புதுடில்லி, மே24 டில்லி சட்டப் பேரவையில் வீர சாவர்க்கர் மற்றும் தயானந்த் சரஸ்வதி படம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு டில்லியின் எதிர்கட்சி யான ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சாவர்க்கர்
டில்லி சட்டமன்ற தலைவர் விஜேந்தர் குப்தா நேற்று (23.5.2025) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதில் அவர், வீர சாவர்க்கர், மகரிஷி தயானந்த சரஸ்வதி மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் படங்கள் விரைவில் டில்லி சட்டமன்ற வளாகத்தில் நிறுவப்படும் எனக் கூறினார். இதற்கான முடிவுகடந்த மே 21-இல் சட்டமன்றத் தலைவர் தலைமையில் நடைபெற்ற பொது நோக்கக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதில், இந்த மூன்று படங்களில் இடம்பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுதந்திரப் போராட்டத்திற்கு வீர சாவர்க்கரும், சமூக சீர்திருத்தத்திற்கு தயானந்த் சரஸ்வதி மற்றும் கல்வியின் பங்களிப்பை பனராஸ் இந்து பல்கலை கழகத்தின் நிறுவனரான மதன் மோகன் மாளவியா என்ற பங்களிப்புகளில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை எதிர்கால சந்ததியினருக்கு தேசபக்தி, சேவை மற்றும் ஜனநாயக விழுமியங்களை ஊக்குவிக்கும் என சட்டமன்ற தலைவர் விஜயேந்திர குப்தா தெரிவித்துள்ளார். இதற்கு டில்லி சட்டமன்றத்தின் முக்கிய எதிர்கட்சியான ஆம் ஆத்மி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான குல்தீப் குமார் கூறும்போது, ‘‘நாம் பரிந்துரைத்த மாதா சாவித்ரிபாய் பூலேவின் படம் நிராகரிக்கப்பட்டது. இதற்கு முன்பே பாஜகவினர் சட்டப் பேரவையில் இருந்த பாபா சாகேப் அம்பேத்கரின் படத்தை அகற்றிவிட்டனர். இது, அவர்கள் எப்போதும் சிறந்த ஆளுமைகளை அவமதிக்கும் மனப் பான்மையைக் கொண்டவர்கள் என்பதைக் காட்டுகிறது’’ எனக் கூறினார்.
மேனாள் டில்லி முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி தனது ‘எக்ஸ்’ பதிவில், ’பாஜக பெண்களுக்கு எதிரானது, கல்விக்கு எதிரானது மற்றும் தாழ்த்தப்பட்டோர்களுக்கு எதிரானது. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவை பாஜக வேண்டுமென்றே நிராகரித்தது’ எனத் தெரிவித்தார்.