44 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் மணிப்பூரில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியாம்!-மேனாள் அமைச்சர் தகவல்

viduthalai
2 Min Read

இம்பால், மே 29  மணிப்பூரில் புதிய அரசை அமைக்கும் முயற்சியாக பாஜக  மேனாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தோக்சோம் ராதேஷ்யாம் சிங் உள்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் அஜய் குமார் பல்லாவைச் சந்தித்து, புதிய அரசு அமைக்க தங்களுக்கு 40-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பதாக தெரிவித்தனர்.

மணிப்பூரில்

மெய்த்தி – குக்கி எனும் இரு பிரிவு மக்களிடையே மே 2023-இல் வெடித்த மோதல் காரணமாக மாநிலத்தில் அமைதியற்ற நிலை நீடித்தது. மணிப்பூர் முதலமைச்சராக இருந்த பாஜக தலைவர் பிரேன் சிங் தலைமையிலான அரசு, இந்த மோதல்களை கையாண்ட விதம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக பிரேன் சிங் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.  இதையடுத்து, கடந்த பிப்ரவரி முதல் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.

இந்நிலையில், மணிப்பூரில் புதிய அரசு அமைக்கும் முயற்சியாக பாஜக சட்டமன்ற உறுப்பினரும், மேனாள் அமைச்சருமான தோக்சோம் ராதேஷ்யாம் சிங் உள்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தோக்சோம் ராதேஷ்யாம் சிங், “மக்களின் விருப்பப்படி 44 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு, தயாராக உள்ளனர். இதை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வுகள் இருக்க முடியும் என்பதையும் நாங்கள் விவாதித்தோம். நாங்கள் என்ன தெரிவித்தோமோ அவற்றை ஆளுநர் கேட்டுக்கொண்டார். அடுத்ததாக மக்களின் நலனுக்காக அவர் நடவடிக்கைகளைத் தொடங்குவார்,” என்று தெரவித்தார்.

ஆளுநருடனான சந்திப்பின்போது ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தோக்சோம் ராதேஷ்யாம் சிங், “ஆட்சி அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவிப்பது அரசை அமைக்க உரிமை கோருவதற்கு சமம். சட்டமன்றத் தலைவர் தி.சத்ய பிரதா தனித்தனியாகவும் கூட்டாகவும் 44 சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துள்ளார். புதிய அரசு அமைப்பதை யாரும் எதிர்க்கவில்லை.

மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முந்தைய ஆட்சிக் காலத்தில், கோவிட் காரணமாக இரண்டு ஆண்டுகள் வீணாகிவிட்டன. இந்த ஆட்சிக் காலத்தில், மோதல் காரணமாக மேலும் இரண்டு ஆண்டுகள் வீணாகிவிட்டன” என்று கூறினார்.

60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தற்போது 59 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு சட்டமன்ற உறுப்பினர் உயிரிழந் ததை அடுத்து, அந்த தொகுதி காலியாக உள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணியில் 32 மெய்த்தி சட்டமன்ற உறுப்பினர்கள், மூன்று மணிப்பூரி முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 9 நாகா சட்டமன்ற உறுப்பி னர்கள் என மொத்தம் 44 பேர் உள்ளனர்.

காங்கிரஸில் அய்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் மெய்த்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மீதமுள்ள 10 சட்டமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரையில், குக்கிகளில் ஏழு பேர் கடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இரண்டு பேர் குக்கி மக்கள் கூட்டணியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சுயேச்சை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *