புதுடில்லி, மே 25- ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்யும் மனு மீது ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பி உள்ளது.
ஆன்லைனில் சட்ட விரோதமாக இயங்கும் சூதாட்ட செயலிகளை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 24 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில், ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்த 25 பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மீது தெலங்கானா மாநில காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்ட விரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய கோரிய மனு குறித்து பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது.
கல்வியில் சிறந்து விளங்கிய
22 தமிழ்நாட்டு மாணவர்கள் ஜெர்மனிக்கு கல்வி சுற்றுலா
சென்னை, மே 25–- கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய 22 மாணவர்கள் ஜெர்மனிக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: பள்ளி அளவில் கல்வி மற்றும் நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, 2022 – 2023ஆம் கல்வியாண்டில் 142 மாணவர்கள் ரூ.3 கோடியில் மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
மொத்தம் 24 பேர்
அதேபோல், 2023 – 2024ஆம் கல்வியாண்டில் 114 மாணவர்கள் சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவர்கள் தங்கள் பயணங்களில் இருந்து விரிவான அனுபவத்தையும், அறிவையும் பெற்றனர்.
தொடர்ந்து நடப்பாண்டில் 22 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர், அலுவலர் என மொத்தம் 24 பேர் ஜெர்மனிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இந்த சுற்றுலாவின்போது ஜெர்மனியில் உள்ள முனிச் பல்கலைக்கழகம், அருங்காட்சியகம், உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிடுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் புறப்பட்டனர்
இதற்கிடையே கல்விச் சுற்றுலாவுக்காக மாணவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று (24.5.2025) மாலை புறப்பட்டுச் சென்றனர். தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் நாளை (26.5.2025) ஜெர்மனிக்குப் புறப்பட்டு சென்று மாணவர்களுடன் இணைந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழடி ஆய்வறிக்கை
பா.ஜ.க. அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
சென்னை, மே 25- கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்தார்.
ஆனால் மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என மத்திய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.
இதனையடுத்து, கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று மத்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய தொல்லியல் துறையின் இந்த செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், “கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடியின் முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை இந்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்திருந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை.
கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று இந்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
கீழடி ஆய்வறிக்கை வேண்டுமென்றே தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்திய தொல்லியல் துறைக்கு வன்மையான கண்டனங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.