இந்நிலையில் ஏமிகார்மைக்கேலின் பணியில் மற்றொரு திருப்புமுனையாக எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. கி.பி 1901ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் நாள் அவர்கள் வசித்து வந்த பண்ணைவிளை என்ற ஊரின் அருகில் இருந்த பெருங்குளம் என்ற ஊரிலிருந்த இந்து சமயக் கோவில் ஒன்றில் ‘பொட்டுக் கட்டி’ தேவதாசியாக்கி விடப்பட்டிருந்த ஏழுவயது சிறுமியான லட்சுமி என்ற குழந்தை அக்கோவிலில் தன்னை நடத்திய தவறான விதத்தையும், அங்கிருந்த விரும்பத்தகாத சூழல்களையும் வெறுத்து அக்கோவிலை விட்டு எவருக்கும் தெரியாமல் வெளியேறினாள். வழியில் எதிர்ப்பட்ட ஒரு பெண்ணின் உதவியோடு ஏமிகார்மைக்கேலைச் சென்றடைந்தாள். சிறுமி லட்சுமி கோவிலில் நடைபெற்ற பாலியல் ரீதியான காரியங்களை மிகுந்த வேதனையோடு கூறி இனி தான், அங்கு செல்ல மாட்டேன் என்றும் கதறினாள். அக்குழந்தையை அன்போடு அரவணைத்துக் கொண்ட ஏமிகார்மைக்கேல் அவள் மூலம் கேள்விப்பட்ட விசயங்களால் வெகுண்டெழுந்தார்.
அதற்கு முன்பு இந்தியச் சமயச் சடங்கான தேவதாசி முறையைப் பற்றி மேலோட்டமாகவே கேள்விப்பட்டிருந்தாலும் இச்சம்பவத்திற்குப் பிறகே இதன் உண்மையான முகம் தெளிவாகத் தெரிந்தது. அன்றிலிருந்து லட்சுமி போன்ற எண்ணற்றக் குழந்தைகளை மீட்டெடுக்கவும் இத்தேவதாசி முறையின் உண்மை நிலையைச் சமூகத்திற்கு எடுத்துக் கூறி அனைத்துத் தரப்பு மக்களுக்குள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இம்முறையை இந்திய சமூகத்திலிருந்தே அகற்ற வேண்டும் என்றும் தீர்மானித்தார்.
இந்தியப் பெண்ணின் முதல் சமூகப் போராளி ஏமிகார்மைக்கேல்
கிறித்தவ சமயப்பணிக்கென்று இந்தியாவிற்கு வந்த பெண் மிஷனெரி ஏமிகார்மைக்கேல் விடுதலைக்காகப் போராடும் சமூகப் பணியைச் சிரமேற்கொண்டார். ஆணினத்தின் அடிமைகள் பெண்ணினம் என்ற இந்திய சமூக அமைப்பை மாற்றிடத் துணிந்தார். கண்ணெதிரே கட்டுண்டு, சீரழிந்த பெண்ணினத்தைக் கண்டு கொள்ளாமல் அவர்களிடையே கடவுள் நம்பிக்கையை மட்டும் ஊட்டிச்செல்வது வெறும் கண்மூடித்தனமான மடமை என்று எண்ணினார்.
தனது 16 வயதில் தனது நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் களைய தொழிலாளர்களாக இருந்த பெண்களுக்கு இரவுப் பள்ளிகள் ஏற்படுத்தி, தன்னார்வக் கல்வி புகட்டியவர். இந்தியாவில் கட்டமைக்கப்பட்டிருந்த ஜாதியமைப்பும், பெண்களுக்கு எதிரான கொடுமையான கொள்கைகளும், வியப்பையும், தன்னால் இயன்ற விடுதலையை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆழ்ந்த எண்ணத்தையும் அவருக்குள் ஏற்படுத்தியது.
