ஜெய்ப்பூர், மே 27- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறி தங்களது மனைவி மற்றும் தோழிகளுடன் பகல் நேரத்தில் சுற்றிஜாலியாக செலவிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் சிறை அதிகாரிகளுக்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுத்துள்ளனர். இதையடுத்து சிறை அதிகாரிகள் உட்பட 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ரபீக் பக்ரி, பன்வர் லால், அங்கித் பன்சால் மற்றும் கரண் குப்தா ஆகிய நான்கு கைதிகள் பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி ஜெய்ப்பூர் சிறையில் அடக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறி ஒப்புதல் பெற்றனர்.
பின்னர். அவர்களில் ஒருவரை தவிர மற்ற மூன்று கைதிகளும் தங்களது மனைவி மற்றும் காதலியுடன் சுற்றுலா செல்வதற்கு ரூ.25 ஆயிரம் பணத்தை செலவு செய்து இடைத்தரகரின் உதவியுடன் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக, தங்களுக்கு பாதுகாப்பாக வந்த காவலர்களுக்கு அந்த மூன்று கைதிகள் தலா ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக வழங்கியுள்ளனர்.
13 பேர் கைது
மாலை 5.30 மணிக்குள் சிறைக்கு அவர்கள் திரும்பாததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, 5 காவலர்கள், நான்கு கைதிகள் மற்றும் அவர் களது நான்கு உறவினர்கள் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவத்தையடுத்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் சிறைக்குள் இருக்கும் கைதி ஒருவர் இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஜெய்ப்பூர் சிறையில் சட்டவிரோதமாக அலைபேசி பயன்பாடு அதிகரித்து வருவது கண்டறியப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து உள்ளே இருந்து 200-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் இடைமறிக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்புகள் மூலம், ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் உட்பட பல விஐபிகளுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
சவாய் மான் சிங் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜெய்ப்பூர் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.