புதுடில்லி, மே 27 தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 6 உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஜூன் 19-ஆம் தேதி அந்த 6 இடங்களுக்கான தேர்தல் நடை பெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பதவிக்காலம் முடியும் 6 எம்.பி.க்கள்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், திமுகவைச் சேர்ந்த எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா மற்றும் பி.வில்சன், மதிமுகவைச் சேர்ந்த வைகோ ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
ஜூன் 9 வேட்புமனு தொடக்கம்
இந்நிலையில், இந்த 6 மாநிலங் களவை பதவிகளுக்கான தேர்தல் அட்டவணை குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (26.5.2025) வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் ஜூன் 9-ஆம் தேதி இந்த பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்றும், ஜூன் 10-ஆம் தேதி, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 12-ஆம் தேதி இறுதி நாளாகும். ஜூன் 19-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதேபோல், அசாம் மாநி லத்தில் காலியாகவுள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் களுக்கான தேர்தலும் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
யாருக்கு வாய்ப்பு?
எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை யின் அடிப்படையில் பிரதிநிதித் துவம் அளிக்கப்படும், இத்தேர்தலில் திமுகவுக்கு 4 இடங்களும், அதி முகவுக்கு 2 இடங்களும் உள்ளன. இதில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் சார்பில் யார் யாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும், என்பது விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.