முதலில் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளுக்கு எதிராக இச்சமூகத்தின் தாக்குதல்களை உணர்ந்து கொண்டு அத்தகைய பெண்களைச் சந்தித்து ஆறுதலையும், அன்பையும் வழங்கிப் பெண்கள் சமூகத்தால் அழிக்கப்படத்தக்கவர்கள் அல்ல என்ற ஆழ்ந்த விழிப்புணர்வைக் கிராமம் கிராமமாகச் சென்று ஏற்படுத்தினார். திக்கற்று நின்ற பெண்களுள் சிலர் இவரது கருத்துக்களால் திருப்தியாகி, இவரோடு இணைந்து அவரது சமூகப்பணியோடு தங்களையும் இணைத்துக் கொண்டனர்.
ஏமிகார்மைக்கேலால் பெண்களிடையே சமூகத்தில் ஏற்பட்ட இம்மறுமலர்ச்சி கலாச்சாரச் சீரழிவாகப் பார்க்கப்பட்டு எதிர்ப்பாளர்கள் ஒடுக்க முனைந்தனர். இவரது செயல்களும், எழுத்துக்களும் உண்மையற்ற விடயங்களோடு கோத்து சித்திரிக்கப்பட்டன.
இதனிடையே பெண்களை இழிவுபடுத்தி, சமயச்சாயம் பூசி தங்களது உடல்பசிக்கு உணவாக்கி ஏகபோகமாக வாழ்ந்து வந்த சில உயர் வகுப்பினர்களால் ஏற்படுத்தப்பட்ட ‘தேவதாசி’ முறை தான் அன்றைய தமிழ்நாட்டில் நிலவிய பெண்களுக்கு எதிரான விநோதமான வன்கொடுமையாக இருந்துவந்தது. இறைப் பணிக்கென்று கோவில்களில் பெண் பிள்ளைகளை அர்ப்பணிக்கும் நூதனப் பணிகளைச் செய்து வந்த இச்சமூகத்தின் கீழ்த்தரமான எண்ணத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.
சமயக் கொள்கைகளைக் கடவுளின் கட்டளை களாக ஏற்றுப் பின்பற்றும் சமூகத்தினரின் அறி யாமைகளைப் பயன்படுத்தி இத்தீமைகள் பகிரங்க மாகக் கோவில் வளாகங்களிலேயே அரங்கேறின.
இதனை எதிர்த்து முதல் முதலில் குரல் கொடுத்து அத்தீங்கிற்கு இலக்காக நின்று கொண்டிருந்த அப்பாவிப் பெண்களை மீட்கும் பணியில் இறங்கியவர் ஏமிகார்மைக்கேல் என்ற இவ்வீரப் பெண்மணிதான்.
முதல் பெண், பெண்ணியவாதி
ஆனால் தமிழ்நாட்டு வரலாற்றில் இவரது அளப்பரிய இச்சீர்திருத்தப் பணிகளைப் பற்றின குறிப்புகளே இல்லாமல் போயிற்று. இந்தியப் பெண் களுள் ஒரு சாராரின் வாழ்வில் வழிவழியாகத் தொடர்ந்து வந்த இருளை நீக்கி நிரந்தரமான ஒளியை ஏற்படுத்தப் போரா டிய ஏமிகார்மைக்கேல் அயல் நாட்டவரென்பதாலோ அல்லது குறிப்பிட்ட ஒரு சமயம் சார்ந்த பணிகளைச் செய்யும் நோக்கில் வந்தவரென்பதற்காகவோ என்னவோ இந்தியப் பெண்ணின விடுதலைப் போரில் முதன்மை யானவரான இவரை வரலாற்றுப் பக்கங்கள் புறந்தள்ளி விட்டன.
இந்தியாவில் 1960க்குப் பிறகே ‘‘பெண்ணியம்’’ பேசப்பட்டது. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே இப்பெண் புரட்சியாளரால் பெண்ணியம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது மறுக்கவியலாத உண்மை. பெண்ணை வெறும் நுகர்ச்சிப் பொருளாக மட்டுமே பயன்படுத்தி வந்த சமூகத்தில், ஆணின் ஆதிக்கச் செயல் களையும், பொய்யான சடங்காச்சாரங்களையும் தோலுரித்துக் காட்டியவர் ஏமிகார்மைக்கேல்.
கி.பி. 1901 முதல் ஒரு கால் நூற்றாண்டுக் காலம் வரையிலும், தமிழ்நாட்டில் வேறு எவரும் செய்யத் துணியாத பெண்களுக்கு எதிரான இச்சமூகக் கொடுமையை முற்றிலும் வேரறுக்கப் போராடினார். இவரது தீவிரமான இப்பணியின் தாக்கம் முழுத்தமிழ்நாட்டிலும் எதிரொலித்திருக்கின்றது; ஆனாலும் அதற்குக் காரணமான ஏமிகார்மைக்கேல் என்ற இப்பெண் கண்டு கொள்ளப்படவோ, அவருக்கு ஆதரவளிக்கப்பட்டு ஒத்துழைப்பு அளிக்கவோ ஆளில்லை.
சமய முத்திரைகள்
“இத்தேவதாசி முறை மூலம் சமய முத்திரையின் வாயிலாக வரைமுறையற்ற பாலுறவு புனிதமாக்கப்படுகிறது” என்பது பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் கூற்று. ஆனால் பெண்களுக்கு எதிரான அப்பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராடிய நபருக்கோ மற்றொரு சமய முத்திரையின் வாயிலாகப் புனிதமான அவரது இச்சமூகப்பணி நியாயமற்ற வகையில் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளமை சமூக அநீதியானது. ஏமிகார்மைக்கேலின் இத்தீவிர புரட்சிக்குப் பின்னர் அதாவது கி.பி 1925க்குப் பிறகே தமிழ்நாட்டில் தேவதாசிமுறை எதிர்ப்புப்போராட்டம் தீவிரமடைந்தது. திருமதி முத்துலெட்சுமி ரெட்டி, திருமதி இராமாமிர்தம் ஆகியோரின் தேவதாசி முறைக்கு எதிரான செயல்பாடுகள் சென்னை மாகாணத்தில் அனைவராலும் அறியப்பட்டு அரசியலாளர்களால் ஆராயப்பட்டது. தந்தை பெரியார் போன்ற சமூகப் போராளிகள் ஒரு சிலரின் ஆதரவால் அவர்களது எதிர்க்குரல் எதிர்ப்புகளை வீழ்த்தும் அளவு திடனடைந்து வெற்றிக்கு நேராக இழுத்துச் சென்றது. இவர்களது முயற்சிகளும், போராட்டங்களும் வெற்றிபெற்று 1947இல் நிரந்தரத் தீர்வையடைய மற்றுமொரு கால் நூற்றாண்டைக் காலம் எடுத்துக் கொண்டது. ஆக, கிட்டத்தட்ட அய்ம்பதாண்டுக் கால ஒட்டுமொத்தப் போராட்டத்தில் முதல் பாதி ஏமிகார்மைக்கேலின் ஒற்றையாள் (தனியாள்) போராட்டமே என்றால் அது மிகையாகாது.
ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியர்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைகளில் தலையிடுதலைத் தவிர்க்கும் படியான உத்தரவு களையே தலைமை யிடத்திலிருந்து ஆட்சியாளர்கள் பெற்றிருந்தனர்; ஆனாலும் ஏமிகார்மைக்கேலின் தன்னலமற்ற இச்சமூகப் பணியை இந்திய அரசு கவனித்துக் கொண்டேதானிருந்தது. ஆங்கில அரசு தலை யிட்டுச் செய்ய இயலாத இச்சிக்கலான அரிய பணியைத் தனியொரு பெண் தலைமையேற்று முழு மூச்சுடன் செய்து வருவதை அன்றைய அரசு அங்கீகரிக்க முன்வந்தது.
மறைக்கப்பட்ட அங்கீகாரம்
கி. பி. ‘1919-இல் சென்னை ஆளுநராகவிருந்த லார்ட் பென்ட்லான்டிடமிருந்து ஏமிகார்மைக்கேலின் சேவையைப் பாராட்டி அவருக்கு கைசர் ஹிந்த் என்னும் பதக்கம் அளிக்கப்பட்டது.’ இது கி.பி. 1900 மற்றும் 1947க்கு இடையில் ஆங்கிலேய அரசால் இனம், பதவி, தொழில் மற்றும் பாலின வேறுபாடு பாராமல் செய்யப்பட்ட பொது சேவைகளைப் பாராட்டி சரியான நபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மிக உயர்ந்த பதக்கம். ஆனால் இந்த வரலாற்றுச் சம்பவம் எதுவுமே தேவதாசி முறையைப் பின்னாட்களில் ஆய்வு செய்த ஆய்வாளர்களோ வரலாற்றாசிரியர்களோ தங்களது நூல்களில் குறிப்பிடவில்லை என்பதே வேதனையான உண்மை!
தமிழ்நாட்டில் தேவதாசி முறையை ஆழமான வரலாற் றாய்வு செய்து ‘மத்திய காலத்திய தமிழ்நாட்டில் தேவதாசி முறை’ என்ற தலைப்பில் ஆங்கி லத்திலும் (1993). தமிழில் ‘தமிழகத்தில் தேவதாசிகள்’ (2013) என்ற தலைப்பிலும் முனைவர் கே.சதாசிவன் பதிப்பித்துள்ளார். அவரும் தனது அந்நூலில் ஏமிகார்மைக்கேலின் பணிகளைப் பற்றின எந்த விவரமும் தரவில்லை; ஆயினும் இவர் அதன் பின்னர் ஏமிகார் மைக்கேலின் அரும்பணியினை அறிந்து, கி.பி 2012ஆம் ஆண்டு வெளியான ‘From the fathoms to the front, Lesser known Facets of social reform in South India’ என்ற நூலின் D.Amy Carmichael A Lesser – Known Protestant Missionary Socio – Religious Reformer of the Tirunelveli Region என்ற தலைப்பில் மறக்கப்பட்ட இவ்வரலாற்று உண்மைகளை நீண்டதொரு கட்டுரையாக எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தியாகச் செம்மல்
கி.பி. 1895இல் சமயப்பணியாளராக இந்தியா வந்த இவரது பணிகள் அவரே சற்றும் எதிர்பாராததொரு சமூகப்பணியாக மாறிவிட்ட நிலையில் தான் மீட்டெடுத்தவர்களை விட்டுத் தனது நாட்டிற்கு ஒருமுறை கூடச் செல்லாதவர் இந்தியாவைத் தனது சொந்த நாடாகக் கருதி இந்திய மக்களை ஜாதி, மத பேதம் பாராமல் தனது இறுதி மூச்சு வரை நேசித்தவர். தனது வாழ்க்கை முறையை இந்திய மக்களோடு மக்களாக வாழ விரும்பி மாற்றிக்கொண்டவர். அன்றைய வெளிநாட்டு மிஷனெரிமார்கள் இருபாலருமே தங்கள் நாட்டு வாழ்வியல் முறைகளையே பெரும்பாலும் பின்பற்றி வாழ்ந்தனர். ஆனால் ஏமிகார்மைக்கேல் இந்தியப் பெண்களைப் போன்றே புடவை அணிந்து எப்போதும் உதவிக்காகவோ, பிற தேவைகளுக்காகவோ தன்னை எவ்விதத் தயக்கமுமின்றி அணுகும் விதமாக எளிமையாக வாழ்ந்தார். அவரது கண்களின் பாவைகள் அய்ரோப்பியர்களைப் போன்று நீலநிறமாக இன்றி இந்தியர்களைப் போன்று கறுப்பாக இயற்கை அமைத்துவிட்டதைக் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டவர். அவரது அன்பும், இரக்கக்குணமும் இதயத்தில் எரிந்து கொண்டிருந்த விடுதலை வேட்கையோடு இணைந்து அவரை ஒரு பெருந் தியாகச் செம்மலாக அடையாளப்படுத்தி நிற்கிறது காலம்; ஆனால் வரலாற்றுலகமோ அதைக் கண்டு கொள்ள மறுத்து, அவரது பெயரையும் பணிகளையும் இருட்டடிப்புச் செய்யும் மனப்போக்கில் இன்றும் உறுதியாய் இருக்கிறது.
