போபால், மே 27 மத்தியப் பிரதேச மாநிலம் பாய் கான் கா புரா என்ற கிராமத்தில் பண்டி பதாரியா (39), அவருடைய மருமகன் போலா பதாரியா (23) ஆகிய இருவரும் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்தனர். இவர்களுக்கு எதிராக பிரதீப் தோமர், லூக்கா தோம், லால்கி பண்டிட் ஆகியோரும் சட்டவிரோதமாக மதுபானம் விற்று வந்துள்ளனர்.
இதனால் இரு கும்பலுக்கும் இடையில் நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சிலர் பாய் கான் கா பூரா கிராமத்திற்கு மதுபானம் கொண்டு வருவதாக பண்டிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பண்டி தனது மருமகன் போலா பதாரியா உடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு மற்றொரு கும்பல் மதுபானம் விற்றுக் கொண்டிருந்துள்ளது. இருவரும் அவர்களுடன் தகராறு செய்துள்ளனர். இதனால் அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் இருவரையும் சரமாரியாக சுட்டுள்ளனர். இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சட்டவிரோதமாக மதுபானம் விற்ற விவகாரத்தில் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், அக்கிரா மத்தில் காவல்துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்க் கட்சியான காஙகிரஸ் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பாஜக தலைமையில் காட்டு ராஜ்ஜியம் நடப்பதாக ஆளுங்கட்சியை விமர்சித்துள்ளது.