனர்கள் கொல்லப்பட்டனர் என்பதற்கு எந்த வரலாற்றுத் தரவுகளும் இல்லை. நாராயண் கோட்சே பொதுமக்களால் அடித்துக்கொல்லப்பட்டார் என்ற தகவல் எங்குமே இல்லை..  உண்மையில் காந்தியார் கொலையில் போது மும்பை மாகாணத்தில் சில பகுதிகளில் கலவரம் நடந்தது, உடனடியாக அது தடுக்கப்பட்டது.  இது தொடர்பாக நாளேடுகள் தலைப்புச் செய்திகளே வெளியிட்டுள்ளன. மும்பையில் தாதர், வெர்லி, தானே உள்ளிட்ட மத்திய மும்பை பகுதியில் சில இடங்களில் கலவரம் நடந்தது. சித்பவன் பார்ப்பனர்கள் மும்பை மற்றும் புனேவில் மிகவும் சொற்ப எண்ணிக்கையில் தான் இருந்தனர். பல்வேறு ஹிந்துத்துவ அமைப்புகள் காந்தியார் படுகொலை தொடர்பாக தொடர்ந்து எழுதிய வதந்திகளால் இணையதளம் நிரம்பி வழிகிறது. அதாவது உண்மை எது? போலி எது? என்று கூட பிரித்து பார்க்க முடியாத வகையில் உள்ளது.

நாராயண் சாவர்க்கர் மும்பை தாதர் பகுதியில் தனது குடியிருப்பில் இருக்கும் போது தலையில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டு கட்டுகளோடு இருந்தார் என்று லோக்சத்தா என்ற இதழ் கூறியுள்ளதாக மனோகர் கவிட் என்ற மராட்டி ஆய்வாளர் கூறியுள்ளார். ஆனால் ஹிந்துத்துவ அமைப்பினர் அவரது தலைக்காயத்திற்கு காரணம் கலவரத்தின்போது கல் எறிந்ததுதான் என்று இன்றும் கதைவிட்டு வருகின்றனர்.

மேலும் நாராயண் சாவர்க்கர் 19.10.1949 ஆம் ஆண்டு இறந்தார். அதாவது காந்தியார் கொலை நடந்த ஓராண்டிற்குப் பிறகுதான் மரணமடைந்தார்.  அப்படி இருக்க காந்தியார்  கொலை  மற்றும் நாதுராம் கோட்சே உள்ளிட்ட கொலைக்குற்றவாளிகள் மீதான வெறுப்பை நீர்த்துப் போகச்செய்ய பொதுமக்களின் கலவரத்தால் நாராயண் சாவர்க்கர் இறந்தார் என்றும் 8000 சித்பவன் பார்ப்பனரக்ள் இறந்தனர் என்றும் கதைவிட்டு வரலாற்றை திருத்தி எழுத முனைகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *