(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
சீதை மாமிசம் சாப்பிட்டது ‘துக்ளக்’குக்கு தெரியுமா?
மின்சாரம்
(28.6.2023 ‘துக்ளக்’ ஏட்டின்
பதில்களுக்குப் பதிலடி)
கேள்வி: ‘முஸ்லிம் லீக் மதச் சார்பற்ற கட்சி. அந்தக் கட்சியை மதச் சார்புள்ளது என்று சொல்ல எதுவும் இல்லை‘ என்று ராஹுல் காந்தி கூறியிருப்பது பற்றி?
பதில்: ஹிந்து என்றால் மட்டுமே வகுப்பு வாதம். ஹிந்துக்கள் மட்டுமே வகுப்புவாதிகள். மைனாரிட்டி என்றால் மதச்சார்பின்மை, சுதந்திரம் பெற்றது முதல் இதுதான் நமது மதச் சார்பற்ற அரசியல் சித்தாந்தம். இதன்படி முஸ்லிம் லீக் மதச்சார்பற்ற கட்சியாகத் தானே இருக்க முடியும்? ராஹுல் கூறுவது சரிதான்.
நமது பதிலடி: முஸ்லிம் என்பது மத அடையாளம் தான். ஆனால் நாங்கள் முஸ்லிம் ராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம் – எங்கள் கடவுளைத்தான் கும்பிட வேண்டும், எங்கள் உருதுவைத்தான் தேசிய மொழியாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை, மாறாக நாங்கள் சிறுபான்மை மக்களாக இருக்கிறோம் – எங்களுக்குரிய உரிமைகளும் வாய்ப்பு களும், கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று பெரும்பான்மை வாத கூக்குரல்காரர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள ஓர் அமைப்பினை வைத்துள்ளனர். இது எப்படி மதவாதம் ஆகும்?
அதே நேரத்தில் ஹிந்து மதம் – சிறுபான்மை மக்களுடைய மதத்தை இழிவுபடுத்துவது – சீண்டுவது ஒரு புறம் இருக்கட்டும்.
ஹிந்து மதம் – தங்கள் மதத்தைச் சார்ந்தவர்களையே பிறப்பின் அடிப்படையில் வேறுபடுத்துவது, மேல் ஜாதி, கீழ் ஜாதி என்பது (தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கராச்சாரியார் தான் எங்களின் ஜெகத் குரு என்பது) எல்லாம் பச்சையான வகுப்புவாதம் அல்லாமல் வேறு என்னவாம்?
பிர்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன் – அவன் இரு பிறப்பாளன் (துவி ஜாதி) அதன் அடையாளம் தான் இந்தப் பூணூல் என்று மார் தட்டுவது வகுப்பு வாதம் அல்லாமல் வேறு என்னவாம்?
கங்கையில் குளிக்கப் போன ஒரு பெண்ணைப் பார்த்து ‘நீ முஸ்லிம், நீ எப்படி எங்களின் புனிதமான கங்கையில் குளிக்கலாம்?‘ என்று கேட்பது, அச்சுறுத்து வது வகுப்புவாதம் இல்லாமல் வேறு என்னவாம்?
இன்னும் எவ்வளவோ கேள்விகள் உண்டு; தொடுக்க ஆரம்பித்து விட்டால் தாங்க மாட்டீர்கள் – அவ்வளவுதான்!
கேள்வி: பணம் வைத்திருக்கும் அயோக்கியனை மக்கள் மதிக்கிறார்களே ஏன்?
பதில்: கலியுகத்தில் பணத்தை மட்டுமே வைத்து மனிதர்கள் மதிக்கப்படுவார்கள், நல்ல பண்புகளின் அடிப்படையில் மனிதர்கள் மதிக்கப்பட மாட்டார்கள் என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பாகவத புராணம் கூறிவிட்டது. மக்கள் அப்படி நடக்கவில்லை என்றால் பாகவத புராணம் பொய்யாகி விடுமே!
நமது பதிலடி: அப்படியென்றால் அந்தக் கலி யுகத்தைப் படைத்ததாகக் கூறும் அந்தக் கடவுள் அயோக்கியன் என்று ஒப்புக் கொண்டு விட்டார்கள் என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்!
கேள்வி: ‘கணவரை இழந்தவர் என்பதால், புதிய நாடாளுமன்றத்தைத் திறக்க அனுமதிக்கவில்லை’ என்று ஜனாதிபதி பற்றி முத்தரசன் கூறியது அபத்தம் தானே?
பதில்: அபத்தம் மட்டுமல்ல, அநாகரிகம். முத்தரசன் கம்யூனிஸ்டாக மட்டும் இருந்தால் இப்படிக் கூறியிருக்க மாட்டார். அவர் திராவிட மாடல் கலந்த கம்யூனிஸ்ட், எனவே இந்த அநாகரிகப் பேச்சு.
நமது பதிலடி: நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திறப்பது அப்புறம் இருக்கட்டும். நாடாளு மன்ற திறப்பு விழா அழைப்பிதழைக்கூட குடியரசுத் தலைவருக்கு அளிக்கவில்லையே! துணைக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு நேரில் அளிக்கப்படுகிறது; ஆனால் குடியரசுத் தலைவருக்கு அந்தப் பதவியை உத்தேசித்தாவது அழைப்பிதழைக் கொடுக்கத் தடுத்தது எது – தோழர் முத்தரசன் கூறியதில் என்ன குற்றம்?
‘விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்கு சமமான வர்கள் என்று சொன்னவர்தானே உங்களின் லோகக் குரு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி – அதற்காக 9.3.1998 காலை 10 மணிக்கு காஞ்சி சங்கர மடத்தின் முன் திராவிடர் கழக மகளிர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுண்டே!
12.1.1998 தினமணியில் பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் கண்டித்து எழுதினாரே! ஹிட்லரும், சங்கராச்சாரியாரும் என்று தலைப்பிட்டு கட்டுரை தீட்டினாரே, ‘இந்தியா டுடே’யில் எழுத்தாளர் வாஸந்தி!
குடியரசுத் தலைவர் ஒரு விதவைப் பெண் – சங்கராச்சாரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால் தரிசு நிலம் – அந்த அடிப்படையில் இந்துத்துவா கொள்கை உடைய பிஜேபி ஆட்சி குடியரசுத் தலைவரை அவமதித்துள்ளது என்று தோழர் இரா.முத்தரசன் கூறியதில் என்ன குற்றம்?
திராவிடர் கொள்கைக்கும், கம்யூனிஸ்ட் கொள் கைக்கும் இடையே சிண்டு முடியும் சிண்டுகளின் சில்லறைத்தன வேலை தந்தை பெரியார் மண்ணில் பலிக்காது – பலிக்கவே பலிக்காது!
கேள்வி: சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்றவர்களுக்கு தாம்பூலப் பையுடன் குவார்ட்டர் மதுப் பாட்டில் ஒன்றும் துணிப் பையில் போட்டுக் கொடுக்கப் பட்டுள்ளதே?
பதில்: திருவள்ளுவரைப் போன்று ஆன்றோர்கள் வகுத்த தமிழ் கலாச்சாரம் மதுவை ஒதுக்கும். ஈவெரா வகுத்த திராவிடக் கலாச்சாரம் மதுவை வரவேற்கும். திராவிட மாடல் கலாச்சாரம் தான் இப்பொழுது தமிழ்க் கலாச்சாரம். எனவே துணிப் பையில் குவார்ட்டர் பாட்டில், கூடிய விரைவில் மஞ்சள் பையிலும் குவார்ட்டர் பாட்டில் வரலாம்.
நமது பதில்: புதுச்சேரியில் மதுவிலக்கு எப் பொழுதுமே கிடையாது என்ற பாலபாடம் கூட ‘துக்ளக்’ பார்ப்பனருக்குத் தெரியாது போலும்!
உண்மையைச் சொல்லப்போனால் சுரா பானம் குடித்ததால் ஆரியர்கள் “சுரர்கள்” என்றும் அதனைக் குடிக்க மறுத்ததால் திராவிடர்கள் அசுரர்கள் என்றும் அழைக்கப்படுவது அய்யர் குருமூர்த்திக்குத் தெரி யுமா?
வால்மீகி இராமாயணத்தின்படி இராமன் குடித்திருக் கிறானே. 96ஆவது சருக்கத்தில்,
“நிஷாந்த பரஸ்த்தே சீதம்
மாம ஸேனாச் சண்டயம்”
இதன் பொருள் என்ன? சீதைக்கு இராமன் மாமி சத்தைக் கொடுத்து மகிழ்ச்சியூட்டினான் என்பதுதானே!
உண்மையைச் சொன்னால் சுதந்திரப் போராட் டத்தில் காந்தியார் மது விலக்குப் போராட்டத்தை நடத்திய போது இந்தியாவிலேயே ஈரோட்டில்தானே வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டியவர் தந்தை பெரியார் தானே!
மதுவிலக்குப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதா, கூடாதா என்பது என் கையில் இல்லை. ஈரோட்டில் இரு பெண்மணிகளின் கைகளில்தான் இருக்கிறது என்று பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காந்தியார் கூறவில்லையா? யார் அந்த இரு பெண்மணிகள்? தந்தை பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாள் ஆகியோர் தானே! இதை எல்லாம் தெரிந்து கொள்ளாத “அமாவாசை அறிவாளிகள்” தந்தை பெரியாரை இழுத்துக் குளிர் காய்வது வெட்கக் கேடே!