என்றைக்கோ சமூகத்தால் திக்கற்றோர்களாய், தேவதாசியர் என்ற போர்வைக்குள் பொதுமகளிராய் அழிந்து புதையுண்டு போயிருக்க வேண்டிய ஒரு கூட்டப் பெண்ணினத்தை மீட்டு வாழ்வித்தார்.
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தேவதாசிமுறை என்ற சமயச்சடங்கினை எதிர்த்த இந்தியப் பெண்களான முத்துலட்சுமி ரெட்டி, இராமாமிர்தம் ஆகிய இருவரது முயற்சிகளுக்கு சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஏமிகார்மைக்கேல் என்ற ஒரு பெண் தன்னோடு இணைந்துகொண்ட ஆதரவற்ற இந்தியப் பெண்கள் சிலரின் உதவியோடு ஜாதி, சமய வேறுபாடுகளின்றி, பெண் இனத்திற்கு எதிரான இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடினார். இப்பெண்ணின் அறிவார்ந்த இத்துணிச்சலே பின்நாட்களில் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிவாசல்களைத் திறந்து வைத்தது என்பதை விவரிக்கிறது இந்நூல்.
அவரது பணிகளுக்கு அவரது எழுத்துக்கள் மட்டுமல்ல அவரால் வளர்க்கப்பட்டவர்களுள் ஒரு சிலர் 100 வயதை எட்டும் நிலையில் அக்காப்பகத்தில் முதிர்ந்த நிலையில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
ஏமிகார்மைக்கேலின் ஆழ்ந்த அன்பைக் குறித்தே திரும்பத் திரும்பப் பேசும் அம்முதியவர்கள் அவரது பெயரைக் கூறுவதில்லை. ‘அம்மா’ என்ற பதத்தையே அடிக்கடி உச்சரித்து அவரோடான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அன்பே உருவானவரான ஏமிகார்மைக்கேல் தீமைகளுக்கு எதிராகச் செயல்படுவதில் மட்டும் வீரம் சுமந்த நெஞ்சும்,புரட்சி மிகுந்த நாவன்மையும் உடையவராகவே திகழ்ந்தார். 1931ஆம் ஆண்டு எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தில் அவரது கால் எலும்பு முறிந்து சிகிச்சைகள் பலனின்றி, படுக்கையிலேயே இருபது ஆண்டுகள் இருக்க வேண்டியதாயிற்று; ஆனாலும் அந்த இருபது ஆண்டுகளிலும் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய மொத்த நூல்கள் முப்பத்தெட்டு. அத்தோடு தனியொரு நிறுவனமாக இயங்கிய, தனது காப்பகத்தையும் அதுசார்ந்த அனைத்தையும் நிர்வகிப்பதும், வழிநடத்துவதுமாக முழு ஆற்றலோடும் இருந்தார்.
இறுதியாக, தனது 83ஆவது வயதில் 1951-ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். தன்னைக் கடவுளாக்கி விடக் கூடாதென்பதற்காகத் தனது மறைவிற்குப் பிறகு தனக்கு கல்லறை கட்டக் கூடாதென்று கண்டிப்புடன் கூறியிருந்தார். அதன்படியே அவரைப் புதைத்த இடத்தில் பறவைகள் நீர் அருந்தி நீராடிச் செல்லும் வகையில் ஒரு சிறு தொட்டி மட்டும் வைக்கப்பட்டுள்ளது.
(தொடரும்)